"தாத்தா ஆண்டவர் "தன் தந்தை, தாய், மனைவி, மக்கள், சகோதரர் சகோதரிகளையும், ஏன், தன் உயிரையுமே வெறுக்காவிட்டால் என் சீடனாயிருக்க முடியாது என்று சொல்கிறார்.
அப்படியானால் நாம் நமது உற்றார், உறவினர்களை வெறுக்க வேண்டுமா? நேசிக்க கூடாதா?"
""கேள்வி கேட்கு முன் சிறிது சிந்தித்துவிட்டு கேட்க வேண்டும்.
நமது ஆண்டவர் முன்னுக்குப் பின் முரண்பாடாக பேசுவாரா?"
"கடவுளால் தனது வார்த்தைகளுக்கு எதிராகப் பேச முடியாது. அவர் அளவற்ற ஞானம் உள்ளவர்.
சிந்திக்காமல் பேசுகிறவர்கள் தான் தங்கள் வார்த்தைகளுக்கு எதிராக நாங்களே பேசுவார்கள்.
கடவுளால் அப்படியே பேச முடியாது."
"'அப்படியானால் உனது கேள்வி தவறு.
நமது உற்றார், உறவினர்களை வெறுக்க வேண்டுமா? நேசிக்க கூடாதா?" என்று நீ கேட்டிருக்கக் கூடாது."
"வேறு எப்படி கேட்டிருக்க வேண்டும்?"
"'இந்த வசனத்தை விளக்குங்கள் என்று கேட்டிருக்க வேண்டும்."
"சரி. இந்த வசனத்தை விளக்குங்கள்."
"'நமது உள்ளத்தில் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்.
அப்படியானால் அந்த வார்த்தைகளுக்கு பொருள் கொடுக்க வேண்டியது யார்?"
"நாம் தான். பேசுபவர்தான் தனது வார்த்தைகளுக்குப் பொருள் கொடுக்க வேண்டும்.''
'''நீ பள்ளிக் கூடத்திற்குப் போக மறுக்கிறாய் என்று வைத்துக் கொள்வோம்.
உனது அப்பா உன்னை பார்த்து,
"நீ பள்ளிக்கூடம் போகாவிட்டால் என் பிள்ளையே அல்ல" என்று சொல்கிறார்."
"ஏற்கனவே சொல்லிவிட்டார்."
"'அப்படியானால் நீ அவரது பிள்ளை இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறாரா?"
''நான் பள்ளிக்கூடம் போக வேண்டும் என்ற தனது கருத்தை வலியுறுத்திச் சொல்வதற்காக
அவ்வளவு கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அவ்வளவுதான்"
"'நீ உன்னை நேசிப்பது போல் உனது பிறனை நேசி.
நாம் நம்மையே நேசிக்க வேண்டும். அதாவது நம்மையே நாம் வெறுக்க கூடாது.
நமது உயிர் கடவுளால் நமக்கு தரப்பட்டது, அதை நம்மை விட்டு எடுக்க, அதாவது, தற்கொலை செய்து கொள்ள நமக்கு உரிமை இல்லை.
தன் உயிரை வெறுப்பவன் அதைத் தந்த கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்கிறான்.
இப்போது ஒரு கேள்வி.
இயேசுவுக்கு எதிரான ஒருவன் உன்னிடம் வந்து,
"நீ வணங்கும் இயேசுவை மறுதலிக்க வேண்டும். இல்லாவிட்டால் உன் உயிரை எடுத்து விடுவேன்" என்கிறான்.
உனது பதில் எதுவாக இருக்க வேண்டும்?"
"நீ என் உயிரை எடுத்தாலும் நான் இயேசுவை மறுதலிக்க மாட்டேன்" என்பது எனது பதிதாக இருக்க வேண்டும்.
எனது உயிரை எடுத்தாலும் நான் ஆண்டவரை மறுதலிக்க மாட்டேன்.
வேத சாட்சிகள் தங்களது உயிரைக் கொடுத்து தானே தாங்கள் இயேசுவின் சீடர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
நானும் அப்படியே நிரூபிப்பேன்."
'''அதாவது உனது உயிரை விட இயேசுவை அதிகம் நேசிக்கிறாய்.
ஆண்டவரது வெறுக்காவிட்டால் என்ற வார்த்தைகளுக்கு அதுதான் பொருள்.
ஆண்டவர் உன்னை பார்த்து, "உனக்கு நான் முக்கியமா அல்லது உனது உயிர் முக்கியமா?" என்று கேட்டால்,
"ஆண்டவரே என் உயிரை விட நீர் தான் எனக்கு முக்கியம்'' என்று கூற வேண்டும்.
அதேபோல் தான், நமது தந்தை, தாய், மனைவி, மக்கள், சகோதரர் சகோதரிகளை விட,
நமக்கு நமது ஆண்டவர் தான் முக்கியம்.
ஆண்டவர் உன்னை குருத்துவ சேவைக்கு அழைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
"ஆண்டவரே நான் எனது தந்தையையும் தாயையும் உம்மை நேசிப்பதை விட அதிகம் நேசிக்கிறேன். ஆகவே அவர்களை விட்டு பிரிந்து வர முடியாது" என்று சொல்லலாமா?"
"சொல்லக்கூடாது. பெற்றோரை நேசிப்பது உண்மைதான். ஆனால் ஆண்டவரை முழு உள்ளத்தோடு நேசிப்பதால் நான் முழுவதும் அவருக்கே சொந்தம். ஆகவே ஆண்டவரது அழைப்பை ஏற்பதற்காக பெற்றோரை விட்டுப் பிரிய தயாராக இருக்க வேண்டும்.
நான் பெற்றோரை வெறுக்கவில்லை. ஆனால் அவர்களை நேசிப்பதை விட ஆண்டவரை அதிகம் நேசிக்கிறேன்.
இப்போது ஆண்டவரது வார்த்தைகளில் அர்த்தம் புரிகிறது.
நம்மைப் படைத்து ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வருகின்றவர் கடவுள்.
இந்த உலகையும் அதில் உள்ள ஒவ்வொரு பொருளையும் நாம் பயன்படுத்துவதற்காகப் படைத்தவர் கடவுள்.
நமக்கு நித்திய பேரின்ப வாழ்வைத் தரவிருக்கிறவர் கடவுள்.
அவரின்றி நாம் இல்லை.
அவர்தான் நமக்கு எல்லாம்.
ஆகவே எல்லாவற்றையும் நேசிப்பதை விட அவரை அதிகம் நேசிக்க வேண்டும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment