Tuesday, November 7, 2023

அதனால் பரிசேயரும் மறைநூல் வல்லுநரும், "இவர் பாவிகளை வரவேற்கிறார். அவர்களோடு உண்கிறார்" என்று முணுமுணுத்தனர்.( லூக்.15:2)

அதனால் பரிசேயரும் மறைநூல் வல்லுநரும், "இவர் பாவிகளை வரவேற்கிறார். அவர்களோடு உண்கிறார்" என்று முணுமுணுத்தனர்.
( லூக்.15:2)

நமது முதல் பெற்றோர் செய்த மிகப்பெரிய செயல் நம் அனைவருக்கும் பாவிகள் என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது தான்.

அன்னை மரியாளைத் தவிர மனிதர்கள் அனைவரும் ஜென்மப் பாவத்துடன் தான் உற்பவித்துப் பிறந்தோம்.

மனுக்குலத்தைப் பாவத்திலிருந்து மீட்கவே இறை மகன் மனு மகனாய்ப் பிறந்தார்.

பாவிகள் இரு வகையினர்.

முதல் வகையினர் தாங்கள் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்பவர்கள்.

இரண்டாவது வகையினர் தாங்கள் காவிகளாக இருந்தும் தங்களைப் பரிசுத்தவான்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள்.

இயேசு வாழ்ந்த காலத்தில் முதல் வகைப் பாவிகள் ஆண்டவருடைய நற்செய்தியைக் கேட்டு அதன்படி வாழ்வதற்காக அவர் சென்ற இடமெல்லாம் அவரோடு சென்றார்கள்.

 இயேசுவும் அவர்களோடு நெருங்கிப் பழகினார்.

இரண்டாம் வகையைச் சேர்ந்த பரிசேயர்களுக்கும், 
சதுசேயர்களுக்கும், 
மறை நூல் அறிஞர்களுக்கும்,
யூத மத குருக்களுக்கும்
 இது பிடிக்கவில்லை.

பாவிகளோடு இயேசு பழகுவதை அனுமதித்தால் அவர்கள் மேல் தங்களுக்கிருந்த அதிகாரம் பறிபோய் விடுமோ என்ற பயம் தான் அதற்குக் காரணம்.

தங்கள் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் அவர்கள் இயேசுவை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.

அந்த நோக்கத்தோடு அவரிடம் குறை காண்பதற்காகவே அவர்கள் அவரைப் பின் சென்றார்கள்.

அனைவரையும் பாவத்திலிருந்து மீட்கவே இயேசு பிறந்தார்.

நோயாளி தனது நோயிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்றால் முதலில் தான் நோயாளி என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தான் நோயாளி என்பதை ஏற்றுக் கொள்ளாதவன் குணம் பெரும்பொருட்டு மருத்துவரை அணுக மாட்டான்.

இயேசு மனித குலத்திற்கு ஆன்மீக மருத்துவர்.

தங்களது பாவங்களை ஏற்றுக் கொண்டு அவற்றிலிருந்து விடுதலை பெறும் நோக்கோடு இயேசுவை அணுகுபவர்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற்று மீட்பு அடைவார்கள்.

பாவிகளாக இருந்தும் தங்களை பரிசுத்தவான்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் மீட்பின் பயனை அடைய மாட்டார்கள்.

பரிசேயர்களிடமிருந்தும், ஆயக்காரர்களிடமிருந்தும் நாம் ஒரு ஆன்மீகப் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்காகத்தான் அவர்களைப் பற்றிய விவரங்கள் நற்செய்தி நூல்கள் மூலம் நமக்கு தரப்பட்டுள்ளன.

மனிதர்களைப் பாவங்களிலிருந்து மீட்பதற்காகவே மனிதனாகப் பிறந்த இயேசு 

ஜென்மப் பாவத்திலிருந்து நம்மை மீட்க ஞானஸ்தானம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தையும்,

 கர்மப் பாவங்களிலிருந்து நம்மை மீட்பதற்காக பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.

நாம் குழந்தைகளாக இருக்கும்போது ஞானஸ்தானம் பெற்று ஜென்மப் பாவத்திலிருந்து விடுதலை பெற்று விட்டோம்.

கிறிஸ்தவர்களாக மாறிவிட்டோம்.

நாம் வளர்ந்த பின்பு செய்கின்ற பாவங்களிலிருந்து விடுதலை பெற பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தைப் பயன்படுத்திகிறோமா?

அல்லது பரிசேயர்களைப் போல நாம் பாவிகளாக இருந்தும் நம்மைப் பரிசுத்தவான்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோமா?

பாவிகளாகிய நம்மைத் தேடித்தான் இயேசு உலகிற்கு வந்தார்.

நாம் பாவங்களிடமிருந்து விடுதலை பெற வேண்டுமென்றால் நாம் இயேசுவைத் தேடிச் செல்ல வேண்டும்.

அதற்காகத்தான் தனது பிரதிநிதிகளாக குருக்களை நம்மிடம் இயேசு 
அனுப்பியுள்ளார்.

பள்ளிக்கூடங்களை நிர்வகிக்கவும், ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவும் குருக்கள் அனுப்பப்படவில்லை.

நமது பாவங்களை மன்னிக்கவும்,

 திரும்பவும் பாவத்தில் விழாமல் இருக்க வேண்டிய ஆன்மீக தைரியத்தைப் பெறவும்

 நமக்கு இயேசுவையே உணவாகத் தரவுமே குருக்கள் நம்மிடம் இருக்கிறார்கள்.

அதற்காகவே இயேசு பாவசங்கீர்த்தனம், திருப்பலி, திரு விருந்து ஆகியவற்றை இயேசு ஏற்படுத்தினார்.

திருமண அழைப்பை ஏற்று திருமண விழாவுக்குச் சென்றால்
'
அதற்குரிய பரிசு பொருளுடன் திருமணத் தம்பதிகளைப் பார்க்காமலும்,

திருமண விருந்தை சாப்பிடாமலும் திரும்புவோமா?

இயேசு அழைத்திருக்கும் ஆன்மீக திருமண விழாவிற்கு நாம் கொண்டு செல்ல வேண்டிய பரிசுப் பொருள் பரிசுத்தத்தனம்.
 
அந்தப் பரிசோடு இயேசுவை சந்தித்து,

அவரையே விருந்தாக அருந்தி விட்டுத்தான் வீட்டுக்குத் திரும்ப வேண்டும்..

அநேகர் பரிசுத்தத்தனமாகிய பரிசுப் பொருள் இல்லாமலேயே,

இயேசுவைச் சந்தித்து,

அவரை விருந்தாக அருந்தி விடுகிறார்கள்.

நமது பாவங்களை மன்னித்து பரிசுத்தர்களாக மாற்றவே இயேசு உலகிற்கு வந்தார்.

நாம் பரிசுத்தர்களாக மாறாவிட்டால், நாம் பார்க்கும் திருப்பலியாலும், அருந்தும் திரு விருந்தாலும் எந்தப் பயனும் இல்லை.

"ஆதலால், எவனாவது இந்த அப்பத்தைத் தகுதியின்றி உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால் ஆண்டவருடைய உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறான்.


28 ஆகவே, ஒவ்வொருவனும் தன்னுளத்தை ஆய்ந்தறிந்து, அதன் பின்னரே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருகட்டும்.

29 ஏனெனில், அது அவர் உடலென்று உணராமல் உண்டு பருகுபவன் தனக்குத் தீர்ப்பையே உண்டு பருகுகிறான்.
(1கொரி.11:27-29)


இயேசு பாவிகளாகிய நம்மை வரவேற்று தன்னையே நமக்கு உணவாகத் தருகிறார்.

பாவிகளாகிய நாம் பாவ சங்கீர்த்தனத்தின் மூலம் பாவத்திலிருந்து விடுதலை பெற்று,

பரிசுத்தமான உள்ளத்தோடு அவரை உணவாக உண்போம்.

"என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்.

 நானும் அவனைக் கடைசி நாளில் உயிர்ப்பிப்பேன்.

55 என் தசை மெய்யான உணவு, என் இரத்தம் மெய்யான பானம். 

56 என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்."
(அரு. 6:54-56)

பரிசுத்தமான உள்ளத்தோடு 
பரிசுத்தரை உணவாக உண்டு, 
பரலோக சாம்ராஜ்யத்தில் 
அவரோடு என்றென்றும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment