Thursday, August 24, 2023

"போதகரே, திருச்சட்டத்தின் பெரிய கட்டளை எது ?" என்று அவரைச் சோதிக்கக் கேட்டான்."( மத்.22:36)

 "போதகரே, திருச்சட்டத்தின் பெரிய கட்டளை எது ?" என்று அவரைச் சோதிக்கக் கேட்டான்."
( மத்.22:36)

இயேசுவின் பொது வாழ்வின் போது அவர் எங்கு சென்றாலும் அவரின் பின்னாலே சென்ற மக்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம்.

அவரின் நற்செய்தியைக் கேட்கவும்,

தங்களது நோய்களிலிருந்து விடுதலை பெறவும் விரும்பி அவர் பின்னால் சென்ற பாமர மக்கள் முதல் வகை.

அவரது பேச்சுக்களில் குறை கண்டுபிடிக்கவும்,

அவரைக் கொல்வதற்காகத் திட்டம் தீட்டி அதற்கான நேரத்தை அறிவதற்காக அவர் பின்னால் சென்ற படித்த அறிஞர் பெருமக்களாகிய

சதுசேயர், பரிசேயர், மறைநூல் அறிஞர்கள், யூத சமய குருக்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோர் இரண்டாவது 
வகையைச் சேர்ந்தவர்கள்.

ஒரு நாள் உயிர்த்தெழுதல் பற்றி சதுசேயர் கேட்ட கேள்விக்கு  இயேசு சரியாகப் பதில் சொன்னதைக் கேட்டு வெறுப்படைந்த 

பரிசேயர்களைச் சேர்ந்த ஒரு சட்ட வல்லுநர் இயேசுவைச் சோதிப்பதற்காக ஒரு கேள்வி கேட்டார்.

முதலாவது அவர் ஒரு சட்ட வல்லுநர். அவர் கேட்ட கேள்விக்கு அவருக்குப் பதில் தெரியும்.

அடுத்து அவர் கேள்வி கேட்டது பதிலைத் தெரிந்து கொள்வதற்காக அல்ல, மாறாக இயேசுவை சோதிப்பதற்காக.

பதிலில் ஏதாவது குற்றம் இருக்கிறதா என்பதைக் கண்டு பிடித்துச் சுட்டிக் காண்பிப்பதற்காக.

அவர் கேட்ட கேள்வியும், இயேசு கூறிய பதிலும் நம் அனைவருக்கும் தெரியும்.

இயேசுவின் காலத்தில் மட்டுமல்ல,

நமது காலத்தில் கூட, அன்று வாழ்ந்தது போல இரண்டு வகையினர்

நம் மத்தியில் வாழ்கின்றனர்.

 மீட்பு பெறுவதற்காக மட்டும் வாழ்பவர் ஒரு வகையினர்.

இவர்கள் தாங்கள் பாவிகள் என்பதை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு,

பாவத்திலிருந்து விடுபட்டு,

பரிசுத்தமான புண்ணிய வாழ்வு வாழ்ந்து,

நமது மீட்பரோடு நித்திய காலம் வாழ்வதற்காக விண்ணகம் செல்வது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்கள்.

 உலகப் பொருள்களின் மீதுள்ள பற்றை விட்டு, ஆன்மீகத்தில் மட்டும் பற்றுக் கொண்டு வாழ்வார்கள்.

தங்களிடம் உள்ள உலகப் பொருள்களை ஆன்மீக வாழ்வுக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள்.

இறையன்பு பணிகளுக்கும், பிறர் அன்பு பணிகளுக்கும் மட்டுமே அவற்றை பயன்படுத்துவார்கள்.

சுய இன்பத்திற்காக அவற்றைப் பயன்படுத்த மாட்டார்கள்.

அவர்களுக்கு இறைவனுடைய பராமரிப்பின் மீது முழுமையான நம்பிக்கை இருக்கும்.

ஆகவே தங்களுக்கு எது நேர்ந்தாலும் இறைவனது விருப்பப்படிதான் நேர்ந்திருக்கும் என்று நம்பி,

எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

உலக பார்வையில் அது வெற்றியாக இருக்கலாம்,

 தோல்வியாக இருக்கலாம்,

 இன்பமாக இருக்கலாம்,

 துன்பமாக இருக்கலாம்,

ஆன்மீகப் பார்வையில் அது இறைவனுடைய திருவுளம்.

அவர்களைப் பொறுத்த மட்டில்,
வியாதிகள் போன்ற துன்பங்கள்

இயேசுவுக்காகச் சுமக்க வேண்டிய சிலுவைகள்.

எப்படி ஒரு பள்ளி மாணவன் தனக்கு ஒரு புதிய பாடப் புத்தகம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவானோ,

அப்படியே இவர்கள் தங்களுக்குப் புதிய நோய் நொடிகள், துன்பங்கள் ஏற்பட்டால்,

அவற்றை தாங்கள் பாவப் பரிகாரம் செய்ய கிடைத்திருக்கும் புதிய வாய்ப்புகள் என நம்பி மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள்.

மண்ணுலகில் வாழ்ந்தாலும் விண்ணுலகையே நினைத்துt வாழ்வதால் 

அவர்கள் மண்ணுலகில் விண்ணுலக வாழ்வின்  முன் ருசியை (Pretaste) அனுபவித்துக் கொண்டு வாழ்வார்கள்.

ஒரு வகையில் விண்ணுலக வாழ்வை மண்ணுலகிலே ஆரம்பித்து விடுவார்கள்.

அடுத்த வகையினர் இதற்கு எதிர்மாறானவர்கள்.

இயேசுவின் காலத்திய 
சதுசேயர்களையும், பரிசேயர்களையும், சட்ட வல்லுநர்களையும் போன்றவர்கள். 

இவர்களும் கோவிலுக்குப் போவார்கள்,

 வழிபாட்டில் கலந்து கொள்வார்கள்,

ஜெபக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள்

ஆனால் எங்கு சென்றாலும் ஆன்மீகத்தை வாழ்வதைவிட,

 மற்றவர்களிடம் குற்றம் குறைகள் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்கள் வாழும் இடத்தில் சமாதானம் இருக்காது.

மற்றவர்களைத் திருத்துவதாக நினைத்துக்கொண்டு,

இவர்கள் பேசுகின்ற பேச்சுகளாலும், செய்கின்ற செயல்களாலும்,

பிரச்சனைகள் மட்டுமே தோன்றும்.

பங்கு நிர்வாகக் கூட்டங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தி பங்குக் குருவுக்கு தலைவலி கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்.

பைபிள் வாசிப்பார்கள், வாழ்வதற்கு அல்ல வாதாடுவதற்கு.

வாசித்த வசனப்படி தாங்கள் வாழ்வதை விட,

யார் யார் வாழ்கின்றார்கள்,
 யார் யார் வாழவில்லை என்பதை ஆராய்வதிலேயே குறியாக இருப்பார்கள்.

தேவத்திரவிய அனுமானங்களைப் பெறுவார்கள்,

ஆனால் உரிய தயாரிப்பு இருக்காது.

காலையில் வீட்டில் பாத்திரங்களைக் கழுவாமல்

 அவற்றில் உணவை வைத்துச் சாப்பிட்டால் 

உணவு தரும் பயனை விட 
வியாதிக் கிருமிகளின் தொல்லையே அதிகமாக இருக்கும்.

தேவத்திரவிய அனுமானங்களைப் பெறுமுன் நமது ஆன்மா சுத்தமாக இருக்கிறதா என்பதை முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும்.

அசுத்தமான ஆன்மாவோடு அவற்றைப் பெற்றால் அசுத்தம் இன்னும் அதிகமாகும்.

அநேகர் பாவசங்கீர்த்தனத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.

அன்று வாழ்ந்த சதுசேயர்களும், பரிசேயர்களும் இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மரிக்க காரணமாக இருந்தார்கள்.

இன்று அவர்களைப் போல் வாழ்பவர்கள் இயேசுவைப் பாடுகள் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பரிசேயர்களைப் போல வாழாமல்,

மீட்புப் பெற வாழ்ந்த பாவிகளைப் போல் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment