Saturday, November 4, 2023

"தோட்டம் வாங்கியிருக்கிறேன். அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்கவேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்" (லூக். 14:18)

"தோட்டம் வாங்கியிருக்கிறேன். அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்கவேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்"
     (லூக். 14:18)

''என்ன தம்பி புறப்பட்டாச்சா?''

"'புறப்பட்டு விட்டேன்.? இப்போது புறப்பட்டால் தானே பேருந்தைப் பிடிக்க முடியும்."

"பேருந்தைப் பிடிக்கவா?   அடுத்த தெருவில் இருக்கும் கோவிலுக்குப் பேருந்திலா வர போகிறாய்?"

'''கோவிலுக்கு வர போகிறேன் என்று யார் சொன்னது? நான் மதுரைக்கு ஒரு வேலையாகப் போகிறேன்.''

''அப்போ தியானத்துக்கு வரவில்லையா?"

"'வரவில்லை."

"திருவிழா கமிட்டியில் ஒரு முக்கியமான ஆளாக இருக்கிறாய். சப்பரத்துக்கு நீதான் ஏற்பாடு செய்திருக்கிறாய். தியானம் செய்யாவிட்டால் எப்படி சிறப்பாக திருவிழா கொண்டாட முடியும்?''

"' எனது வேலையை முடித்துவிட்டு ஒன்பதாவது திருநாளுக்கு வந்து விடுவேன். தியானத்தை விட முக்கியமான வேலை  ஒன்று மதுரையில் இருக்கிறது."

"அப்போ உனக்கு சப்பரக் கொண்டாட்டம் தான் முக்கியம். ஆத்மா முக்கியமில்லை. 

தியானத்தில் கலந்து கொண்டு, பாவ சங்கீர்த்தனம் செய்து, ஆன்மாவை பரிசுத்தப்படுத்தினால் தான் திருவிழாக் கொண்டாட்டம் உண்மையான திருவிழா ஆகும்.
.
ஊர் சுத்தி விட்டு வந்து சப்பரத்தின் பின்னால் போவது திருவிழா கொண்டாட்டம் அல்ல."

''எனக்கு எனது வேலை தான் முக்கியம். Bye . வருகிறேன்"

இப்படித்தான் அனேக கிறிஸ்தவர்களுக்கு மோட்சத்தை விட இவ்வுலக வேலை தான் முக்கியம்.

ஞானஸ்தானம் பெற்றிருப்பார்கள் குழந்தைப் பருவத்திலே.

வளரும் போது அவர்களது ஆன்மீக காரியங்களில் ஆலோசனை கூறுவதற்காக ஞானப் பெற்றோர் நியமிக்கப்பட்டிருப்பார்கள்.

ஆனால் அனேக பிள்ளைகளுக்கு வளர்ந்த பின்பும் தங்களுடைய ஞானப் பெற்றோர் யார் என்று தெரியாது.

ஞான பெற்றோரும் தங்கள் ஞானப்பிள்ளைகளுக்கு ஆன்மீக ஆலோசனை எதுவும் கொடுப்பதில்லை.

பிள்ளைகள் வளர்ந்த பின்பு உறுதிப் பூசுதல், புது நன்மை ஆகிய தேவ திரவிய அனுமானங்களைப் 

பெற்றோர் விருந்தினரை அழைத்து விழாக்களாகக் கொண்டாடுகிறார்களே தவிர அவற்றின் ஆன்மீக  நலனில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை.

பள்ளிக்கூட படிப்பு, தேர்வுகள், வேலைகள், சம்பளம், வேலை உயர்வு போன்றவற்றில் காட்டும் அக்கறையை ஆன்மீக காரியங்களில் காட்டுவதில்லை.

திருமணத்தை வெறும் சமூக விழாவாகவே கொண்டாடுகிறார்கள்.

குழந்தைப் பேற்றில் உள்ள ஆன்மீகத்தை பற்றி யாருக்கும் கவலை இல்லை.

கோவில் காரியங்களில் காட்டும் அக்கறைய விட தங்களுடைய தொழில் முன்னேற்றத்திலேயே அதிக அக்கறை காட்டுகிறார்கள்.

மோட்சத்திற்கு செல்வதற்காக வாழ்வதைவிட, இவ்வுலகில் ஆடம்பர வசதிகளோடு வாழ்வதிலேயே அதிக அக்கறை காட்டுகிறார்கள்.

எதற்காக படைக்கப்பட்டார்களோ அதற்காக வாழ்வதில்லை.

எந்த வாழ்வு ஒருநாள் முடிந்து போகுமோ அதையே நிரந்தரம் என்று எண்ணி வாழ்கிறார்கள்.

கிறிஸ்தவர்களாக இருந்தாலும், உலக இன்பங்களுக்காக மட்டும் வாழ்பவர்களுக்கு மரணம் மோட்சத்தின் வாசல் அல்ல, நரகத்தின் வாசல்.

எல்லோரும் இப்படி வாழ்கின்றார்கள் என்று சொல்லவில்லை, இப்படி வாழ்கின்றவர்களும் இருக்கின்றார்கள்.

நமது உடலின் மேல் காட்டும் அக்கறையை விட ஆன்மாவின் மேல் அதிக அக்கறை காட்டுவோம்.

உடல் ஒருநாள் மண்ணுக்கு இறையாகி விடும், ஆன்மா நித்திய காலம் வாழும்,

நித்திய கால பேரின்ப வாழ்வுக்காக தயாரிப்பது நமது இவ்வுலக வாழ்க்கையின் நோக்கம். 

லௌகீகக் கிறிஸ்தவர்களாக வாழாமல், ஆன்மீகக் கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்..

No comments:

Post a Comment