( லூக்.19:5)
சக்கேயு தலைமை ஆயக்காரன், பெரிய பணக்காரன்.
ஆயக்காரன் என்றால் வரி வசூலிப்பவன்.
யூதர்களிடம் வரி வசூலித்து, வரிப்பணத்தை ரோமை அரசுக்கு செலுத்துபவன்.
வரி வசூதிப்பவர்கள் யூதர்களால் பாவிகள் என கருதப்பட்டார்கள்.
மனிதர்கள் அனைவருமே பாவிகள் தான்.
பாவிகளைத் தேடித்தான் இயேசு உலகிற்கு வந்தார்.
இயேசு யெரிக்கோ வழியாக பயணித்துக் கொண்டிருந்தபோது சக்கேயு அவரைப் பார்க்க ஆசைப்பட்டான்.
ஆனால் அவன் குள்ளமாக இருந்ததால் கூட்டத்தில் அவரால் அவரைப் பார்க்க முடியவில்லை.
அவரைக் காணும்பொருட்டு முன்னே ஓடி ஒருகாட்டு அத்திமரத்தில் ஏறிக்கொண்டான்.
இயேசு அந்த இடத்திற்கு வந்தபோது, ஏறெடுத்து அவனை நோக்கி, "சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்" என்றார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
சக்கேயு இயேசுவைப் பார்க்க ஆசைப்படும் முன்பே இயேசு அவனைப் பார்க்க ஆசைப்பட்டு விட்டார்.
இயேசுவின் ஆசை நித்தியமானது.
யெரிக்கோ வழியாக செல்லும் போது சகேயுவைப் பார்க்க வேண்டும்,
அவனது வீட்டில் வந்து அன்று தங்க வேண்டும் என்று அவர் நித்திய காலத்திலிருந்தே திட்டமிட்டு விட்டார்.
அந்தத் திட்டப்படி சக்கேயுவின் மனதில் அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டி விட்டவரும் அவரே.
அவன் அந்தத் தூண்டுதலை ஏற்றுக் கொண்டான்.
இறைவனின் தூண்டுதலை (Inspiration) ஏற்றுக் கொள்வது தான் மீட்புக்கு முதல் படி.
சக்கேயுவை அழைத்த இயேசு அவனோடு அவனது வீட்டுக்குச் சென்றார்.
இதைக் கண்ட அனைவரும், "பாவியோடு தங்குவதற்குப் போயிருக்கிறாரே" என்று முணுமுணுத்தனர்.
இயேசு அவர்களது முணுமுணுப்பைப்
பற்றி கவலைப்படவில்லை.
அவரது எண்ணம் ஒரு பாவியை மனம் திருப்புவதிலேயே இருந்தது.
அவரது எண்ணப்படி பாவியும் மனம் திரும்பி விட்டான்.
சக்கேயு இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, இதோ! என் உடைமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன்.
எவனையாவது ஏமாற்றி எதையாவது கவர்ந்திருந்தால், நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று ஆண்டவரிடம் சொன்னான்.
அதற்கு இயேசு, " இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று. இவனும் ஆபிரகாமின் மகன்தானே.
இழந்துபோனதைத் தேடி மீட்கவே மனுமகன் வந்துள்ளார்" என்றார்.
இயேசு பாவிகளைத் தேடி உலகிற்கு வந்த போது பாவிகளை மொத்தமாக பார்த்து விட்டுப் போக வரவில்லை.
அளவில்லாத ஞானமுள்ள அவர் மனதில் உலகில் உள்ள அத்தனை பாவிகளின் எண்ணமும் இருந்தது.
சக்கேயுவை அவர் தேடி வந்தது போல நம் ஒவ்வொருவரையும் தேடி வந்தார்.
சக்கேயுவை நோக்கி,
"சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்"
என்று சொன்னது போல நம் ஒவ்வொருவரையும் நோக்கிச் சொல்கிறார்.
சக்கேயு வெறுமனே இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று மட்டும் ஆசைப்படவில்லை.
அவரால் மீட்பு அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதனால்தான் அவர் பார்க்கும் படி அத்தி மரத்தின் மேல் ஏறிக்கொண்டான்.
அவர் அழைத்தவுடன் இறங்கி அவரது விருப்பப்படி தனது வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்றான். தனது மீட்பின் மீது உள்ள ஆவலை இயேசுவுக்குத் தெரிவித்தான்.
நித்திய காலத்திலிருந்தே உலகத்தில் உள்ள அத்தனை பாவிகளும் இயேசுவின் மனதில் தனித்தனியே உள்ளனர்.
உலக அரசு நாட்டு நன்மை கருதி திட்டம் போடும்போது நம் ஒவ்வொருவரையும் பற்றி தனித்தனியே நினைப்பதில்லை.
மக்கள் தொகையை மட்டும் கணக்கில் வைத்துக் கொண்டு திட்டம் போடுவார்கள்.
திட்டத்தினால் பயன்படாதவர்களைப் பற்றி அரசு கவலைப்படாது.
நாட்டின் பிரதமருக்கு ஜனத்தொகை பற்றிய புள்ளி விவரங்கள் தெரியும்.
ஆனால் ஒவ்வொரு குடிமகனையும் பற்றி எதுவும் தெரியாது.
ஆனால் கோடிக்கணக்கான மனிதர்களைப் படைத்த கடவுளுக்கு ஒவ்வொரு மனிதனைப் பற்றிய முழு விவரங்களும் நித்திய காலமாகவே தெரியும்.
ஒவ்வொருவரையும் தனித்தனியே அவரவர் தேவைகளுக்கு ஏற்ப கடவுள் வழி நடத்துகிறார்.
இந்த வரி எழுதும்போது அடுத்த வரி எதுவாக இருக்க வேண்டும் என்று மனதில் தூண்டுபவர் அவரே.
பாவிகளாகிய நாம் பாவத்திலிருந்து மனம் திரும்ப வேண்டும் என்று உள் தூண்டுதல் நம் உள்ளத்தில் உதிக்கும் போது அன்று சக்கேயு மனம் திரும்பியது போல நாமும் மனம் திரும்ப வேண்டும்.
அன்று சக்கேயுவிடம் சொன்னது போல நம்மிடமும் ஆண்டவர் சொல்கிறார்,
"மகனே, பாவ நிலையிலிருந்து இறங்கி வா. நான் உன் உள்ளத்தில் தங்க வேண்டும்."
"ஆண்டவரே, வாரும். என் உள்ளத்தில் தங்கி என்னை வழி நடத்த வாரும்.
நான் உமக்கு விரோதமாகச் செய்த எல்லா பாவங்களுக்காகவும் உண்மையாகவே மனஸ்தாபப்படுகிறேன்.
என் பாவங்களை மன்னியும்.
நீர் மன்னிக்கும் போது பரிசுத்தமாகும் எனது உள்ளத்தை புண்ணிய மலர்களால் அலங்கரிப்பேன்.
உமது விருப்பத்திற்கு இணங்க முழுமையான உள்ளத்தோடு உம்மை நேசிப்பதோடு, என்னை நேசிப்பது போல் எனது அயலானையும் நேசிப்பேன்.
என்னிடம் உள்ளதை எல்லாம் எனது அயலானோடு பகிர்ந்து கொள்வேன்."
என்று நாம் கூற வேண்டும்.
இயேசு நமது உள்ளத்தில் ஒரு நாள் மட்டுமல்ல, நமது வாழ்நாள் முழுவதும், ஒவ்வொரு வினாடியும் தங்குவார்.
அவர் நமது உள்ளத்தில் இருக்கும் போது நமது எண்ணங்கள் எல்லாம் அவரைப் பற்றிய இருக்க வேண்டும்.
"இயேசுவே என் மேல் இரக்கமாயிரும்.
என் பாவங்களை மன்னியும்."
என்ற மனவல்லப ஜெபத்தை அடிக்கடி சொல்ல வேண்டும்.
அன்று இயேசு சிலுவையில் தன்னையே நமக்காகப் பரம பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தார்.
நாமும் இயேசு நமக்காக பட்ட பாடுகளையும், அவரது சிலுவை மரணத்தையும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக விண்ணகத் தந்தைக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.
"விண்ணகத்தில் வீற்றிருக்கும் எங்கள் அன்புத் தந்தையே,
உமது திருமகனும், எங்கள்
ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் வேதனை நிறைந்த பாடுகளையும், சிலுவை மரணத்தையும்
எனது பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்."
ஜெபம் சிறியதாக இருக்கலாம், அது நமது உள்ளத்தில் இருந்து வரும்போது நமது தந்தைக்கு மிகவும் பிரியமானதாக இருக்கும்.
அதன் ஆன்மீகப் பலன் மிகவும் பெரியதாக இருக்கும். -
இயேசு அன்று சக்கேயுவிடம் சொன்னது போல நம்மை நோக்கி,
" இன்று உனக்கு மீட்பு உண்டாயிற்று. நீயும் என் மகன்தானே." என்பார்.
'உனக்கு மீட்பு உண்டாயிற்று' என்றால் நீ என்னோடு நித்திய காலம் பேரின்ப வாழ்வு வாழ்வாய்" என்று அர்த்தம்.
நமது வாழ்நாளின் ஒவ்வொரு வினாடியும் இயேசுவோடு உரையாடுவதின் மூலம் நம்மை நித்திய பேரின்ப வாழ்வுக்கு தகுதி உள்ளவர்களாக மாற்ற வேண்டும்.
இவ்வுலகில் நாம் வாழ்வதும் நோக்கமே அதுதான்.
சக்கேயுவைப் போல நாமும் இயேசுவை நமது உள்ளமாகிய வீட்டுக்கு அழைத்துச் செல்வோம்.
அவரோடே எப்போதும் வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment