Thursday, November 23, 2023

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்: (மத்.7:7)

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்: (மத்.7:7)

கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நம் ஆண்டவர் சொன்னார்.

கேட்கிறோமா?

கேட்கிறோம். நமக்குப் பிரியமானதைக் கேட்கிறோம்.

அவருக்கு பிரியமானதை, அவர் கேட்கச் சொன்னதைக் கேட்கிறோமா?

அப்பத்தைக் கேட்கிறோமா? 
கல்லைக் கேட்கிறோமா?

அப்பத்தின் வடிவில் வாழ்கின்றார் இயேசு.

அவரைத் தினமும் என்னுள் வாரும் என்று கேட்கிறோமா?

வந்து என்னுள் தங்கும் என்று கேட்கிறோமா?

தங்கி என்னை ஆளும் என்று கேட்கிறோமா?

உமது அருளைத் தாரும் என்று கேட்கிறோமா?

உமது அன்னையை அருளால் நிரப்பியது போல எங்களையும் நிரப்பும் என்று கேட்கிறோமா?

உமது அன்னை உமக்கு அடிமையாய் வாழ்ந்தது போல நாங்களும் வாழ வரம் தாரும் என்று கேட்கிறோமா?

உமது சிலுவையின் பின்னால் அவள் நடந்தது போல நாங்களும் நடக்க வரம் தாரும் என்று கேட்கிறோமா?

சிலுவையின் அடியில் அவள் நின்றது போல நாங்களும் நிற்க வரம் தாரும் என்று கேட்கிறோமா?

எங்களுக்காக அல்லாமல் உமக்காக மட்டும் வாழ வரம் தாரும் என்று கேட்கிறோமா?

எங்களது மரண நேரத்தில் எங்களோடு இருந்து, எங்களை விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லும் என்று கேட்கிறோமா?

இதையெல்லாம் கேட்டால் நீர் கட்டாயம் கொடுப்பீர்.

நாங்கள் எதைக் கேட்கிறோம்?

ஒன்றுக்கும் உதவா கல்லை அல்லவா கேட்கிறோம்!

கல்லாலும், மண்ணாலும் ஆனது உலகம்.

கடவுள் நம்மை படைத்தது மண்ணுக்காக அல்ல, விண்ணுக்காக.

நம்மை விண்ணுக்கு வழி கேட்கச் சொன்னால், நாம் மண்ணுக்கு அல்லவா வழி கேட்கிறோம்?

விண்ணுக்கு வழி கேட்டால் காட்டுவார்.

மண்ணுக்கு வழி கேட்டால் விண்ணுக்கு கேட்கு மட்டும் அமைதியாகக் காத்திருப்பார்.

நாம் கேட்பதை அவர் தராவிட்டால்,

தர விரும்பாததை கேட்கிறோம் என்று அர்த்தம்.

அவர் விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்தது, நம்மை விண்ணுக்கு அழைத்துச் செல்ல, மண்ணில் வாழ வைக்க அல்ல.

அவர் பாடுகள் பட்டு மரித்தது நமது ஆன்மாவை மீட்க, உடலை வளர்க்க அல்ல.

ஆன்மீக மீட்புக்கான உதவிகளைக் கேட்போம், கட்டாயம் தருவார்.

ஆன்மீக மீட்புக்கு உதவாததைக் 
கேட்டால் தர மாட்டார்.

அவர் கேட்கச் சொன்னதை கேட்போம்.

கட்டாயம் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment