Saturday, December 9, 2023

அந்நாட்களில் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசேரத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற்றார். (மாற்கு.1:9)

அந்நாட்களில் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசேரத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற்றார். (மாற்கு.1:9)

.ஸ்நாபக அருளப்பர் பாலைவனத்தில் தோன்றி, பாவமன்னிப்படைய மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று அறிவித்துக் கொண்டிருந்தார்.

 யூதேயா, நாடு முழுவதும், யெருசலேம் நகரின் அனைவரும் அவரிடம் போய்த் தங்கள் பாவங்களை வெளியிட்டு, யோர்தான் ஆற்றில் அவரிடம் ஞானஸ்நானம் பெற்று வந்தனர்.
 
பாவம் செய்தவர்கள் ஸ்நாபக அருளப்பரிடம் சென்று யோர்தான் ஆற்றில்  ஞானஸ்நானம் பெற்று வந்தனர்.

பாவமே செய்ய முடியாத இயேசு ஏன் அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற்றார்?

இதே போன்ற இன்னொரு கேள்வி.

பாவம் செய்தவர்கள் தான் தாங்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

பாவமே செய்ய முடியாத இயேசு ஏன் நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரிக்க வேண்டும்?

நீதிமன்றத்தில் ஒரு காட்சி.

குற்றவாளிக் கூண்டில் நிற்பவனைப் பார்த்து நீதிபதி சொல்கிறார்,

"நீ செய்தது தண்டனைக்குரிய குற்றம் என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.

அதற்கான பரிகாரம் செய்தால் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம்.

ஆனால் பரிகாரம் செய்யும் அளவுக்கு உன்னிடம் சக்தி இல்லை.

ஆகவே உனக்குப் பதில் நானே பரிகாரம் செய்கிறேன்.

இனிமேலாவது குற்றம் எதுவும் செய்யாதே."

இந்த நீதிபதியை பற்றி என்ன நினைப்போம்?

நம் விஷயத்தில் கடவுள் செய்ததைத்தான் இவரும் செய்திருக்கிறார்.

நமது பாவத்தின் கனாகனம் யாருக்கு விரோதமாக செய்யப்பட்டதோ அதை பொறுத்து அமையும்.

நாம் அளவுள்ளவர்களாக இருக்கலாம்.

ஆனால் நாம் பாவம் செய்தது அளவில்லாத கடவுளுக்கு எதிராக.

வகுப்பில் ஒருவன் சக மாணவனை அடிப்பதற்கும், ஆசிரியரை அடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. 

சக மாணவனை அடித்த குற்றத்திற்காக கையில் ஒரு பிரம்படி கிடைக்கும்.

ஆனால் ஆசிரியரை அடித்தால் TC 
கிடைக்கும்.

அளவில்லாத கடவுளுக்கு எதிராக செய்யப்பட்ட பாவத்தின் கனாகனமும் அளவற்றது.

ஆகவே பரிகாரமும் அளவற்றதாக இருக்க வேண்டும்.

ஆனால் அளவுள்ள மனிதனால் அளவற்ற விதமாக பரிகாரம் செய்ய முடியாது.

அளவற்றவர் கடவுள் மட்டும் தான்.

ஆனால் மனிதன் செய்த பாவத்துக்கு மனிதன் தான் பரிகாரம் செய்ய வேண்டும்.

ஆனால் அவனால் செய்ய முடியாது.

இந்த பிரச்சனைக்கு மனிதன் சார்பாக தீர்வு காண்பது எப்படி?

பரிகாரம் செய்ய வேண்டியவர் மனிதனாகவும், கடவுளைப் போல அளவில்லாதவராகவும் இருக்க வேண்டும்.

இது எப்படி இயலும்?

இறைவன் நினைத்தால் எல்லாம் இயலும்.

இறைவன் நினைத்தார்.

மனிதன் செய்த பாவத்திற்காக பரிகாரம் செய்பவர் மனிதனாகவும் இருக்க வேண்டும்,

 கடவுளாகவும் இருக்க வேண்டும்.

மனிதன் செய்த பாவத்திற்காக என்பதால் மனிதனாக இருக்க வேண்டும்.

பரிகாரம் அளவற்ற விதமாய் இருக்க வேண்டும் என்பதால் பரிகாரம் செய்பவர் கடவுளாக இருக்க வேண்டும்.

அதற்காக துவக்கமில்லாத காலத்திலிருந்து சுயமாக வாழ்ந்து வரும் கடவுள்,

மனிதன் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டும் எந்த நோக்கத்தோடு, 

துவக்கமும் முடிவும் உள்ள மனிதனாக பிறக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார்.

இந்தப் பணியை தந்தை இறைவன் மகனுக்குக் கொடுக்கிறார்.

இறைமகன் மனுமகனாகப் பிறந்ததின் மூலம் தேவ சுபாவத்திற்கும், மனித சுபாவத்திற்கும் உரியவராகிறார்.

மனித சுபாவத்தில் மனிதன் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்தார்.

அவர் தேவ ஆளாகையால் அவர் செய்த பரிகாரத்தின் பலன அளவில்லாதது.

கடவுளாகிய தன்னைத் திருப்திப் படுத்த போதுமானது.

நமக்காக, நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காக 

துவக்கமும் முடிவும் இல்லாத இறைமகன், பிறப்பும் இறப்பும் உள்ள மனிதவுரு எடுத்தார்.

கஷ்டப்பட முடியாத இறைமகன் பாடுகள் பட்டு மரிப்பதற்காக மனிதவுரு எடுத்தார்.

சர்வ வல்லமையுள்ள கடவுள், பாவம் தவிர, மற்ற எல்லா 
பலகீனங்களும் உள்ள மனிதவுரு எடுத்தார்.

பெரும்பாலான சமயங்களில் நமது பலகீனத்தின் காரணமாக பாவங்கள் செய்கிறோம்.

பூங்காவனத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்த போது அவர் செய்த செபம் நமது பலகீனத்தால் நாம் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாகவே.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட்டு மரிப்பதற்கென்றே மனிதனாகப் பிறந்தவர்,

"அப்பா, தந்தையே, அனைத்தும் உம்மால் கூடும். இத்துன்பக் கலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்." என்று ஏன் ஜெபித்தார்?

நாம் பயம் என்ற பலகீனத்தின் காரணமாக இறைவனின் சித்தத்தை நிறைவேற்ற தவறுவதற்குப் பரிகாரமாக,

பயம் என்ற பலகீனத்தை அவரும் ஏற்றுக்கொண்டு, 

தான் பட போகும் பாடுகளின் வேதனையை நினைத்து பயந்து,

இந்த ஜெபத்தை தந்தையிடம் ஜெபித்தார்.

 ஆனாலும் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதவியாக,

 "ஆகிலும் நான் விரும்பவுது அன்று, நீர் விரும்புவதே ஆகட்டும்" என்றும் ஜெபித்தார்.
 
பாவமே செய்யாத அவர் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய பாடுகள் பட்டு மரிக்கப் போவதற்கு முன் அடையாளமாக,

பாவிகள் பெறவேண்டிய ஞானஸ்தானத்தை பரிசுத்தர் பெற்றார்.

இப்போது ஒரு கேள்வி எழும்.

நமது பாவங்களுக்கு அவரே பரிகாரம் செய்து விட்டாரே,

அப்படியானால் நாம் பரிகாரம் செய்ய தேவை இல்லையா?

அவர் பரிகாரம் செய்துவிட்டார் என்று விசுவாசித்தால் போதாதா?

நாம் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும், 

செய்து அதை இயேசுவின் வேதனை மிகுந்த பாடுகளோடு சேர்த்து பரம தந்தைக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

நமது பரிகாரத்தைப் பலன் உள்ளதாக ஆக்குவது அவர் செய்த பரிகாரம்தான்.

அம்மா சமைத்து சாப்பாட்டை நமது தட்டில் போட்டால் மட்டும் போதுமா?

சாப்பிட வேண்டியது நாம் தானே.

"எனது சொந்த பலன்கள் போதாதாகையால் 

உமது திருமகன்  இயேசு கிறிஸ்துவின் பாடுகளைப் பார்த்து,

உம்முடைய வரப்பிரசாதங்களையும்,
 மோட்ச  பாக்கியத்தையும்  தந்தருளுவீரென்று முழுமனதோடு நம்பியிருக்கிறேன்."

என்று பாவ சங்கீர்த்தனத்தில் ஜெபிக்கிறோம்.

நமது பரிகாரம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளோடு சேர்ந்தால்தான் பலன் தரும்.


தந்தையை நோக்கி ஜெபிக்கும் போது,

"இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்."

என்று கூறி முடிக்கிறோம்.

தந்தையிடம் எதைக் கேட்டாலும் இயேசுவின் பெயரால் கேட்க வேண்டும்.

"நீங்கள் தந்தையிடம் எதைக் கேட்டாலும், அதை என் பெயரால் உங்களுக்குத் தருவார்."
(அரு. 16:23)

இயேசு என்ன செய்தாலும் நமக்காகச் செய்தார்.

நாம் என்ன செய்தாலும் அவருக்காகச் செய்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment