இறை வார்த்தையை வாசித்தால் மட்டும் போதாது, சிந்தித்துச் செயல்படுத்த வேண்டும்.
இறை வார்த்தை நமது வாழ்வாகும்போதுதான் நாம் பயன் பெறுவோம்.
அனைவரும் விண்ணுலகத் தந்தையின் பிள்ளைகள்.
இறைமகனின் சகோதரர்கள்.
நமக்கும் சகோதரர்கள்.
ஒரே குடும்பத்துப் பிள்ளைகள் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம்.
அம்மா சமைத்ததை அனைவரும் பகிர்ந்து உண்பது வழக்கம்.
நாம் விண்ணகத் தந்தையிடம் வேண்டும்போது,
"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்" என்று சொல்கிறோம்.
'எனக்கு' என்று சொல்லவில்லை 'எங்களுக்கு' என்று சொல்கிறோம்.
ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் கொடுத்து சாப்பிட்டால் பெற்றோருக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்!
அதைவிட அதிகமாக கடவுள் மகிழ்வார் அவருடைய பிள்ளைகள் ஒருவருக்கொருவர் கொடுத்து உண்டால்.
ஒருவருக்கொருவர் கொடுத்து உண்பதற்காகத்தான் 'எங்களுக்கு' உணவு தாரும் என்று விண்ணகத் தந்தையிடம் கேட்கிறோம்.
நமது ஜெபம் உணர்வுப்பூர்வமானதா அல்லது வெறும் வார்த்தைகளால் ஆனதா?
நம் அநேகருடைய நடவடிக்கைகளைப் பார்க்கும் போது நாம் உணர்வுப் பூர்வமாக ஜெபிப்பதாகத் தெரியவில்லை.
நமது அயலானுக்கு எதைக் கொடுத்தாலும் கடவுளுக்கே கொடுக்கிறோம்.
கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரனுக்கு 10 பைசா கொடுக்க மனதில்லாமல்
கோவிலுக்குள் சென்று உண்டியலில் பத்து ரூபாய் போட்டால் எந்தவித ஆன்மீகப் பலனும் இல்லை.
கடவுள் கைநீட்டிக் கேட்பதைக் கொடுக்காமல் உண்டியலில் மட்டும் போட்டால் கடவுள் மீது நமக்கு நம்பிக்கை இல்லை என்று தானே அர்த்தம்.
கடவுள் நம் தந்தை.
அயலான் நமது சகோதரன்.
'நம்முடைய சகோதரர்களோடு நம்மிடம் இருப்பதை பகிர்ந்து உண்டு வாழ்ந்தால் தந்தை மட்டற்ற மகிழ்ச்சி அடைவார்.
இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து உண்போம்.
தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்ட நம் விண்ணகத் தந்தைக்கு அதுதான் நாம் செலுத்தும் மிகப்பெரிய காணிக்கை.
நம்மிடம் இருப்பதெல்லாம் நமது தந்தையிடமிருந்து பெற்றதுதான்.
கடவுள் நமக்குக் கொடுத்திருப்பதே நமது சிறிய சகோதரர்களுக்கு கொடுப்பதற்காகத்தான்.
தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அவர் விண்ணகத்தையே பரிசாகக் கொடுப்பார்.
தந்ததைக் கொடுப்போம்.
தருவதைப் பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment