Monday, November 13, 2023

அவன் ஒரு நாளில் ஏழு முறை உனக்கெதிராகக் குற்றம் செய்து, ஏழு முறையும் உன்னிடம் திரும்பி வந்து, "நான் மனம் வருந்துகிறேன்" என்றால், அவனை மன்னித்துவிடு" என்றார்.( லூக்.17:4)

அவன் ஒரு நாளில் ஏழு முறை உனக்கெதிராகக் குற்றம் செய்து, ஏழு முறையும் உன்னிடம் திரும்பி வந்து, "நான் மனம் வருந்துகிறேன்" என்றால், அவனை மன்னித்துவிடு" என்றார்.
( லூக்.17:4)

கடவுள் ஆன்மீக ரீதியாக மனிதனைத் தன் சாயலில் படைக்கும் போது அவர் பகிர்ந்து கொண்ட முக்கியமான பண்பு அன்பு.

அன்பு இருக்கும் இடத்தில் இரக்கமும், மன்னிக்கும் குணமும் இருக்கும்.

கடவுள் அளவில்லாத விதமாய் அன்பானவர்.

ஆகவே அவர் அளவில்லாத விதமாய் இரக்கம் உள்ளவர்.

ஆகவே அளவில்லாத விதமாய் மன்னிக்கும் தன்மை உள்ளவர்.

கடவுள் தன்னுடைய அன்பை மனிதரோடு பகிர்ந்து கொண்டதால், 

அவர்களும் கடவுளைப் போலவே இரக்கம் உள்ளவர்களாகவும்,

 மன்னிக்கும் குணம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

அப்பா மகனிடம் புத்தகம் வாங்க கொடுத்த பணத்தை தின்பதற்கு பண்டம் வாங்கும் பணமாக மகன் மாற்றுவது போல,

மனிதன் ஆன்மீக ரீதியாக தனது பிறனை நேசிப்பதற்காக கடவுள்  கொடுத்த அன்பை மனிதன் உடலியல் ரீதியாக நேசிக்க பயன்படுத்திக் கொள்கிறான்.

ஒரு ஆடவன் உடல் அழகாக இருக்கிறது என்பதற்காக ஒரு பெண்ணை காதலிக்கும் போது,

கடவுள் ஆன்மீக ரீதியாக கடவுளையும் அயலானையும் நேசிக்க அவனுக்குக் கொடுத்த அன்பை 

அவன் உடலியல் ரீதியாக நேசிக்கப் பயன்படுத்திக் கொள்கிறான்.

யாரை நேசித்தாலும் அது கடவுளின் மகிமைக்காக இருக்க வேண்டும்.

கடவுளை ஒதுக்கி விட்டு தனது உடல் இன்பத்திற்காக மட்டும் யாரையும் நேசிப்பது இறைவனது திட்டத்திற்கு எதிரானது.

உடலியல் ரீதியாக நேசிக்கும் அன்பில் ஆன்மீக ரீதியான இரக்கமும், மன்னிக்கும் குணமும் இருக்காது.

கடவுள் நம் மீது கொண்டுள்ள அன்பு அளவில்லாதது,

நம்மை அவர் மன்னிக்கும் குணமும் அளவில்லாதது.

மனிதன் கணக்கில்லா முறையில் ஒரே பாவத்தை எத்தனை முறை செய்தாலும் ஒவ்வொரு முறையும் அதற்காக வருந்தி மன்னிப்பு கேட்டால் ஒவ்வொரு முறையும் கடவுள் தாராளமாக மன்னிப்பார்.

மனிதன் பலகீனமானவன் என்பது கடவுளுக்குத் தெரியும்.

அவன் எத்தனை முறை பாவம் செய்வான் என்பதும் அவருக்குத் தெரியும்.

அவன் எத்தனை முறை பாவம் செய்தாலும் அவரது மன்னிக்கும் குணம் மாறாது.

நாம் செய்ய வேண்டியது மனம் வருந்தி மன்னிப்புக் கேட்பது மட்டும் தான்.

நாமும் அவரைப்போலவே நமது பிறன் நமக்கு விரோதமாக எத்தனை முறை குற்றம் செய்தாலும் அவன் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கும் போது நாம் அவனை மன்னிக்க வேண்டும்.

நாம் விண்ணக தந்தையிடம் ஜெபிக்கும் போதெல்லாம்,

"எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்" என்று சொல்கிறோம்.

அதாவது, 


எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுக்காதது போல எங்கள் பாவங்களைப் பொறுக்காதேயும்" என்று ஜெபிக்கிறோம்.

நமது ஜெபம் கேட்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறோம்.

நமது பிறன் நமக்கு விரோதமாகச் செய்த குற்றங்களை நாம் மன்னிக்காவிட்டால் நமது பாவங்களை மன்னிக்கும் படி கடவுளிடம் கேட்கும் உரிமை நமக்கு இல்லை.


உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.   (மத்.5:48)

என்று நமது ஆண்டவர் சொல்கிறார்.


"உங்கள் வானகத்தந்தை மன்னிக்கும் குணம் உடையவராய் இருப்பதுபோல, நீங்களும் மன்னிக்கும் குணம் உடையவராக இருங்கள்.''

என்ற பொருளும் அதில் அடங்கியிருக்கிறது.

விண்ணக தந்தையுடன் நித்திய காலம் பேரின்ப வாழ்வு வாழ வேண்டும் என்ற ஆசை நமக்கு இருந்தால்,

நமது பிறன் நம்மிடம் எத்தனை தடவைகள் மன்னிப்புக் கேட்டாலும் அத்தனை தடவைகளும் மன்னிப்புக் கொடுக்க வேண்டும்.

இது நமது தந்தையின் சித்தம்.

தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை.

 அளவு கடந்த விதமாய் நமது பிறரை மன்னிப்போம்.

நாமும் அளவு கடந்த விதமாய் இறைவனின் மன்னிப்பைப் பெறுவோம்.


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment