Tuesday, December 12, 2023

என் நுகம் இனிது, என் சுமை எளிது."(மத்.11:30)

என் நுகம் இனிது, என் சுமை எளிது."(மத்.11:30)

"ஆண்டவர் எவ்வளவு இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்."
 (தி. பா. 34:8) 
.
ஆண்டவரது வார்த்தைகள், செயல்கள் மட்டுமல்ல ஆண்டவரே இனிமையானவர் தான்.

ஆர்வமுடன் ஆண்டவரது திரு முகத்தை நினைத்துப் பார்த்தாலே மனதில் இனிமை பொங்கும்.

ஆண்டவரது இனிமையை நாம் அனுபவிக்க வேண்டுமானால் நமக்கு அவர் மேல் உண்மையான அன்பு இருக்க வேண்டும்.

யாரிடம் நமது உள்ளத்தைப் 
பறிகொடுத்து விட்டோமோ அவரை நினைத்து நினைத்து இன்பம் காண்பது நமது அனுபவம்.

ஆண்டவரிடம் நமது உள்ளத்தைப் 
பறிகொடுத்து விட்டால் அவரை நினைக்கும் போதெல்லாம் உள்ளத்தில் இனிமை பொங்கும்.

நமக்காக வாழும் நமது பெற்றோர் நமக்காகப்படும் கஷ்டங்களை நினைவில் கொண்டிருந்தால்

நாம் அவர்களுக்காக படும் கஷ்டங்கள் இனிமையாகவே இருக்கும்.

இயேசு நமக்காகப் பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தார்.  

அவரது பாடுகளை நாம் தியானித்தால் அவருக்காகச் சிலுவையைச் சுமக்க நாமே மனமுவந்து முன்வருவோம்.

நமது வாழ்க்கையில் துன்பங்கள் வரும்போது அவற்றை அனுபவிப்பது கஷ்டமாகத் தெரிந்தால்

நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவற்றை நமக்காகப் பாடுபட்ட அவரிடம் ஒப்புக்கொடுத்து விடுவது தான்.

அவரிடம் ஒப்புக்கொடுத்து விட்டால் நமது சுமையை அவர் ஏற்றுக் கொள்வார்.

நமது சுமை கஷ்டமானதாக இருக்கலாம், ஆனால் அவர் இனியவர்.

அவரை நமது உள்ளத்தில் சுமப்பது இனிமையான அனுபவம்.

கசப்பான மருந்தை தேனில் கலந்து சாப்பிடும் போது அது எப்படி இனிமையாக இருக்கிறதோ,

அப்படியே கஷ்டமான துன்பங்களை இயேசுவிடம் ஒப்படைத்துவிட்டு அவரை நமது உள்ளத்தில் சுமப்பது இனிமையாக இருக்கும்.

இயேசுவை தேனாகக் கருதினால் நமது சுமையாகிய மருந்தை அவரிடம் ஒப்படைக்கும் போது,

அவரது இனிமை நமது சுமையையும் இனிமையாக்குகிறது.

நமது அன்னை மரியாள் எவ்வளவு வியாகுலங்களை அனுபவிக்க நேர்ந்தாலும்,

அவற்றை தன் திருமகன் மீது கொண்ட அன்போடு கலந்து அனுபவித்தாள்.


ஆன்மீக ரீதியாக,

அவள் நமது மகிழ்ச்சியின் காரணம்,

துன்புறுவோருக்கு தேற்றரவு.

இயேசுவின் நுகம் அவரது அன்னைக்கு மட்டுமல்ல நமக்கும் இனிமையானது தான்.

பார வண்டியை இழுப்பதற்கான மாட்டை அதன் நுகத்தில் பூட்டுவார்கள்.

வண்டியில் பாரம் இருக்கும்.

மாட்டின் கழுத்தில் நுகம் இருக்கும்.

மாடு நுகத்தை இழுத்துச் செல்லும்.

மாட்டுக்குப் பாரம் கனக்காது.

பார வண்டியை மாடு எளிதாக இழுத்துச் செல்லும்.

இயேசு தன்னை பார வண்டிக்கு ஒப்பிடுகிறார்.

நாம் சுமக்க வேண்டிய சுமையை அவர் மேல் ஏற்றி விட வேண்டும்.

பிறகு அவரது நுகத்தை நமது கழுத்தில் ஏற்றி அவரை இழுத்துச் செல்ல வேண்டும்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தை தனது பைக்கட்டை தந்தையிடம் ஒப்படைத்து விட்டு, 

அவரது கையைப் பிடித்துக் கொண்டு செல்வது போல,

நாம் நமது சுமையை இயேசுவிடம் ஒப்படைத்துவிட்டு

அவரது கையைப் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும்.

நமது சிலுவையை நாம் சுமந்து கொண்டு அவர் பின்னால் செல்ல வேண்டும் என்று அழைக்கும் ஆண்டவர்,

நம்மைப் பார்த்து,

"சிலுவை கனமாக இருந்தால் என்னிடம் வா. அதைச் சுமக்க உனக்கு நான் உதவி செய்கிறேன்." என்று சொல்கிறார்.

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்"

நாம் நோய் நொடிகளால் கஷ்டப்படும்போது ஆண்டவரது மடியில் நமது தலையை வைத்திருப்பது போல் கற்பனை செய்து கொண்டால்,

 நோய் நோயாகத் தெரியாது,
ஆண்டவரது மடியாகத்தான் தெரியும்.

தாயின் மடியில் தலை வைத்து படுத்து உறங்கும் குழந்தையைப் போல,

துன்ப நேரத்தில் இயேசுவின் மடியில் தலையை வைத்து படுத்துறங்க வேண்டும்.

இயேசுவின் நினைப்போடு நாம் அனுபவிக்கும் துன்பத்திற்குப் பரிசாக மோட்சத்தில் அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு காத்திருக்கிறது.

நோய் குணமாக மருந்து சாப்பிடக்கூடாதா?

மருந்து சாப்பிடலாம்.

குணமாக்கும் பொறுப்பை இயேசுவிடம் ஒப்படைத்துவிட்டு,

குணமானாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்,

 குணமாகாவிட்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

என்ன நேர்ந்தாலும் இயேசுவுக்கு நன்றி கூற வேண்டும்.

இவ்வுலகில் வாழ்வதும் அவருக்காகத் தான்.

மறு உலகில் வாழப் போவதும் அவருக்காகத் தான்.

"எல்லாம் உமக்காக,

இயேசுவின் திவ்ய இருதயமே,

எல்லாம் உமக்காக."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment