தந்தையின் இல்லத்தை வாணிபக்கூடமாக்க வேண்டாம்"
(அரு. 2:16)
சப்பரப் பவனியில் சப்பரத்தின் பின்னால் செல்பவர்களுக்கு இப்போது சொல்லப்போவது புரியும்.
சப்பரத்தில் வரும் சுரூபம் எந்த புனிதரைக் குறிக்கிறதோ அவருக்கு உப்பையும் மிளகையும் கலந்து காணிக்கையாக போடுவது வழக்கம்.
'
சிலர் போடப்பட்ட உப்பு மிளகை அள்ளி வீட்டுக்குக் கொண்டு வருவது வழக்கம்.
போடப்பட்ட உப்பு மிளகு புனிதருக்கான காணிக்கை.
காணிக்கையாக எதைப் போட்டாலும் அது நல்ல செயல்.
காணிக்கை போட வேண்டிய உப்பு மிளகை விற்பதற்கென்று சிலர் சப்பரத்தின் பின்னால் வருவார்கள்.
அவர்களின் நோக்கம் வியாபாரம்.
வியாபாரம் லாபம் ஈட்டுவதற்காக செய்யப்படுகிற ஒரு செயல்.
லாபம் ஈட்டுவதில் புனிதம் எதுவும் இல்லை.
ஜெருசலேம் ஆலயத்தின் முன்பும் இதே மாதிரியான ஒரு வியாபாரம் நடைபெற்றதை இயேசு பார்த்தார்.
கோயிலிலே ஆடு, மாடு, புறா விற்பவர்களையும், அங்கே உட்கார்ந்திருந்த நாணயமாற்றுவோரையும் கண்டார்.
கோவில் இறைவனை வழிபடுவதற்காக மட்டும் கட்டப்பட்ட ஆலயம்.
அங்கே நடைபெற வேண்டியது இறை வழிபாடு மட்டுமே.
இறை வழிபாடு நடைபெற வேண்டிய இடத்தில் வியாபார நோக்கில் நடைபெற்ற விற்பனையை இயேசு விரும்பவில்லை.
ஆகவே அப்போது கயிறுகளால் சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோயிலிலிருந்து துரத்தினார்.
ஆடு மாடுகளையும் விரட்டிவிட்டார்.
நாணயமாற்றுவோரின் காசுகளை வீசியெறிந்து,
பலகைகளையும் கவிழ்த்துப்போட்டார்.
இறைவனின் இல்லம் வியாபாரக் கூடமாக மாறுவதை அவர் விரும்பவில்லை.
உலக ரீதியான ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
திருமண விழாவுக்கு அழைக்கப்பட்ட ஒருவர் புதுமணத் தம்பதிகளுக்கு பரிசு வாங்க கையில் பணம் இல்லாததால் பக்கத்து வீட்டுக்காரரிடம் வட்டிக்குக் கடன் வாங்குகிறார்.
இதில் நமக்கு ஆட்சேபனை ஏதுமில்லை.
ஆனால் புதுமண தம்பதிகளுக்கு வரவேற்பு நடந்து கொண்டிருக்கும் மண்டபத்துக்கு உள்ளேயே யாராவது ஒருவர்,
"வட்டிக்கு பணம் கிடைக்கும்" என்று கூவி,
வட்டித் தொழில் புரிவதை யாராவது அனுமதிப்பார்களா?
திருமண மண்டபத்தில் நடைபெற வேண்டியது புதுமணத் தம்பதிகளுக்கு வரவேற்பும், விழாவுக்கு வந்தவர்களை மகிழ்விக்கும் வகையில் நடைபெறும் விருந்தும் தான்.
அதேபோல்தான் கோவிலில் நடைபெற வேண்டியது இறை வழிபாடு மட்டுமே, வியாபாரம் அல்ல.
"தந்தையின் இல்லத்தை வாணிபக்கூடமாக்க வேண்டாம்"
என்ற இறை வசனத்தை நமது வாழ்வின் அடிப்படையில் தியானித்துப் பார்ப்போம்.
"உங்களுடைய உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா? " (1கொரி 6:19)
நமது உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம், என்பது இறைவாக்கு.
நாம் வாழும் இல்லத்தை எவ்வளவு சுத்தமாகவும் அழகாகவும் கவர்ச்சிகரமாகவும் வைத்துக் கொள்கிறோம்!
நமது உடலில் உள்ள பரிசுத்த ஆவி வாழும் இல்லத்தை நாம் எவ்வாறு வைத்துக் கொள்கிறோம்?
நமது உடலில் குடியிருக்கும் நமது ஆன்மா தான் பரிசுத்த ஆவியின் இல்லம்.
பரிசுத்த ஆவியின் இல்லம் என்றாலும், இறை மகனின் இல்லம் என்றாலும், தந்தையின் இல்லம் என்றாலும் ஒரே இல்லம் தான்.
ஏனெனில் மூவரும் ஒரே கடவுள் தான்.
கடவுள் வாழும் இல்லமாகிய நமது ஆன்மா எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்க ஒரு் குட்டிக் கதை.
ஒரு பணக்காரத் தந்தைக்கு இரண்டு மக்கள் இருந்தார்கள்.
அவர் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து மிகுதியான சொத்து சேர்த்து வைத்திருந்தார்.
ஏராளமான நில புலனங்கள் இருந்தன.
அவருடைய வங்கிக் கணக்கில் லட்சக்கணக்காக ரூபாய்கள் இருந்தன.
உலக வழக்கப்படி அவருடைய காலத்திற்குப் பிறகு அவருடைய சொத்துக்கள் அவருடைய இரண்டு பிள்ளைகளுக்கும் போய்ச் சேர வேண்டும்.
ஆனால் அவர் வேறு மாதிரி நினைத்தார்.
தான் கஷ்டப்பட்டு நேர்மையாகச் சம்பாதித்த சொத்துக்களைக் காப்பாற்றி,
இன்னும் கஷ்டப்பட்டு உழைத்து அவற்றை அதிகப்படுத்தத் தகுதியுள்ள மகனுக்கே
அவற்றைத் தனது காலத்துக்குப் பின் சொந்தமாக வேண்டும் என்று நினைத்தார்.
தகுதி உள்ள மகன் யார் என்று கண்டுபிடிக்க அவர் இருவருக்கும் ஒரு சோதனை வைத்தார்.
"உங்களுக்கு ஆளுக்கு ஒரு வீடு தருவேன்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை உங்களுடைய வீடுகளுக்கு வருவேன்.
யாருடைய வீட்டில் வீடு நிறைய பொருட்கள் இருக்கின்றனவோ
அவன்தான் என்னுடைய எல்லா சொத்துகளுக்கும் வாரிசு"
என்று அவர்களிடம் சொன்னார்.
அவர் சொன்னபடி மறு ஞாயிற்றுக்கிழமை காலையில் முதலில் மூத்த மகன் வீட்டுக்குச் சென்றார்.
மூத்த மகன் வாசலில் நின்று கொண்டிருந்தான்.
"கதவை திற. உள்ளே போவோம்."
''அப்பா, நீங்கள் கூறியபடி வீடு நிறைய பொருட்கள் வாங்கி வைத்து விட்டேன். வீடு நிறைந்திருப்பதால் நம்மால் உள்ளே போக முடியாது.''
",பரவாயில்லை, கதவைத் திற. உள்ளே போய்ப் பார்ப்போம்."
கதவை திறந்தான். அவன் சொன்னபடி உள்ளே நுழைய முடியவில்லை, ஏனென்றால் வீடு நிறைய வைக்கோல் கட்டுகளை வாங்கி அடுக்கி வைத்திருந்தான்.
"வீடு நிறைய வைக்கோலை வைத்து இருக்கிறேன். உங்கள் சொத்து எனக்கு தான் வர வேண்டும்."
அப்பா பதில் ஒன்னும் சொல்லவில்லை.
இளைய மகன் வீட்டுக்குச் சென்றார்.
வீடு திறந்திருந்தது.
வாசலில் நின்ற மகன், "வாருங்கள் அப்பா, வீட்டுக்குள் செல்வோம்"
ஊதுபத்தியின் ரம்யமான வாசனை அவர்களை வரவேற்க, ஒளிமயமான இல்லத்திற்குள் அவர்கள் நுழைந்தார்கள்.
மின் விளக்குகளின் ஒளி இல்லத்தை நிரப்பியிருந்தது.
சுவர் கலர் பேப்பர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வீட்டின் எல்லா அறைகளையும் சுற்றி காண்பித்த பின்
''வாருங்கள், அமர்வோம்.'' எனக்கூறி,
Dining table முன் உட்கார வைத்தான்.
தந்தைக்காக மேஜை மேல் காத்துக் கொண்டிருந்த அறுசுவை உணவையும் அவனே பரிமாறினான்.
தந்தையின் முகம் மலர்ந்தது.
தன் மகனின் ஒளிமயமான எதிர்காலத்தை எண்ணி மகிழ்ந்தார்.
தனது உடைமைகள் அனைத்துக்கும் எனது இளைய மகனையே வாரிசாக்கினார்.
நமது ஆன்மாவாகிய தந்தையின் இல்லத்தை ஒளிமயமான புண்ணிய விளக்குகளால் அலங்கரித்திருக்கிறோமா?
பாவ வைக்கோலால் நிரப்பி வைத்திருக்கிறோமா?
சிந்தித்துப் பார்ப்போம்.
விண்ணக தந்தை பரிசுத்தர். அவர் தங்கும் இல்லமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
அவர் தங்கும் இல்லத்தில் அவருக்கு எதிரான எந்த விதமான எண்ணத்திற்கும் இடம் கொடுத்து விடக்கூடாது.
நமது ஆன்மாவும், அதில் அமைந்துள்ள இல்லமும் தந்தையின் ராஜ்ய எல்லைக்குள் இருக்க வேண்டும். அப்போதுதான் விண்ணகத் தந்தை அங்கே தங்குவார்.
விண்ணக தந்தையை நாம் எப்போதும் புகழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.
அவருடைய சித்தம் விண்ணகத்தில் செய்யப்படுவது போல நமது ஆன்மாவிலும் செய்யப்பட வேண்டும்.
அனுதினமும் நமது விண்ணகத் தந்தை தரும் உணவையே உண்ண வேண்டும்.
நம்மைப் போலவே நமது அயலானும் நமது தந்தையின் பிள்ளையே. நமது அயலான் நமக்கு விரோதமாக ஏதாவது குற்றம் செய்தால் நாம் அவனை மன்னித்து விட வேண்டும்.
நாம் பாவத்தில் விழ நேர்ந்தால் உடனடியாகத் தந்தையின் மன்னிப்பைக் கேட்டு பெற்று விட வேண்டும்.
விண்ணகத் தந்தை நமது ஆன்மாவில் உள்ள இல்லத்திலேயே தங்கியிருப்பதால் நமக்குப் பாவச் சோதனைகள் வரும்போது அவற்றிலிருந்து விடுதலை பெற அவரின் உதவியை கேட்டுப் பெற வேண்டும்.
நமது விண்ணகத் தந்தையோடு எப்போதும் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும்.
அவரோடு பேசிக் கொண்டிருந்தால் எந்தத் தீமையும் நம்மை அணுகாது.
சர்வ வல்லமை வாய்ந்த விண்ணகத் தந்தை நம் இல்லத்தில் எப்போதும் இருக்கும் போது நாம் வேறு யாருக்கும் எதற்கும் பயப்பட வேண்டிய தேவை இல்லை.
தந்தையின் இல்லத்தை வாணிபக்கூடமாக்க வேண்டாம் என்ற நமது ஆண்டவரின் அறிவுரைக்கு ஏற்ப,
அதை அருள் வள வாழ்வுக்கு மட்டும் பயன்படுத்துவோம்.
இவ்வுலகில் நமது வாழ்வு முடிந்தவுடன் விண்ணகத் தந்தையின் மோட்ச இல்லத்தில் அவரோடு நித்திய காலம் பேரின்ப வாழ்வு வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment