Thursday, November 9, 2023

ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தம்போன்றவர்களிடத்தில் மிக்க விவேகமுள்ளவர்களாய் இருக்கின்றனர்.(லூக்.16:8)

ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தம்போன்றவர்களிடத்தில் மிக்க விவேகமுள்ளவர்களாய் இருக்கின்றனர்.
(லூக்.16:8)

ஒரு தந்தைக்கு மூன்று பிள்ளைகள்.

மூவரும் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் அவர்களை அழைத்து

 ஆளுக்கு ஒரு லட்சம் ரூபாயை கையில் கொடுத்து

 இதை வைத்து என்ன தொழில் வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.

எவ்வளவு லாபம் வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளுங்கள்.

நான் இறந்தவுடன் ஆளுக்கு ஒரு லட்சம் ரூபாயை எனது சவப்பெட்டியில் வைத்து அதோடு அடக்கம் செய்ய வேண்டும்."

என்று தன் ஆசையைத் தெரிவித்தார்.

மூவரில் மூத்தவன் அந்த பணத்தைக் கொண்டு MBBS படிப்பு படித்து, மருத்துவராகத் தொழில் புரிந்தான்.

இரண்டாவது மகன் அந்த பணத்தைக் கொண்டு ஒரு பல சரக்குக் கடை வைத்து வியாபாரம் செய்தான்.

மூன்றாவது மகன் சட்டம் படித்து, வக்கீலாகப் பணி புரிந்தான்.

மூவருக்குமே அவரவர் தொழிலில் நல்ல வருமானம்.

ஒரு நாள் தகப்பனார் இறந்து விட்டார்.

மருத்துவராக பணிபுரிந்த முதல் மகன் தனது வருமானத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாயை எடுத்து 500 ரூபாய்க் கட்டுகளாக சவப்பெட்டியில் வைத்தான்.

இரண்டாவது மகனும் அப்படியே செய்தான்.

மூன்றாவது மகன் ஒரு வங்கிக் காசோலை எடுத்து, அப்பாவின் பெயருக்கு மூன்று லட்ச ரூபாய் எழுதி

 காசோலையைச் சவப்பெட்டியில் வைத்துவிட்டு 

முதல் இரு மக்களும் வைத்த இரண்டு லட்சம் ரூபாயையும் கையில் எடுத்துக் கொண்டான்.

அவன் செய்தது தவறு.

ஆனாலும் அதற்கு ஆலோசனை கொடுத்த அவனது மூளையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

நண்பர் ஒருவர் அவரிடம் கேட்டார்,

"உன்னுடைய அப்பா காசோலையை மாற்ற முடியாது எனத் தெரிந்தும் நீ அதை வைத்தது தவறு இல்லையா?" என்று கேட்டார்.

அதற்கு அவன் பதிலாக, "எனது அண்ணன்மார் வைத்த பணத்தை மட்டும் அவரால் செலவழிக்க முடியுமா?

அவர்கள் வைத்ததும் பேப்பர். நான் வைத்ததும் பேப்பர்.

ஆனால் எனது அப்பா கொடுத்த பணத்தைக் கொண்டு நான் 2 லட்சம் ரூபாய் அதிகமாகச் சம்பாதித்திருக்கிறேன்.

என்னைப் பாராட்டுவதை விட்டுவிட்டு குறை சொல்கிறீர்கள்!" என்றான்.

இப்படித்தான் அநேகர் தங்களது புத்தியைத் தவறாகப் பயன்படுத்தி உலகியல் ரீதியாக லாபம் ஈட்டுகிறார்கள்.


ஆனால் அனேக ஆன்மீகவாதிகளுக்குத் தங்கள் புத்தியை ஆன்மீக ரீதியாக சரிவரப் பயன்படுத்தத் தெரியவில்லை.

நான் சொல்ல வந்த கருத்தைப் புரிய வைப்பதற்காக கதையில் ஒரு சிறிய மாற்றம் செய்வோம்.

முதல் இரண்டு மக்களும் ஆன்மீகவாதிகள் என்றும், 

இளையவன் முதல் தர உலகியல்வாதி என்றும் வைத்துக் கொள்வோம்.

அப்பாவின் சவப்பெட்டியில் இரண்டு பேரும் இரண்டு லட்சம் ரூபாய் வைக்க வேண்டும்.

இறந்த தங்களது அப்பாவின் கையில் இரண்டு லட்சம் ரூபாயைச் சேர்ப்பிப்பதற்கு,

அவர்களுடைய ஆன்மீக ரீதியான மூளையைப் பயன்படுத்தி,

ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

என்ன முடிவு?

அப்பாவின் ஆன்மா உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போயிருக்கும்.

அங்கிருந்து அது மோட்சத்திற்குப் போவதற்கு உதவி செய்தால் அது அப்பாவுக்குச் செய்த உதவிதான்.

ஆகவே அப்பாவுக்குச் சொந்தமான அந்த இரண்டு லட்சம் ரூபாயைப் பயன்படுத்தி,

 அன்று அடக்கத்திற்கு வந்தவர்களில் ஏழைகளுக்கு இலவச உணவு பரிமாறி அந்த உதவியை அப்பாவின் ஆன்மீக இளைப்பாற்றிக்காக ஒப்புக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் உலகைச் சார்ந்த பணம் ஆன்மீக ரீதியாக அப்பாவுக்குப் பயன்படும்.

இப்படி செய்வதால் தாங்கள் கீழ்ப்படிதல் உள்ள பிள்ளைகள் என்று நிரூபிப்பதோடு, அப்பாவின் ஆன்மா மோட்சம் செல்ல பயன்படும்.

அது மட்டுமல்ல இளைய மகனின் திருட்டுப் புத்தியும் செயல்பட்டிருக்காது.

நடது ஆண்டவர் சொல்கிறார்,

"ஆகையால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: 

அநீத செல்வத்தைக்கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள். 

அது உங்களைக் கைவிடும்பொழுது, இவர்கள் உங்களை முடிவில்லாக் கூடாரங்களில் ஏற்றுக்கொள்வார்கள்."


நமது கையில் உள்ள பணம் அநீத செல்வமாக, அதாவது உலகைச் சார்ந்த பணமாக, இருக்கலாம்.

அதை ஆன்மீக ரீதியாக பயன்படுத்தி,

திருப்பலி நிறைவேற்றுவதின் மூலமாகவோ, தர்மம் கொடுப்பதன் மூலமாகவோ, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களை மோட்சத்திற்கு அனுப்பினால்,

அவர்கள் நமது ஆன்மீக நண்பர்களாக மாறி,

நமது விண்ணக பயணத்தில் நமக்கு உதவ இறைவனை வேண்டுவதோடு,

நாம் விண்ணகம் செல்லும் போது, விண்ணக வாசலில் நின்று நம்மை வரவேற்பார்கள்.

அவர்கள் மட்டுமில்லை நமது தர்ம செயல்களால் உதவி பெற்றவர்களும் நமக்காக இறைவனிடம் வேண்டுவார்கள்.

நாம் வாழ்ந்து கொண்டிருப்பது இந்த உலகில். வாழப் பயன்படுத்துவது இந்த உலகப் பொருள்களை.


உலகப் பொருள்களை நாம் பயன்படுத்தும் முறையை வைத்து நாம் ஆன்மீகவாதிகளா, உலகியல்வாதிகளா என்பது தீர்மானம் ஆகும்.

கையில் கத்தி இருக்கிறது.
அதை கொண்டு காய்கறி வெட்டலாம்,
கொலையும் செய்யலாம்.

கத்தியை நாம் பயன்படுத்தும் முறையை வைத்து நாம் சமையல்காரரா, கொலைகாரரா என்பது தீர்மானிக்கப்படும்.

கையில் உள்ள பணத்தைக் கொண்டு ஆடம்பரமாக வீடு கட்டி, சகல வித உலக வசதிகளோடு சிற்றின்ப வாழ்க்கை வாழலாம். உலகைச் சார்ந்த நண்பர்களையும் தேடிக் கொள்ளலாம்.

ஆனால் ஆடம்பர வாழ்வும், உலகியல் நட்பும் நமது மரணத்தோடு முடிவுக்கு வந்துவிடும்.

அல்லது,

 பணத்தை ஆன்மீகக் காரியங்களுக்காக பயன்படுத்தி, விண்ணகத்தில் நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளலாம்.

விண்ணக வாழ்வு நிரந்தரமாக நீடிக்கும்.

நமது அனுபவத்தில் உலகியல் வாதிகள் தங்கள் மூளையைப் பயன்படுத்துற அளவுக்கு ஆன்மீகவாதிகள் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.

ஆகவே தான் பாவ வாழ்க்கை வாழ்பவர்களை விட புண்ணிய வாழ்க்கை வாழ்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது.

இந்நிலை மாற வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.

ஆண்டவரது விருப்பத்தை நிறைவேற்றுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment