Tuesday, August 15, 2023

"இரண்டு, மூன்று பேர் என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்."

"இரண்டு, மூன்று பேர் என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்."(மத்.18:20)

கடவுள் எங்கும் இருக்கிறார்.

அவரால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனிடமும் அவனைப் பராமரிப்பதற்காக கடவுள் இருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனிடமும் இருந்து அவனைப் பராமரித்து வரும் கடவுள் ஏன் 

"இரண்டு, மூன்று பேர் என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்."

என்று சொல்கிறார்?

ஒரு மனிதன் தனியாக இருப்பதற்கும், 

இரண்டு, மூன்று பேரோடு இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

மனிதன் இரண்டு, மூன்று பேரோடு இருக்கும்போது ஒரு சமூகத்தில் இருக்கிறான்.

சமூகத்தில் இருக்கும்போது சமூகம் சார்ந்த சில விதிமுறைகளுக்கு அவன் கட்டுப்பட்டிருக்கிறான்.

மற்றவர்களோடு இருக்கும் போது அன்பு என்னும் உறவினால் பிணைக்கப்பட்டிருக்கிறான்.

சமூகத்தில் உள்ளவர்கள் அன்பு உறவோடு பழகினால் அவர்களிடம் சமாதானம் நிலவும்.

அன்புக்கு எதிரான பண்புகளோடு பழகினால் சமூகம் சண்டைக் காடாக மாறிவிடும்.

இரண்டு, மூன்று பேரோடு இருப்பதற்கும், 

இரண்டு, மூன்று பேரோடு கடவுள் பெயரால் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

வெறுமனே இரண்டு மூன்று பேரோடு இருந்தால் அங்கு இருப்பது உலகம் சார்ந்த ஒரு சமூகம்.

கடவுள் பெயரால் இரண்டு மூன்று பேரோடு இருந்தால் அது இறைச் சமூகம்.

இறையன்பினாலும் பிறர் அன்பினாலும் பிணைக்கப்பட்டு இருப்பது இறைச் சமூகம்.

இறைச் சமுகத்தில் இறைவன் இருப்பதால் அங்கு அன்புக்கு எதிரான பண்புகளுக்கு இடமே இல்லை.

கடவுள் அன்புமயமானவர்.

ஒளி இருக்கும் இடத்தில் இருட்டு இருக்க முடியாது.

அன்பு மயமான கடவுள் இருக்கும் சமூகத்தில் அன்புக்கு எதிரான பண்புகள் இருக்க முடியாது.

கடவுள் சமாதானமே உருவானவர்.

சமாதானமே உருவான கடவுள் இருக்கும் இடத்தில் சமாதானமும் அதற்கு உயிரான அன்பும் நிலவும்.

கடவுளின் பேரால் தனியாக இருக்கும் மனிதனிடமும் இறையன்பு இருப்பதால் மன அமைதி நிலவும்.

கடவுளின் பெயரால் கூடி இருக்கும் இறை சமூகத்தைப் பற்றி சிறிது தியானிப்போம்.

மனிதன் முதல் முதலில் சந்திக்கும் இறைச் சமூகம் அவன் பிறந்து வளரும் குடும்பம்.

குடும்பத்தில் பெற்றோர், சகோதர சகோதரிகளோடு, அவர்களை ஆன்மீக ரீதியாகப் பராமரிப்பதற்காக கடவுள் இருக்கின்றார்.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் நாம் முதலில் சந்திப்பது நம்மோடு வாழும் இறைவனைத் தான்.

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால்தான் கண்விழிக்கிறோம்.

இறைவனிடம் உறவாடி விட்டு, அவரோடு தான் நமது மற்ற கடமைகளை ஆரம்பிக்கிறோம். 

நாம் பல் துலக்கும் போது கடவுள் நம்மோடு இருக்கிறார்.

 நாம் குளிக்கும்போது கடவுள் நம்மோடு இருக்கிறார்.

நமது பெற்றோரிடமும், சகோதர சகோதரிகளிடம் பேசும்போதும் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

நாம் சாப்பிடும் போதும் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

அலுவலக பணிக்கு கிழம்பும் போதும் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

 நமது ஒவ்வொரு அசைவின்போதும் கடவுள் நம்மோடு இருப்பதை உணர வேண்டும்.

அவரன்றி அணுவும் அசையாது.

நமது அசைவுகளின் போது நமக்கு என்ன நேர்ந்தாலும் அது நம்மோடு இருக்கும் இறைவன் சித்தப்படி தான் நேர்ந்திருக்கும்.

நாம் தவறி கீழே விழுந்தாலும், அதனால் உடலில் காயம் ஏற்பட்டாலும் அதுவும் இறைவன் சித்தப்படி தான் நேர்ந்திருக்கும்.

இந்தத் தெளிவு நமக்கு இருந்தால் நமக்கு என்ன நேர்ந்தாலும் நமது மகிழ்ச்சி சிறிதும் கூட குறையாது.

குடும்பத்தில் இறைவன் இருப்பதால் அதை உணர்ந்து அவரோடு வாழும்போது குடும்பத்தில் அன்பும், சமாதானமும், மகிழ்ச்சியும் எப்போதும் நிலவும்.

தங்களோடு இறைவன் இருப்பதை உணர்ந்து வாழும் பெற்றோர்
 
குடும்ப உறுப்பினர்களிடம் இறைவனுக்கு எதிரான எதையும் செய்யச் சொல்ல மாட்டார்கள்.

ஆகவே குடும்பத்தில் பாவம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அவர்கள் குடும்பத்தை இறைவனின் வழியில் நடத்துவதால் இவ்வுலகில் வாழ்ந்தாலும் குடும்பம் விண்ணகம் நோக்கி ஆன்மீக நடை போடும்.

குடும்பமே இறை உணர்வோடு வாழ்வதால்  
.
நற்செய்தியை வாசித்தல், தியானித்தல், 
காலை மாலை குடும்ப ஜெபம், தவறாமல் ஞாயிறு திருப்பலி, திருவிருந்து,
இன்னும் இது போன்ற ஞான காரியங்களில் அக்கறை காட்டுவார்கள்.

குடும்பமே திருத் குடும்பமாகத் திகழும். 

குடும்ப வாழ்வில் நாம் சம்பாதிக்கும் இறைவனின் அருள் வரங்கள் 

குடும்பத்திற்கு வெளியே உள்ள சமூகத்திலும் நாம் சிறு சிறு இறைச் சமூகங்களை உருவாக்க உதவும்.

வெளி உலகில் நாம் யாரோடெல்லாம் பழகுகிறோமோ அவர்களெல்லாம் நமது ஆன்மீக உறவுக்குள் வருவார்கள்.

குடும்பத்தில் நம்மோடு வாழும் கடவுள் நாம் பழகும் நண்பர்கள் மத்தியிலும் வாழ்வார்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்மோடு வாழும் கடவுளோடு அவர்களோடும் வாழ வேண்டும்.

ஒவ்வொரு இறைச் சமூகத்தையும் இறைவன் ஆசீர்வதித்து வழி நடத்துவார்.

எல்லா கிறிஸ்தவர்களும் தாங்கள் செல்லும் இடமெல்லாம் இறைச் சமூகங்களை உருவாக்கிக் கொண்டே போனால் காலப் போக்கில் நாம் வாழும் நாடே ஒரு பெரிய இறைச் சமூகமாக மாறிவிடும்.

நாம் செல்லும் இடமெல்லாம் நம்மோடு வாழும் இறைவனோடு செல்வோம்.

நம்மை வழிநடத்தும் கடவுள் நாம் யாரோடெல்லாம் பழகுகிறோமோ அவர்களையெல்லாம் வழி நடத்துவார்.

இறைவன் நம்மோடு வாழ்வதால் நமது வாழ்வு ஒரு முன்மாதிரிகையான வாழ்வாக மாறும்.

நாம் செல்லும் இடமெல்லாம் நற்செய்தியை வாழ்ந்து காட்டினால்

அதுவே மிகப்பெரிய நற்செய்தி அறிவிப்புப் பணியாகும்.

இயேசு சொல்கிறார்,

"யாரோடு பழகினாலும் என் பெயரால் பழகுங்கள். நான் உங்கள் மத்தியில் வாழ்ந்து உங்களை வழி நடத்துவேன்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment