Tuesday, August 29, 2023

"அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)(தொடர்ச்சி)5

"அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)
(தொடர்ச்சி)5

"தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்."

 உண்மையைப் புரிந்து கொள்வதற்கு உதவியாக,

முதலில் ஒரு ஒப்புமை.

நாவல் வாசிப்பவர்களுக்கு,
நாடகம் பார்ப்பவர்களுக்கு,
சினிமா பார்ப்பவர்களுக்கு

ஒரு உண்மை புரிந்திருக்கும்.

ஒவ்வொன்றிலும் ஒரு கதை இருக்கும்.

கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் இடையே நடைபெறும் போராட்டம் தான் கதை.

போராட்டத்தின் இறுதியில் கதாநாயகன் வெற்றி பெறுவான்.

நன்மைக்கும், தீமைக்கும் இடையில் நடைபெறும் போராட்டம் தான் நமது ஆன்மீக வாழ்வு.

நன்மை நமது வாழ்வில் கதாநாயகன்.
தீமை வில்லன்.

கடவுள் நன்மைத் தனமே உருவானவர்.

ஒரே வார்த்தையில் 'நல்லவர்'.

நாம் நல்லவர்களாக வாழ வேண்டும் என்றால் 

அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ள நல்ல பண்புகளின் வழிகாட்டுதலின்படி வாழ வேண்டும்.

அவர் நம்மை அவரது சாயலில் படைக்கும் போது அன்பு, இரக்கம், நீதி போன்ற நல்ல பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

நாம் கடவுளை நேசிக்க வேண்டும் என்றால் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ள பண்புகளுக்கு எந்தவித பங்கமும் ஏற்படாத படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த பண்புகளை நாம் விரும்ப வேண்டும்.

கடவுள் தந்துள்ள பண்புகளை விரும்பினால் தான் நம்மால் கடவுளையும் விரும்ப முடியும்.

இந்த பண்புகளை 'நன்மை' என்ற ஒரே வார்த்தையால் அழைக்கலாம்.

நன்மை தான் நமது ஆன்மீக வாழ்வில் கதாநாயகன்.

இப்பொழுது ஒன்று புரியும்.

தீமை தான் நாம் எதிர்த்துப் போராட வேண்டிய வில்லன்.

நன்மைக்கு ஊற்று இறைவன்.

தீமைக்கு ஊற்று சாத்தான்.

சாத்தானின் சோதனையால் தான் பாவம் அதாவது தீமை உலகுக்குள் நுழைந்தது.

நமது முதல் பெற்றோர் காலத்திலிருந்தே நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம் ஆரம்பித்து விட்டது.

இப்போராட்டத்தில் நாம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான்,

அதாவது, பாவத்திலிருந்து,

 அதாவது, தீமையிலிருந்து விடுதலை பெற்று

 நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான்,

இறைமகன் மனிதனாகப் பிறந்தார்.

பாவத்திலிருந்து விடுதலை பெற மனித இயல்பினால் மட்டும் இயலாது.

சர்வ வல்லமை வாய்ந்த கடவுளுடைய உதவி நம்மோடு இருந்தால் மட்டுமே நம்மால் தீமையை வெல்ல முடியும்.

இந்த உதவியைத் தந்தையிடமிருந்து கேட்டுப் பெறவே

"தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்."

என்று ஜெபிக்கும்படி இயேசு நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.

தீமையின் பண்புகள் நன்மையின் பண்புகளுக்கு நேர் எதிர் மாறானவை.

வெறுப்பு, கல்நெஞ்சம், அநீதி போன்றவை தீமையின் பண்புகள்.

இப்பண்புகளை உடையவன் கடவுளுக்கு ஏற்ற செயல்களைச் செய்ய மாட்டான்.

கடவுளுக்கு ஏற்காத செயல் பாவம்.

கடவுளுக்கு ஏற்ற வாழ்வு வாழவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம்.

முதலில் கடவுளுக்கு ஏற்ற வாழ்வு வாழ நாம் விரும்ப வேண்டும்.

தீமைகள் நிறைந்த வாழ்வு நமது விருப்ப எல்லைக்குள் வரக்கூடாது.

நன்மைத் தனமே உருவான கடவுளுக்கு ஏற்ற வாழ்வு வாழ விரும்புகின்றவர்களே,

'தீமையிலிருந்து எங்களைக் காத்துக் கொள்ளும்' என்று தந்தையை நோக்கி வேண்ட வேண்டும்.

மனித பலவீனத்தினால் தீமையில் விழ நேரிட்டால் தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும் என்று வேண்ட வேண்டும்.

"எனக்கு வேண்டாதவர்களை வெறுப்பேன்,

அவர்கள் என்னிடம் ஏதாவது உதவி கேட்டால் அவர்கள் மீது இரக்கம் வராது"

என்று எண்ணுபவர்கள் இந்த ஜெபத்தைச் சொல்வது வீண்.

பசி உள்ளவர்கள் தான் சாப்பாட்டின் முன் அமர வேண்டும்.

இறைவனுக்கேற்ற வாழ்வு வாழ விரும்புகின்றவர்கள் தான்

கர்த்தர் கற்பித்த ஜெபத்தைச் சொல்ல வேண்டும்.

தந்தையை நோக்கி சொல்வதைச் செய்ய முடியாதவர்கள் ஏன் சொல்ல வேண்டும்?

நல்லவர்களாக, இறைவனுக்கு ஏற்றவர்களாக வாழ விரும்புவோம்.

நமது சுய பலத்தால் அது முடியாதாகையால்

உதவி கேட்டு தந்தையை நோக்கி ஜெபிப்போம்.

நமது சிந்தனையில் கடவுள் இருக்க வேண்டும்.

சிந்தனை சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும்.

"விண்ணகத் தந்தையே உமக்கு ஏற்ற வாழ்வு வாழ விரும்புகிறோம்.

நாங்கள் பலவீனர்கள்.

உமது அருள் வரத்தால் உமக்கு ஏற்ற, 

நன்மைகள் நிறைந்த,

 அருள்வாழ்வு வாழ எங்களுக்கு உதவ வேண்டும்.

உமது அரசில் நித்தியகாலம் உமது பிள்ளைகளாகவும், குடிமக்களாகவும் வாழ அருள் புரிய உம்மை நோக்கி வேண்டுகிறோம்.

உமது திருமகனாகிய இயேசு கிறிஸ்து 

எங்களுக்காக பட்ட வேதனைகள் நிறைந்த பாடுகளைப் பார்த்து

 எங்கள் மீது இரங்கி 

எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment