Wednesday, November 22, 2023

உன் கண்ணிலே உள்ள விட்டத்தைக் கவனியாது, உன் சகோதரன் கண்ணில் உள்ள துரும்பைப் பார்ப்பதேன் ?(மத்.7:3)

உன் கண்ணிலே உள்ள விட்டத்தைக் கவனியாது, உன் சகோதரன் கண்ணில் உள்ள துரும்பைப் பார்ப்பதேன் ?
(மத்.7:3)

கண்கள் இரண்டு வகை.
 புறக் கண்கள், அகக்கண்.

புறக் கண்கள் நமது முகத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளன.

இவற்றால் தங்களைத் தாங்களே பார்க்க முடியாது.

தங்களுக்கு வெளியே புறத்தே உள்ள பொருள்களையும் மனிதர்களையும் மட்டும் பார்க்க முடியும்.

மனிதர்களின் புறத்தை மட்டுமே அவற்றால் பார்க்க முடியும்,

 அவர்களின் அகத்தை அவர்களால் பார்க்க முடியாது.

அகக்கண் மனதில் உள்ளது.

அவற்றால் நமது மனதின் உட்புறத்தை பார்க்க முடியும்.

நமது புற கண்கள் வழியே மனதுக்குள் வரும் உருவங்களையும் பார்க்க முடியும்.

நமக்கு இருவகைக் கண்கள் இருந்தும் அவை எதற்காக படைக்கப்பட்டனவோ அதை மட்டும் செய்ய நாம் விடுவதில்லை.

நாம் புற உலகில் நடமாட நமக்கு உதவ நமது புற கண்கள் படைக்கப்பட்டுள்ளன.

ஆனால் நாம் நடமாடுவதோடு நிறுத்தி விடுவதில்லை.

புறக்கண்களால் பார்க்கப்படும் உருவங்களை நமது மனதுக்குள் அனுப்பி அவற்றின் அகத்தைப் பற்றி ஆராய ஆரம்பித்து விடுகிறோம்.

நமது அகக் கண்ணின் முக்கியமான வேலை நமது அகத்தைப் பற்றி ஆராய்வது தான்.

நாம் எப்படிப்பட்டவர்கள்,
நல்லவர்களா, கெட்டவர்களா,
நம்மிடம் என்னென்ன திறமைகள் உள்ளன, 
அவற்றை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்,
நாம் என்னென்ன பாவங்கள் செய்தோம், அவற்றிலிருந்து விடுதலை பெற என்ன முயற்சிகள் எடுத்திருக்கிறோம்

என்பன போன்ற நமது உள்ளத்தின் செயல்பாடுகளை ஆராய்வதே நமது அகக்கண்ணின் வேலை. 

ஆனால் அனேக சமயங்களில் நாம் அதைச் செய்வதில்லை.

மாறாக நமது புற கண்கள் பார்க்கும் மனிதர்களின் அகத்தைப் பற்றி ஆராய ஆரம்பித்து விடுகிறோம்.

உண்மையில் யாருடைய அகமும் வெளியிலுள்ள யாருக்கும் தெரியாது.

நமது புறக் கண்களில் படுகின்ற மனிதர்களின்,

நம்மால் பார்க்க முடியாத அகத்தைப் பற்றி ஆராய்ந்து, 

அவர்களைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம்.

உதாரணத்திற்கு, ஒருவன் டாஸ்மார்க் கடையிலிருந்து வெளியே வருவதை பார்க்கிறோம்.

அவன் அங்கே எதற்காகப் போனான், அங்கே என்ன செய்தான் என்பன எதுவும் நமக்குத் தெரியாது.

ஆனால் டாஸ்மார்க் கடையிலிருந்து வருபவன் மது அருந்திவிட்டு தான் வருகிறான் என்று தீர்மானிப்பதோடு

 அவனை ஒரு குடிகாரன் என்றும் தீர்மானித்து விடுகிறோம்.

டாஸ்மாக் கடைக்குள் குடிக்கத்தான் போக வேண்டும் என்று அவசியம் இல்லை.

கடைக்காரனுக்கு கொடுத்த கடனை வசூலிக்கவும் போகலாம்.

கோவிலுக்கு போகின்றவர்கள் எல்லாம் பக்தர்கள் என்று அர்த்தமில்லை.

மதுரைக்குச் சுற்றுலா போகும்போது மீனாட்சி அம்மன் கோவிலை பார்ப்பதற்காக உள்ளே நுழைகிறோம்.

மீனாட்சி அம்மனை வணங்கவா போகிறோம்?

ஹோட்டலுக்குள் நுழைப்பவர்கள் எல்லாம் சாப்பிடத் தான் போகிறார்கள் என்று அர்த்தம் இல்லை.

மற்றவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை நமது புறக் கண்களால் பார்க்க முடியாது.

பார்க்க முடியாத ஒன்றைப் பற்றி ஆராய்ந்து அதைப் பற்றி நாம் சொல்லும் தீர்ப்பு சரியாக இருக்குமா?

நமது உட்புறத்தை ஆராய வேண்டிய மனக் கண்ணில் உதவியால் பிறரின் உட்புறத்தை ஆராய முயற்சி செய்வதே தவறு.

அதனால் தான் ஆண்டவர்,

"உன் கண்ணிலே உள்ள விட்டத்தைக் கவனியாது, உன் சகோதரன் கண்ணில் உள்ள துரும்பைப் பார்ப்பதேன் ?"
என்று கேட்கிறார்.

ஒரு பள்ளிக்கூடத்தில் விடுதியில் நடந்த சம்பவம்.

Study Hallல் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 அவர்கள் என்ன படிக்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காக மேற்பார்வையாளர் அவர்களைச் சுற்றி சுற்றி வருகிறார்.

ஒரு பையன் அருகே வந்தவுடன் நிற்கிறார்.

அவன் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் அட்டையைப் பார்க்கிறார்.

அதில் "குமுதம், பொங்கல் மலர்" என்று எழுதி இருந்தது.

அதன் அடியில் 

"நீங்கள் ரசித்துக் கொண்டிருப்பது குனேகா மரிக்கொழுந்தின் ரம்யமான வாசனை"

 என்றும் எழுதி இருந்தது.

மேற்பார்வையாளர் படித்துக் கொண்டிருந்த பையனிடம் எதுவும் சொல்லாமல் புத்தகத்தைப் பிடுங்கினார்.

பையன் திரும்பிப் பார்த்தான்.

தன் பின்னால் வரும் படி சைகை காட்டினார். அவனும் பின்னால் சென்றான்.

அவருடைய அறைக்குச் சென்று புத்தகத்தை அவரது மேஜையின் மேல் போட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்தார்.

பையன் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்ன படித்துக் கொண்டிருந்தாய்?"

"Child Psychology, Sir"

"நீ படித்துக் கொண்டிருந்த புத்தகம் உனது முன்னால் தான் கிடைக்கிறது.

எவ்வளவு தைரியம் உனக்கு?

துணிந்து பொய் சொல்கிறாய்."

"சத்தியமாக சொல்கிறேன் நான் படித்துக் கொண்டிருந்தது "Child Psychology, Sir."

மேற்பார்வையாளர் புத்தகத்தைக் கையில் எடுத்துத் திறந்து பார்த்தார்.

அது உண்மையிலேயே Child Psychology தான்.

"எதற்காக குமுதத்தின் அட்டையை போட்டிருக்கிறாய்?"

"குனேகா மரிக்கொழுந்தின் ரம்யமான வாசனைக்காக."

"குமுதத்தை எங்கே?"

"Desk க்குள் இருக்கிறது. அதை படிப்பு நேரத்தில் வாசிக்க மாட்டேன். Recreation சமயத்தில்  வாசிப்பேன்."

"அட்டையை கழற்றி Waste paper box க்குள் போட்டுவிடு.

அதுதான் உன் பெயரைக் கெடுத்து விட்டது."

"மன்னிக்க வேண்டும். என் புத்தகத்தைப் பிடுங்கியவுடனே திறந்து பார்த்திருந்தால் என் பெயர் கெட்டிருக்காது."

மேற்பார்வையாளர் பதில் ஒன்னும் சொல்லவில்லை.

ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வெளிப்புறத்தை வைத்து மட்டும் எதையும் தீர்மானித்து விடக்கூடாது.

நமது கண்களுக்கு வருவோம்.

நமது புறக் கண்களால் வெளி பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பார்த்த உடனேயே பார்க்கப்பட்ட ஆளைப் பற்றியோ, பொருளைப் பற்றியோ தீர்ப்பு சொல்லி விடக்கூடாது.

பிறரைப் பற்றி தீர்ப்பு கூற நமக்கு எந்த உரிமையும் இல்லை. 

சகலத்தையும் அறிந்த கடவுளுக்கு மட்டும்தான் தீர்ப்பு கூறும் உரிமை உண்டு.

அந்த உரிமையை அவர் நம்மோடு பகிர்ந்து கொள்ளவில்லை.

  நம்மோடு அன்பைப் பகிர்ந்து கொண்ட கடவுள்,

இரக்கத்தைப் பகிர்ந்து கொண்ட கடவுள்,

மன்னிக்கும் குணத்தைப் பகிர்ந்து கொண்ட கடவுள்

தீர்ப்புக் கூறும் உரிமையைப் பகிர்ந்து கொள்ளவில்லை.

தன்னிடம் வரும் நோயாளியின் நோயைத் தெரிந்து கொண்டால்தான் மருத்துவரால் மருந்து கொடுக்க முடியும்.

நமது அயலானை நேசிக்க கடமைப்பட்டுள்ள நாம்,

அவனுக்கு உதவி செய்யவும், அவனை நல்வழிப்படுத்தவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

அவனது நடத்தையைப் பற்றி தீர்ப்பிட முடியாத நாம் எப்படி அவனை நல்வழிப்படுத்துவது?

நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் கடமை நமக்கு உண்டு.

நற்செய்தியின் அடிப்படையில் புத்திமதிகள் கூறும் கடமையும் நமக்கு உண்டு.

நமது கூற்றை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவனது சுதந்திரத்தின் பால் பட்டது.

இயேசு தனது சீடர்களை நோக்கி,

"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.


 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்"

நற்செய்தியை அறிவிக்கும் கடன் நமக்கு உண்டு.

விசுவசிக்க வேண்டியவர்கள் அறிவிக்கப்பட்டவர்கள்.

திருப்பலி நிறைவேற்றும் குருவானவர் பிரசங்கத்தின் போது நற்செய்தியை விளக்குவார்.

விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது நமது கடமை.

விளக்கத்தை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டால் குருவானவர் என்ன செய்வார்?

ஆசிரியர் வகுப்பில் பாடம் போதிக்கிறார்.

40 மாணவர்களும் கேட்கிறார்கள்.

அனைவரும் தேர்வு எழுதுகின்றார்கள்.

40 பேரில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுகின்றவர்களும் இருக்கிறார்கள்.

நூற்றுக்கு 50 மதிப்பெண்கள் பெறுகின்றவர்களும் இருக்கிறார்கள்.

நூற்றுக்கு 0 மதிப்பெண் பெறுகின்றவர்களும் இருக்கிறார்கள்.

ஆசிரியர் என்ன செய்வார்?

பிறரைப் பற்றி தீர்ப்புக் கூறுவதை விட்டுவிட்டு நமது அகக்கண்ணால் நம்மையே ஆராய்வோம்.

முதலில் நாம் திருந்துவோம்.

திருந்தி நல்ல வாழ்வு வாழ்வோம்.

நம்மைப் பார்ப்பவர்கள் மனம் திரும்ப சந்தர்ப்பம் கொடுப்போம்.

மற்றவர்களைப் பற்றி தீர்ப்புச் சொல்வதற்குப் பதிலாக 

நாம் நன்றாக வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம்.


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment