Sunday, November 19, 2023

உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், அவனும் நிறைவு பெறுவான். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். (மத்.25:29)

உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், அவனும் நிறைவு பெறுவான். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். (மத்.25:29)


கடவுள் நம்மைப் படைக்கும் போது 
பரிபூரண சுதந்திரத்தோடும், ஆன்மீகத் திறமைகளோடும் (Talents)படைத்தார்.

திறமைகள் பயன்படுத்துவதற்கு.
சுதந்திரம் அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு.

திறமைகளைக் கொடுத்திருப்பது கடவுள்.

ஆகவே அவற்றை கடவுளின் விருப்பப்படி தான் செயல்படுத்த வேண்டும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

ஒரு கடை உரிமையாளர் அங்கு பணிபுரியும் பையனுக்கு சுதந்திரம் கொடுத்தால் அது கடையின் வியாபாரத்தை அதிகரிப்பதற்காகத்தான் இருக்கும்.

ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் அது படிப்பதற்காக தான் இருக்கும்.

அதேபோல்தான் கடவுள் நமக்குத் தந்திருக்கும் திறமைகளை அவரது சித்தத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் பயன்படுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு கடவுள் நமக்குப் பேச்சுத் திறமையை தந்திருப்பதாக வைத்துக் கொள்வோம்.

நமது உள்ளத்தில் உதிக்கும் கருத்துக்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காகப் பேசுகிறோம்.

மற்றவர்கள் நமது கருத்துக்களை நமது உள்ளத்தில் உள்ளபடியே புரிந்து கொண்டு, அவற்றை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு பேசினால் நம்மிடம் பேச்சுத் திறமை இருக்கிறது.

திறமையைத் தந்தது கடவுள். பயன்படுத்துவது நாம்.

படிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட Study leave வை மாணவன் விளையாடுவதற்காகப் பயன்படுத்தினால் பாதிக்கப்படுவது மாணவன் தான்.

ஒருவன் கடவுள் கொடுத்த திறமையை அவருக்கு எதிராக பயன்படுத்தினால்
பாதிக்கப்படப் போவது அவன் தான்.

கடவுள் நமக்கு பேச்சுத்திறமையைத் தந்திருந்தால் அதை அவரது நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்க பயன்படுத்த வேண்டும்.

நமது திறமையைக் கடவுளது சித்தத்தை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தினால் திறமை அதிகரித்துக் கொண்டே போகும்.

எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதன் பலன் அதிகரிக்கும், திறமையின் அளவும் அதிகரிக்கும்.

பயன்படுத்தாமல் விட்டால் காலப்போக்கில் நமது திறமையை இழந்து விடுவோம்.

இறைவனுக்கு எதிராகப் பயன்படுத்தினால் பாவத்தின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

திறமைகளே இல்லாத மனிதர்களே கிடையாது.

ஏதாவது ஒரு திறமையோ அல்லது பல திறமைகளோ ஒவ்வொருவரிடமும் இருக்கும்.

திறமையின் அளவு கூடலாம் அல்லது குறையலாம்.

தங்களது திறமைகளை இறைவனுக்காகப் பயன்படுத்துகிறவர்களுக்கு அவை அதிகரித்துக் கொண்டே போகும்.

பயன்படுத்தாதவர்களுக்கு அவை இல்லாமல் போகும்.


பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, கேட்கும் திறமை, சிந்திக்கும் திறமை, மனதை ஒருநிலைப்படுத்தும் திறமை, செயல் திறமை என்று எண்ணிலடங்கா திறமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அமைதியாக இருப்பது கூட ஒரு திறமை தான்.

பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும், அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் அமைதியாக இருக்க வேண்டும்.

யாராவது நம்மைப் பற்றிக் கெடுத்துப் பேசினாலோ, நம்மிடம் வேண்டுமென்றே சண்டைக்கு வந்தாலோ நாம் அமைதியாக இருந்து விடுவது நலம்.

அறிஞர் பெருமக்கள் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருக்கும் அவையில் நாம் இருக்க நேரிட்டால் ஏதாவது பேசி நமது அறியாமையை வெளிப்படுத்துவதை விட அமைதியாக இருப்பது புத்திசாலித்தனம்.

ஒரு சமயம் பிரான்சிஸ் அசிசியார் தனது சகோதரர்களை நோக்கி,

"" வாருங்கள் நற்செய்தி அறிவித்து விட்டு வருவோம்" என்று அழைத்தார்.

அவருடன் சில சகோதரர்கள் தெருவில் இறங்கினார்கள்.

அவர் அக்கம் பக்கம் பாராமல் அமைதியாக நடந்தார். அவரைப் பின்பற்றி சகோதரர்களும் நடந்தனர்.

அப்படியே இல்லத்துக்கு வந்த பின் சகோதரர்கள் அவரை நோக்கி,

"""நற்செய்தி அறிவித்துவிட்டு வருவோம் என்று சொன்னீர்கள் ஆனால் நாம் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே!"

என்று கேட்டார்கள்.

'பிரான்சிஸ் அவர்களை நோக்கி,

""நாம் தெரு வழியே பராக்கு பார்க்காமல் அமைதியாக நடந்து வந்ததே மக்களுக்கு நாம் அறிவித்த ஒரு நற்செய்தி." என்றார்.


பேசித்தான் பிரசங்கம் வைக்க வேண்டும் எந்த அவசியமில்லை, நாம் அமைதியாக வைக்கும் பிரசங்கம் தான் அதிக சக்தி வாய்ந்தது.

நம்மை பார்ப்போர் நமது செயல்களைப் பார்த்தே பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்..

கடவுள் நமக்கு எவ்வளவு சிறிய திறமையைத் தந்திருந்தாலும் அதைச் சரியாகப் பயன்படுத்தி சாதனை படைப்போம்.

லூர்து செல்வம்.
"

No comments:

Post a Comment