Tuesday, November 14, 2023

"எழுந்து போ, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" (லூக்.17:19)

"எழுந்து போ, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" (லூக்.17:19)

இயேசு குணமாக்கிய பத்து தொழு நோயாளிகளுள் ஒருவன் வந்து அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து நன்றிசெலுத்தினான்.

இயேசு அவனை நோக்கி,

 "எழுந்து போ, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றார்.

குணமாக்கியது தான்தான் இயேசுவுக்கும் தெரியும், குணமான நோயாளிக்கும் தெரியும்.

இயேசு ஏன்,  "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றார்? 

நமக்கு மிக அவசரமான, அத்தியாவசியமான ஒரு செலவுக்கு ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

நம்மிடம் அந்தப் பணம் இல்லை.

யாரிடம் சென்று கடன் வாங்குவது என்று தெரியவில்லை.

திடீரென்று மனதில் நமது பள்ளிக்கூட காலத்திய நெருங்கிய நண்பன் ஒருவன் நினைவுக்கு வருகிறான்.


பள்ளிக்கூட பருவத்தில் இதயத்தோடு இதயம் ஒட்டிப் பழகிய நண்பன்.

அவனிடம் சென்று நமது தேவையை எடுத்துரைத்தால் தேவையான பணம் கடனாகக் கிடைக்கும் என்று மனதில் ஒரு நம்பிக்கை உதிக்கிறது.

அதன் அடிப்படையில் அவனிடம் சென்று நமது கஷ்டங்களை எடுத்துரைக்கின்றோம்.

நட்பின் அடிப்படையில் நம்மைப் புரிந்து கொண்டு அவன் நமக்குத் தேவையான பணத்தைத் தந்து உதவுகின்றான்.

நமக்கு உதவி செய்வது நமது நண்பன் தான்.

ஆனாலும் நம்பிக்கையோடு நாம் அவனிடம் சென்று உதவி கேட்டாதால்தானே கிடைத்தது.

நமக்கு அவன் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்காவிட்டால் அவனிடம் சென்று கேட்டிருக்க மாட்டோம்.

நமக்கு உதவியும் கிடைத்திருக்காது.

ஆகவே உதவியது நண்பன் என்றாலும், அவன் நமக்கு உதவ உதவியது நமது நம்பிக்கை தான்.

இந்த பொருளில் தான்,

 இயேசு "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று." என்றார்.

இயேசு இறைமகன் என்பதையும், 

அவரே நம்மைப் படைத்தவர் என்பதையும், 

நம்மை படைத்ததற்கு காரணம் அவரிடம் உள்ள அளவு கடந்த அன்பு என்பதையும்,

அந்த அன்பின் அடிப்படையில் அவரால் படைக்கப்பட்ட நம்மை ஒவ்வொரு 
வினாடியும் பராமரித்து வருகிறார் என்பதையும், 

அவரது பராமரிப்பினால் தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதையும் ஏற்றுக்கொண்டு,
'
அவருக்காக, அவருக்காக மட்டும் நாம் வாழ வேண்டும் என்ற அர்ப்பண உணர்வை உள்ளடக்கிய மனநிலையே நமது விசுவாசம்.

விசுவாசம் உள்ளவர்கள் இயேசுவே தங்களுக்கு எல்லாம் என்ற மனநிலையோடு அவருக்காக மட்டும் வாழ்பவர்கள்.

நாம் நமக்காக மட்டும் பயன்படுத்தும் வண்டியில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அதை நாமே உடனடியாகச் சரி செய்ய முயற்சி எடுப்பது போல,

இயேசுவுக்காக மட்டும் வாழும் நமக்கு என்ன தேவை என்றாலும் அவரே நிவர்த்தி செய்வார்.

நாம் வாழ்வது ஆன்மீக வாழ்வு என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.

கடவுள் நம்மை படைத்தது நமது ஆன்மா விண்ணகத்தில் நித்திய காலம் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

நமது நித்திய பேரின்ப வாழ்வுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை எல்லாம் இயேசு கொடுப்பார்.

நாம் கேட்டு எதையாவது அவர் கொடுக்காவிட்டால் அது நமது நித்திய பேரின்ப வாழ்வுக்கு தேவையற்றது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மைப் பெற்ற நமது தாய் காலையில் உணவு கேட்டால் தருவார்கள்.

காலையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு,

"அம்மா நான் விளையாடுவதற்கு ஒரு பாம்பைப் பிடித்து தாருங்கள்"

 என்று கேட்டால் தருவீர்களா?

 நிச்சயமாகத் தர மாட்டார்கள்.
'
ஏனென்றால் பாம்பு கடிக்கும் குணமுடையது என்று அம்மாவுக்குத் தெரியும்.

நமது உலகியல் அம்மாவுக்கு நம்மைப் பற்றி தெரிவதை விட பல கோடி மடங்கு அதிகமாக நமது விண்ணகத் தந்தைக்கு தெரியும்.

நம்மைப் பற்றி அளவில்லாத விதமாக தெரிந்து கொண்டு,

நம்மை அளவில்லாத விதமாய் நேசிக்கும் நமது விண்ணகத் தந்தை,

நமது ஆன்மீக வாழ்வுக்கு பயனுள்ள எதையும் நாம் கேட்கும் போது கட்டாயம் தருவார்.

நான் செய்ய வேண்டியதெல்லாம் மூன்றே மூன்று காரியங்கள் தான்.

முதலில் இறைவனை நமது விண்ணகத் தந்தை என்று ஏற்றுக் கொண்டு, நமது வாழ்வை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

அடுத்து அவர் நமக்குத் தேவையானதைத் தருவார் என்று உறுதியாக நம்ப வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அவரை முழு உள்ளத்தோடும், முழு ஆன்மாவோடும் அன்பு செய்ய வேண்டும்.

விசுவாசம், நம்பிக்கை, இறையன்பு இந்த மூன்றும் தான் நமது ஆன்மீக வாழ்வுக்கு உயிரான புண்ணியங்கள்.

விசுவாசம் உள்ளவர்களிடம்தான் நம்பிக்கையும், இறையன்பும் இருக்கும்.


ஆகவே விசுவாசம் உள்ளவர்கள் கேட்பதெல்லாம் உறுதியாகக் கிடைக்கும்.

இங்கே மற்றொரு உண்மையை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் உட்பட நம்மிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ அவை எல்லாம் இறைவன் நமக்கு இலவசமாகத் தந்த பரிசுகள்.

அப்படியானால் விசுவாசமும் இறைவனது பரிசு தான்.

அவர் தருகின்ற பரிசை நாம் முழுமனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இயேசுவின் பொது வாழ்வின் போது அவர் சென்ற இடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கினார்.

அதாவது முதலில் அவர்களுக்கு விசுவாசத்தைப் பரிசாக கொடுத்தார்.

விசுவாசம் என்ற பரிசை முழு மனதோடு ஏற்றுக்கொண்ட நோயாளிகள், 

தாங்கள் இயேசுவிடம் சென்றால் குணம் பெறுவோம் என்ற உறுதியான நம்பிக்கையோடு அவரை அணுகினார்கள்.

இயேசுவிடம் அவர்களை அழைத்து வந்தது அவர்கள் அவரிடமிருந்து பெற்ற விசுவாசம்தான்.

ஆகவேதான் தான் தான் குணமாக்கிய நோயாளிகளை பார்த்து,

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றார்.

நாமும் விசுவதிப்போம்.

நமது ஆன்மீக வாழ்வுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் இயேசுவிடமிருந்து கேட்டுப் பெறுவோம்,

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment