Friday, November 3, 2023

நீ விருந்து நடத்தும்போது ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், குருடர்கள் ஆகியோரைக் கூப்பிடு. ( லூக். 14:13)

நீ விருந்து நடத்தும்போது ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், குருடர்கள் ஆகியோரைக் கூப்பிடு. ( லூக். 14:13) 


நாம் நித்திய பேரின்ப மோட்சத்திற்குச் செல்ல வேண்டுமானால் நாம் அனுசரிக்க வேண்டிய கட்டளைகள் இரண்டு,

கடவுளை முழு உள்ளத்தோடும், முழு ஆன்மாவோடும் நேசிக்க வேண்டும்.

 நம்மை நேசிப்பது போல நமது பிறனை நேசிக்க வேண்டும்.

நமது பிறர் சினேகம் பிறர் அன்புச் செயல்களில் வெளிப்பட வேண்டும்.


பிறர் அன்புச் செயல்கள் இறைவனது அதிமிக மகிமைக்காகச் செய்யப்பட வேண்டும்.

சுய விளம்பரத்திற்காகவோ, பதில் உதவியை எதிர்பார்த்தோ செய்யப்படக்கூடாது,

பசி அமர்த்த ஒன்றும் இல்லாதவனுக்கு உணவு கொடுப்பது உதவி.

பசி அமர்த்த வசதி உள்ளவனுக்கு உணவு கொடுப்பது உதவி அல்ல.

ஒன்றும் இல்லாதவனுக்கு உணவு கொடுத்தால் அவனால் நமக்கு திரும்ப எதுவும் தர முடியாது.

உலகியல் படி நமது வீட்டில் நடைபெறும் ஏதாவது ஒரு விழாவிற்கு விருந்து கொடுத்தால் நாம் யாரை அழைக்கிறோம்?

உறவினர்கள், நண்பர்கள், உடன் பணி புரிபவர்கள் ஆகியோருக்கு அழைப்பு கொடுக்கிறோம்.

'அதிலும் நம்மை எப்போதாவது அவர்கள் வீட்டு விழாவிற்கு அழைத்தவர்களைப் பார்த்து அழைக்கிறோம்.

நம்மை அழைக்காதவர்களை நாமும் அழைப்பதில்லை.

அழைக்க ஏற்று செல்லும்போது ஏதாவது பரிசு கொடுப்பது வழக்கம்.

நாம் யார் வீட்டிற்காவது சென்று அவர்களுக்குப் பரிசு கொடுத்திருந்தால் அதைத் திரும்ப பெறுவதற்காக அவர்களை நமது வீட்டு விழாவிற்கு அழைக்கிறோம்.

இதுதான் ஆன்மீகம் கலவாத உலக வழக்கம்.

இதன்படி நாம் கொடுப்பதற்குப் பதில் கிடைத்து விடுகிறது.

ஆனால் நமது ஆண்டவர் சொல்கிறார்,

''நீ பகல் உணவிற்காவது இராவுணவிற்காவது, உன் நண்பர்களையோ சகோதரர்களையோ உறவினர்களையோ, செல்வரான அண்டை வீட்டாரையோ அழைக்காதே.

அவர்களும் உன்னைத் திரும்ப அழைக்கலாம். அப்போது உனக்குக் கைம்மாறு கிடைத்துவிடும்.


மாறாக, நீ விருந்து நடத்தும்போது ஏழைகள், ஊனர்கள், முடவர்கள்,
 குருடர்கள் ஆகியோரைக் கூப்பிடு.

நீதிமான்கள் உயிர்த்தெழும்போது உனக்குக் கைம்மாறு கிடைக்கும்" 

நாம் எதைச் செய்தாலும் அதை நம்மை படைத்தவர் தரக்கூடிய கைம்மாறு கருதியே செய்ய வேண்டும். அது ஆன்மீகம்.

உலகினர் தரக்கூடிய கைம்மாறு கருதி செய்தால் அது லௌகீகம்.

நாம் ஒரு நிமிடம் சிந்திப்போம்.

நாம் உண்மையான கிறிஸ்தவர்களானால் நமது ஆண்டவர் சொன்னபடிச் செய்வோம்.

அவர் செய்யக்கூடாது என்பதைச் செய்தால் நாம் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல.

தேவையானவர்களுக்கு உதவி செய்வோம்.

ஒன்றுமே இல்லாத ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் அது உதவி.

ஒரு கோடீஸ்வரனுக்கு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் அது உதவி அல்ல.

விண்ணப்பித்திருக்கிற வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதிக்கு லட்சக்கணக்காக பணம் கொடுப்பது லஞ்சம்.

லஞ்சம் கொடுப்பது பாவம்.

கடவுளின் மகிமைக்காக பிச்சைக்காரருக்கு ஒரு ரூபாய் கொடுப்பவருக்கு விண்ணகத்தில் சம்பாவனை காத்திருக்கும்.

நமது ஆண்டவர் விருப்பப்படி தேவைப்படுபவர்களுக்கு இறையன்பின் அடிப்படையில் உதவிகள் செய்வோம்.

நமக்காக நித்திய பேரின்ப வாழ்வு காத்திருக்கிறது.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment