கடவுளின் அரசு எப்பொழுது வரும்?" என்று பரிசேயர் வினவியபோது,
இயேசு "கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது" என்றார்.
மெசியாவை பற்றி பரிசேயர்கள் தவறான கருத்து கொண்டிருந்தார்கள். மெசியா வந்து தங்களை அரசியல் ரீதியாக ரோமையர்களின் அடிமைத்தனத்திலிருந்து மீட்பார் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் மெசியாவின் வருகை ஆன்மீக ரீதியானது. அவரது வருகையின் நோக்கம் பாவத்திலிருந்து மக்களை மீட்பது.
இயேசு தான் பழைய ஏற்பாட்டில் வாக்களிக்கப்பட்ட மெசியா.
அவரது ஆட்சி அரசியல் ரீதியானது அல்ல. ஆன்மீக ரீதியானது.
மக்களின் உள்ளம் ஆகிய சிம்மாசனத்தில் அமர்ந்து அவர்களை ஆன்மீக ரீதியாக ஆட்சி புரியவே இறைமகன் மனு மகனாய்ப் பிறந்தார்.
அவருடைய சீடர்களுடைய உள்ளத்திலும்,
விசுவாசத்தோடு அவரிடம் வந்து தங்கள் உடல், உள்ள நோய்களிடமிருந்து விடுதலை பெற்ற மக்களின் உள்ளத்திலும்
சிம்மாசனம் அமைத்து அவர் ஏற்கனவே ஆன்மீக ஆட்சி புரிய ஆரம்பித்துவிட்டார்.
அவருடைய ஆன்மீக ஆட்சியை ஏற்றுக் கொண்ட மக்கள் அவர் சென்ற இடமெல்லாம் அவரது நற்செய்தியைக் கேட்க அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.
ஆனால் பரிசேயர்களும், அவர்களைச் சேர்ந்த யூத மத தலைவர்களும் இயேசுவை மெசியா என்று ஏற்றுக் கொள்ளவில்லை.
இயேசுவைப் பின்பற்றி சென்ற மக்கள் தங்களைப் பாவிகள் என்று ஏற்றுக்கொண்டு, தங்கள் பாவங்களிலிருந்து விடுதலை பெற்றார்கள்.
ஆனால் உண்மையிலேயே பாவிகளாக இருந்தும் தங்களைப் பரிசுத்தவான்களாக எண்ணிக் கொண்டிருந்த பரிசேயர்களும் யூத மத தலைவர்களும்
தங்களை மீட்க வந்தவரைக் கொல்வதற்கு வழி தேடிக்கொண்டிருந்தார்கள்.
இறையாட்சி ஏற்கனவே மக்களிடையில் வந்துவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இயேசு அறிவித்த நற்செய்தியையும் பரிசேயர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்று போட்டார்கள்.
ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.
அவர்கள் கொன்றது கடவுளாகிய இயேசுவை.
மிகப்பெரிய பாவம்.
ஆனால் தீமையிலிருந்து நன்மையை வரவழைக்கக் கூடிய சக்தி வாய்ந்தவர் கடவுள்.
பரிசேயர்கள் செய்த மிகப்பெரிய பாவத்திலிருந்து,
மீட்பு என்ற மிகப்பெரிய நன்மையை வரவழைத்தார் இயேசு.
பரிசேயர்களின் கையால் அவர் அடைந்த மரணம் தான் பாவிகளை நித்திய மரணத்திலிருந்து மீட்டது.
இயேசு தனது சிலுவை மரணத்தின் மூலமாகத்தான் நம்மை நமது பாவங்களிலிருந்து மீட்டார்.
சாத்தானின் சூழ்ச்சியால் பாவம் உலகில் நுழைந்தது.
பாவிகளை மீட்க மனுமகனாய் பிறந்த இயேசுவைக் கொன்று விட்டால்
அவரது மீட்புத் திட்டத்தைச் செயலற்றதாக ஆக்கி விடலாம் என்று சாத்தான் எண்ணியது.
அந்த எண்ணத்தில் தான் இயேசுவைக் கொல்லும்படி பரிசேயர்களைத் தூண்டிவிட்டது.
சாத்தான் தன்னை அறியாமலேயே தான் பாவம் செய்ய தூண்டிய மக்களை பாவத்திலிருந்து மீட்க உதவியாக இருந்திருக்கிறது.
மீட்புக்கு எதிராக சாத்தான் போட்ட திட்டமே அதனைத் தோல்வி அடையச் செய்து விட்டது.
Satan's plan against our salvation has backfired on him.
சாத்தானை வென்று நம்மைப் பாவத்திலிருந்து மீட்ட இயேசு நமது அரசர்.
நமது உள்ளமே அவர் அமர்ந்து நம்மை ஆளும் சிம்மாசனம்.
இயேசுவின் ஆட்சி ஆன்மீக ரீதியானது, உலக ரீதியானது அல்ல.
நாம்தான் இயேசு அரச வாழும் அரண்மனை.
நம்மிடம் வரும் மக்களை இயேசுவிடம் அழைத்துச் சென்று அவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்த வேண்டும்.
இயேசுவின் அரசை ஏற்று கொள்ளாத மக்கள் ஏராளமான பேர் நம்மைச் சுற்றி வாழ்கின்றார்கள்.
அவர்களை இயேசுவின் அரசுக்குள் கொண்டு வர வேண்டியது நமது கடமை.
நமது நற்செய்திப் பணியின் மூலம் உலக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இயேசு அமர்ந்து ஆள்வதற்கான சிம்மாசனங்களை அமைப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment