Wednesday, November 15, 2023

தன் உயிரைப் பாதுகாக்கத் தேடுகிறவன் அதை இழந்துவிடுவான். இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான்.( லூக்.17:33)

தன் உயிரைப் பாதுகாக்கத் தேடுகிறவன் அதை இழந்துவிடுவான். இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான்.
( லூக்.17:33)

மனு மகனின் இரண்டாவது வருகையின் போது உலகத்தினர் 

நோவாவின் காலத்தில் நடந்ததுபோல  நடந்தால் அவர்களைப் போலவே அழிவார்கள்.

லோத்து சோதோமை விட்டுச் சென்ற நாளில் அங்கிருந்த மக்கள்  எப்படி வாழ்ந்தார்களோ அப்படி  வாழ்ந்தால்  அப்படியே அழிவார்கள்.

மனுமகன் எப்போது வருவார் என்பதை அறிந்து கொள்வதை விட அவர் வரும்போது நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை அறிந்து கொள்வது தான் முக்கியம்.

"அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும் தெரியாது: தந்தைக்குத் தெரியுமேயன்றி, வானதூதருக்கும் மகனுக்குங்கூடத் தெரியாது."  என்று இயேசுவே சொன்னார்.

தந்தைக்குத் தெரிவதெல்லாம் மகனுக்கும் தெரியும்,

ஆனால், அந்த நாள் எப்போது வரும் என்று நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க கூடாது என்பதை அழுத்திச் சொல்வதற்காகத் தான் இயேசு மகனுக்குங்கூடத் தெரியாது என்றார்.

அந்த நாள் எப்போது வரும் என்று தெரிவது முக்கியமல்ல,

 அதற்காக வாழ்வதுதான் முக்கியம்.


நாம் நமக்காக வாழாமல் 
நம்மை படைத்த இறைவனுக்காக 
அவரது மகிமைக்காக வாழ வேண்டும்.

நமது உயிரை விட அதை படைத்த கடவுளே நமக்கு முக்கியம்.

கடவுளுடைய மகிமைக்காக நமது உயிரை விட ,

அதாவது,

 நாம் மரணத்தைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

நமக்கு அவர் உயிர் கொடுத்தது நாம் நித்தியமாக அவரோடு பேரின்ப வாழ்வு வாழ்வதற்காகத்தான்.

ஆகவே அவருக்காக நமது உயிரை கொடுக்கும் போது அது நித்திய பேரின்ப வாழ்வுக்கு ஏற்றதாகிவிடும்.

அதாவது கடவுளுக்காக நமது உயிரை நாம் இழந்தால் நாம் இறைவனோடு இணைந்து அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

ஆனால் இவ்வுலகில் நமது உயிரை இறைவனுக்காகத் தியாகம் செய்ய மனதில்லாமல்,

உயிரோடு வாழ நினைத்தால்,

நித்திய பேரிடர் வாழ்வு வாழ நேரிடும்.

நித்திய பேரின்ப வாழ்வு முக்கியமா, ஒரு நாள் முடிய போகும் இவ்வுலக சிற்றின்ப வாழ்வு முக்கியமா? சிந்திப்போம்.


இயேசு பிறந்த சமயத்தில் அவருக்காக ஆயிரக்கணக்கான மாசில்லாக் குழந்தைகள் தங்களது உயிரைத் தியாகம் செய்தார்கள்.

இன்று அவர்கள் நித்திய பேரின்ப வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் தான் இயேசுவுக்காக வேத சாட்சிகளாக மதித்த புனிதர்கள் நித்திய பேரின்ப வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மனுமகனின் இரண்டாவது வருகைக்குப் பின் நாம் நமது ஆன்ம சரீரத்தோடு  நித்திய காலம் பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

நமது ஆன்மாவையும், உடலையும் அந்த நோக்கத்திற்காகத் தயார்படுத்த வேண்டுமே தவிர,

இவ்வுலக நிரந்தரமற்ற வாழ்வுக்காக அவற்றை வீணாக்கி விடக்கூடாது.

இவ்வுலகில் நமது உயிர் பிரிந்தால் நாம் விண்ணகம் செல்வோம்.

இவ்வுலக வாழ்க்கையை விட விண்ணுலக வாழ்க்கையே நமக்கு நிரந்தரமானது.

ஆகவே நமது உயிரை இறைவனுக்காகத் தியாகம் செய்து,

 இவ்வுலகை விட்டு விண்ணுலகம் செல்ல எப்போதும் தயாராக இருப்போம்.

இவ்வுலகில் வாழ்வதற்காக இறைவனுக்கு எதிராக நமது உயிரைப் பாதுகாக்க நாம் ஆசைப்பட்டால் அதை நாம் நித்திய காலமும் இழந்து விடுவோம்.

இறைவனுக்காக அதை இழந்தால் நித்திய காலமும் அவரோடு விண்ணகத்தில் பேரின்ப வாழ்வு வாழ்வோம்,

நமது உயிரை விட நமக்கு இறைவனே முக்கியம்.

 அவருக்காக மரிப்போம்,

அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment