Wednesday, November 1, 2023

சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர். (மத். 5:9)

சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர். (மத். 5:9)

சமம் + தானம் = சமாதானம் = சமமான இடம்.

சமாதானம் என்றால் என்ன என்பதை இறை மகன் இயேசுவின் இவ்வுலக வாழ்க்கையே விளக்கும். 

இறைவன் தன்னுடைய எல்லா பண்புகளிலும் அளவில்லாதவர்.

துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

 காலத்துக்கும் இடத்திற்கும் அப்பாற்பட்ட விண்ணுலகில் வாழ்பவர்.

யாராலும் படைக்கப்படாதவர்.

மனிதர்களாகிய நாம் இறைவனால் ஒன்றும் இல்லாமையிலிருந்து படைக்கப்பட்டவர்கள்.

பிறப்பும் இறப்பும் உள்ளவர்கள்.

நம்முடைய எல்லா பண்புகளிலும் அளவுள்ளவர்கள்.

காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டவர்கள்.

நாம் அவரால் படைக்கப்பட்ட மண்ணுலகில் வாழ்கிறோம்.

 கடவுள் நமது முதல் பெற்றோரைப் படைக்கும் போது பாவ மாசு இல்லாதவர்களாகப் படைத்தார்.

கடவுள் அளவில்லாத பரிசுத்தர்.

அளவுள்ள முதல் பெற்றோர் அவர்களது அளவில் முழுமையாகப் பரிசுத்தமாக இருந்தார்கள்.

அதாவது அளவுள்ள மனிதர்கள் எவ்வளவு பரிசுத்தமாக இருக்க முடியுமோ அவ்வளவு பரிசுத்தமாக இருந்தார்கள்.

   கடவுள் பரிசுத்தராய் இருந்தார்.

 நமது முதல் பெற்றோரும் பரிசுத்தர்களாக இருந்தார்கள்.

ஆனால் அவர்கள் செய்த பாவத்தினால் தங்களது பரிசுத்தத் தனத்தை இழந்தார்கள்.

தாங்கள் இழந்த பரிசுத்தத்தனத்தை மீண்டும் பெற வேண்டுமானால் அவர்களது பாவத்திற்கு அவர்கள் பரிகாரம் செய்து பாவ மன்னிப்பு பெற வேண்டும்.

 ஆனால் அளவில்லாத கடவுளுக்கு எதிராக செய்யப்பட்ட பாவத்திற்கு அளவுள்ள மனிதனால் பரிகாரம் செய்ய முடியாது.

பரிகாரம் செய்ய வேண்டியவர் மனிதனாகவும் இருக்க வேண்டும்,

 கடவுளைப் போல அளவில்லாதவராகவும் இருக்க வேண்டும்.

ஆனால் படைக்கப்பட்ட எந்த மனிதனாலும் கடவுளைப் போல அளவில்லாதவனாக இருக்க முடியாது.

மனிதன் மீது அளவற்ற அன்பு கொண்ட கடவுள் அவனை எப்படியாவது பாவத்திலிருந்து மீட்கத் தீர்மானித்தார்.

அந்த ஒரே காரணத்திற்காக மனிதனுடைய சம நிலைக்கு இறங்கத் தீர்மானித்தார்.

அளவில்லாத கடவுள் அளவுள்ள மனிதனின் நிலைக்கு இறங்கத் தீர்மானித்தார்.

தனது தீர்மானபடி விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கவும்,

பாவம் தவிர மற்ற எல்லா வகையிலும் மனிதனுக்கு சமமான மனிதனாய் பிறக்கவும் தீர்மானித்தார்.

பரிசுத்த தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய இறைமகன், 

தந்தை, மகன், தூய ஆவியின் திட்டப்படி,

நமது முதல் பெற்றோரின் வம்சத்தில் பிறந்த, பாவ மாசற்ற ஒரு கன்னியின் வயிற்றில்  மனுவுரு எடுத்தார்.

அவர்தான் நமது மீட்பராகிய இயேசு.

இயேசு கடவுள் என்ற முறையில் அளவில்லாதவராகவும், 

மனிதன் என்ற முறையில் பிறப்பு இறப்புக்கு உட்பட்ட அளவுள்ளவராகவும் இருந்ததால்

அளவுள்ள மனிதன் அளவில்லாத கடவுளுக்கு எதிராக செய்த பாவத்திற்கு அவரால் பரிகாரம் செய்ய முடிந்தது.

அவரே கடவுளாகையால் மனிதனுடைய பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உள்ளவராக இருந்தார்.

ஆக, மனிதனை விட உயர் நிலையில் இருந்த கடவுள் அவனை மீட்பதற்காக சம நிலைக்கு இறங்கினார்.

அதாவது மனிதனோடு 
சம தானத்திற்கு இறங்கினார்.

கிணற்றுக்குள் விழுந்த மனிதனைத் தூக்க நாம் கிணற்றுக்குள் இறங்குவது போல,

மனிதனைப் பாவ நிலையிலிருந்து பரிசுத்த நிலைக்கு உயர்த்த, மனித நிலைக்கு இறங்கினார்.

மனிதனை உயர்த்த கடவுள் இறங்கினார்.

பாவம் தவிர மற்ற எல்லா வகையிலும் அவர் மனிதனானார். 

கடவுள் (மனிதனாகப்) பிறந்தார்,

கடவுள் ( மனிதனாக ) வாழ்ந்தார். 

;கடவுள் ( மனித சுபாவத்தில் )பாடுகள் பட்டார்.

கடவுள் (மனித சுபாவத்தில் )சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

கடவுள் நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட்டு சிலுவையில் மரித்ததின் மூலம் நமக்குப் பாவ மன்னிப்பைத் தந்தார்.

இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் நாம் அவரோடு சமாதானம் ஆனோம்.

''நல் மனதோர்க்கு சமாதானம் ஆகுக." 

பாவ மன்னிப்பு பெற்றவர்கள் நல் மனதோர் ஆவார்கள்.

அவர்கள் மனதிலும் வாழ்க்கையிலும், சமாதானம் நிலவும்.

'உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத். 5:48)

 என்ற நமது ஆண்டவரின் வார்த்தைகளுக்கு இணங்க 

நமது வானகத்தந்தை பரிசுத்தராய் இருப்பது போல நாமும் பரிசுத்தமானவர்களாக இருக்க வேண்டும்.

பரிசுத்தமானவர்களாக இருந்தால் தான் அவரோடு வாழ நம்மால் விண்ணகத்திற்குச் செல்ல முடியும்.

பரிசுத்தத்தனத்தில் இறைவனோடு சமாதானமாக வாழும் நாம்,

நமது அயலானோடும் சமாதானமாக வாழ வேண்டும்.

மற்றவர்களை விட நாம் பெரியவர்கள் என்று நினைத்தால் 

அவர்களோடு சமாதானமாக வாழ முடியாது.

புண்ணியங்களின் அரசியாகிய தாழ்ச்சியுடன் மற்றவர்களுடன் பழக வேண்டும்.

தற்பெருமை என்ற எண்ணத்திற்கே நமது வாழ்வில் இடம் இருக்கக் கூடாது.

ஏற்ற தாழ்வற்ற சமுதாயத்தில் தான் சமாதானம் நிலவ முடியும்.

அரசனும் ஆண்டியும் இறைவன் முன் சமமானவர்கள்.

முதலாளியும் தொழிலாளியும் இறைவன் முன் சமமானவர்கள்.

தாத்தாவும் பேரனும் இறைவன் முன் சமமானவர்கள்.

மக்கள் அனைவரும் சமம் என்ற உணர்வோடு வாழ்ந்தால் தான் நாட்டில் சமாதானம் நிலவும்.

 ஒரே இறைவனின் பிள்ளைகள் அனைவருக்கும் சமாதானம் உண்டாகுக.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment