இயேசுவின் சீடனாக இருக்க வேண்டும் என்றால் அவரைப் போலவே நாமும் நமது சிலுவையைச் சுமக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று ஏற்கனவே ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.
இப்போது மற்றொரு நிபந்தனையை விதித்திருக்கிறார்.
நமது உடைமைகளையெல்லாம் துறக்க வேண்டும்.
சிறிது சிந்தித்துப் பார்த்தால் இரண்டு நிபந்தனைகளும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை.
தனது உடைமைகளையெல்லாம் துறக்க முடிந்தவனால்தான் தனது சிலுவையைச் சுமக்க முடியும்.
உடைமை என்றால் தனக்குச் சொந்தமானவை.
"இயேசுவில் இருந்த மனநிலையே உங்களிலும் இருப்பதாக.
கடவுள் தன்மையில் விளங்கிய அவர் கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை விடாமல் பிடித்துக்கொண்டிருக்க வேண்டிய தொன்றாகக் கருதவில்லை.
ஆனால், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,
தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்."
நமது ஆண்டவர் நம்மைச் செய்யச் சொல்லும் ஒவ்வொரு செயலுக்கும் முன் உதாரணமாக விளங்கினார்.
நாம் நமது சிலுவைகளை சுமக்க வேண்டும் என்று கூறிய ஆண்டவர் ஆவரே சிலுவையை சுமந்து வழிகாட்டினார்.
நமது உடைமைகளைத் துறக்க வேண்டும் என்று கூறிய ஆண்டவர் எவ்வாறு தனது உடைமைகளைத் துறந்தார்?
இயேசு பரிசுத்த தம திரித்துவத்தின் இரண்டாவது ஆளாகிய இறை மகன்.
முழுமையாகக் கடவுள்.
இறைத்தன்மை அவரது பிரிக்க முடியாத உடைமை.
துவக்கமின்மை, முடிவின்மை, துன்பப்பட முடியாமை ஆகியவை இறைத்தன்மையில் அவரது உடைமைகள்.
பிரிக்க முடியாதவற்றை எப்படி பிரித்து முன்னுதாரணம் காட்டினார்?
கடவுள் தன்மையை விட முடியாது.
ஆனாலும் நமக்காக அதை விட்டார்.
எப்படி?
கடவுள் தன்மை இல்லாத மனிதனாகப் பிறந்ததின் மூலம்.
இதற்காக துவக்கம் இல்லாத காலத்திலிருந்து கொண்டிருந்த இறைத்தன்மையோடு,
மனிதத்தன்மையையும் தனதாக்கிக் கொண்டார்.
ஆக இறை மகனுக்கு இரண்டு சுபாவங்கள்.
தேவசுபவம்.
மனித சுபாவம்.
தேவ சுபாவத்தில் அவருக்குத் துவக்கம் கிடையாது.
மனித சுபாவத்தில் அவருக்குத் துவக்கம் இருந்தது. 2023 ஆண்டுகளுக்கு முன் நமக்காக துவக்கம் உள்ள மனிதனாக கடவுள் பிறந்தார்.
தேவ சுபாவத்தில் அவருக்கு தந்தை மட்டுமே இருக்கிறார். தாய் கிடையாது.
மனித சுபாவத்தில் தாய் இருக்கிறாள், தந்தை கிடையாது.
நித்திய காலமாக தாய் இல்லாத கடவுள்,
நமக்காக ஒரு தாயை ஏற்றுக் கொள்கிறார்.
தேவ சுபாவத்தில் துன்பப்பட முடியாது.
துன்பப்பட.முடியாத கடவுள் துன்பப்படுவதற்காக மனித சுபாவத்தை ஏற்றுக் கொண்டார்.
தேவ சுவாவத்தில் மரணம் கிடையாது.
அவரால் படைக்கப்பட்ட மனிதர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய பாடுகள் பட்டு மரிப்பதற்காகவே அவர் மனிதனாகப் பிறந்தார்.
மரிக்க முடியாத கடவுள் நமக்காக மரித்தார் மனித சுபாவத்தில்.
இயேசுவில் இருந்த மனநிலையே நம்மிடமும் இருக்க வேண்டும்.
நம்மை படைக்கும் போது நமது ஆன்மாவும் சரீரமும் கடவுள் நமக்கு தந்த உடைமைகள்.
நமது மிக முக்கியமான உடைமையாகிய ஆன்மாவை முற்றிலும் இறைப் பணிக்கு அர்ப்பணித்து விட வேண்டும்.
அன்னை மரியாள் அதைத்தான் செய்தாள்.
"இதோ ஆண்டவருடைய அடிமை."
அடிமை முற்றிலும் முதலாளிக்கு மட்டும்தான் சொந்தம்.
தனது முழு மனதோடு தன்னை முற்றிலும் இறைவனுக்கு அடிமையாக அர்ப்பணித்து விட்டாள். அதன் பின் இறைவன் சித்தப்படி தான் நடந்தாள்.
நாமும் அதையே செய்தால்தான் நாம் அன்னை மரியாளின் உண்மையான பக்தர்கள்.
தங்கள் விண்ணப்பங்களை மட்டும் சமர்ப்பிப்பதற்காக அன்னை மரியாளின் திருத்தலங்களுக்கு அடிக்கடி செல்பவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல.
நமது ஆன்மாவை இறைவன் சேவைக்கு அர்ப்பணித்தபின், நமது உடலையும் இறைவனுக்கு அர்ப்பணித்து விட வேண்டும்.
இனி நமது உடல் நமக்குச் சொந்தம் அல்ல. இறைவனுக்கு மட்டுமே சொந்தம்.
நாம் சாப்பிடுவதற்காக உடல் நமக்குத் தரப்படவில்லை.
இறை பணிக்காக அர்ப்பணித்துவிட்ட உடலை அதே நோக்கத்தோடு பேணுவதற்காகவே சாப்பிடுகிறோம்.
சாப்பிடும் போது இறைவனுக்கு சொந்தமான உடலைப் பேணுகிறோம்.
தவக்காலங்களில் எப்போதெல்லாம் உடலைப் பட்டினி போட வேண்டும் என்று இறைவன் சொல்கிறாரோ அப்போதெல்லாம் பட்டினி போட வேண்டும்.
அதாவது நோன்பு இருக்க வேண்டும்.
இறைவன் சந்நிதானத்தில் நமது உடல் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்க வேண்டும்.
திவ்ய நற்கருணை நாதர் முன் நமது உடல் முழந்தாள்ப்படியிட வேண்டும்.
நம்மை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்த பின் நமது மற்ற உடைமைகளும் இறைவனுக்கே சொந்தம்.
சம்பளம் வாங்குவோர் அதன் ஒரு பகுதியை பிறர் சிநேகப் பணிக்காக ஒதுக்கி, அதற்காகவே செலவிட வேண்டும்.
நமக்கு ஒவ்வொரு நாளும் 24 மணி நேரம் தரப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் இறைவனுக்காகவே வாழ வேண்டும்.
அப்படியானால் நாம் சாப்பிடுவது, வேலை செய்வது, தூங்குவது போன்ற செயல்களை எப்போது செய்வது?
நாம் மூச்சு விடுவது உட்பட அனைத்துச் செயல்களையும் ஆண்டவருக்கே ஒப்புக் கொடுத்துவிட்டால் நாம் அவருக்காகவே வாழ்கிறோம்.
பிறர் சிநேகப் பணியும் இறைப் பணி தான்.
அயலானுக்குக் கொடுப்பவன் ஆண்டவருக்கு கொடுக்கிறான்.
தன்னைப் படைத்தவருக்காக தன் உடைமைகளை எல்லாம் இழப்பவன் அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வான்.
நாம் இழக்கக் கூடாத உடைமை இறைவன் மட்டுமே.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment