இயேசு தாபோர் மலையில் உரு மாறிய போது, அவரோடு மோயீசனும் எலியாசும் பேசிக் கொண்டிருந்தனர்.
இக்காட்சியை மிகவும் ரசித்த இராயப்பர்
''ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! நீர் விரும்பினால் உமக்கு ஒன்றும், மோயீசனுக்கு ஒன்றும், எலியாசுக்கு ஒன்றுமாக இங்குக் கூடாரம் மூன்று அமைப்பேன்-"
என்று கூறினார்.
இராயப்பருடைய இந்தக் கூற்று அவரது ஆன்மீக மனப்பக்குவத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
''நீர் விரும்பினால்" என்ற வார்த்தைகள்
நாம் இயேசுவை நோக்கி ஜெபிக்கும் போது நமது மனப்பக்குவம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெளிவு படுத்துகின்றன.
நமது ஜெபம் எதுவாக இருந்தாலும் அது இயேசுவுக்குப் பிடித்தமானதாக இருந்தால் மட்டும் கேட்கப்பட வேண்டும் என்ற மனப்பக்குவத்தோடு நாம் ஜெபிக்க வேண்டும்.
இதற்கு இராயப்பர் முன்மாதிரிகை.
அடுத்து மலையில் இயேசு, மோயீசன், எலியாசு, இராயப்பர், யாகப்பர், அருளப்பர் ஆகிய ஆறு பேர் இருந்தார்கள்.
ஆனால் இராயப்பர் "இயேசு, மோயீசன், எலியாசு ஆகிய மூவருக்கு மட்டும் கூடாரம் அமைப்பேன்" என்று கூறுகிறார்.
தன்னைப் பற்றியும், தனது சகோதர சீடர்களைப் பற்றியும் அவர் கவலைப்படவில்லை.
அவரது எண்ணம் முழுவதும் ஆண்டவரைப் பற்றியே இருந்தது.
இதன் மூலம் நமது ஜெபத்தில் இருக்க வேண்டிய சுயநலமற்ற தன்மைக்கு இராயப்பர் முன்மாதிரிகையாய் விளங்குகிறார்.
இராயப்பரின் ஜெபத்தின் அடிப்படையில் நம்மைப் பற்றி நாமே சிறிது பரிசோதித்துப் பார்ப்போம்.
நாம் தினமும் ஜெபிக்கிறோம்.
"ஆண்டவரே எனது விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளும்."
என்று ஜெபிக்கிறோமா,
"ஆண்டவரே உமக்கு விருப்பம் இருந்தால் எனது விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளும்."
என்று ஜெபிக்கிறோமா?
கிறிஸ்தவ வாழ்வே கிறிஸ்துவுக்கு விருப்பமான வாழ்வு தான்.
நமது வாழ்வு நல்ல வாழ்வாக இருந்தாலும் அது கிறிஸ்துவுக்கு விருப்பமில்லாத வாழ்வாக இருந்தால் நாம் நமது வாழ்வைத் தான் வாழ்கிறோம், கிறிஸ்தவ வாழ்வை அல்ல.
ஆகவே நாம் ஜெபிக்கும் போதெல்லாம்,
"ஆண்டவரே என்னை உமது விருப்பப்படி வழி நடத்தும்.
உமது விருப்பப்படி நான் வாழ உமது அருள் வரங்களைத் தாரும்.
உமது சித்தத்தை என்னில் நிறைவேற்றும்."
என்று ஆண்டவரிடம் கேட்க வேண்டும்.
"உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக" என்ற நமது தினசரி ஜெபத்தின் பொருள் இதுதான்.
"விண்ணகவாசிகள் உமது சித்தப்படி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நாங்களும் அப்படியே வாழ எங்களுக்கு வரம் தாரும்"
என்று தினமும் ஜெபிக்கிறோம்.
ஆனால் நமது ஆசைகள் நிறைவேற வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம்.
"நான் எழுதியுள்ள தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்க அருள் புரியும்.
நான் விண்ணப்பித்திருக்கின்ற வேலை எனக்குக் கிடைக்க உதவி அருளும்.
எனக்கு நல்ல சம்பளம் கிடைக்க உதவியருளும்.
நான் விரும்புகின்ற பெண்ணை மணம் முடிக்க உதவியருளும்.
முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறக்க அருள் புரியும்."
என்றுதான் விண்ணப்பிக்கின்றோம்.
நாம் ஆசைப்படுகின்ற படி எதாவது நடக்காவிட்டால்
"அது நடக்க வேண்டும் என்பது இறைவனது சித்தமல்ல."
என்ற உண்மையை தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எது நடக்கிறதோ அதுவே இறைவன் சித்தம் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
யாகப்பரும் அருளப்பரும் இயேசுவின் ஆட்சியில் உயர்ந்த பதவிகள் கேட்டார்கள்.
ஆனால் இராயப்பர் எந்த பதவியும் கேட்கவில்லை.
அவர்தான் திருச்சபைக்குத் தலைவர் ஆக வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம்.
அதுவே நிறைவேறியது.
இராயப்பர் தனக்காகவோ, தன்னோடிருந்த மற்ற சீடர்களுக்காகவோ எதுவும் கேட்கவில்லை.
இயேசுவுக்காகவும் அவரோடு பேசிக் கொண்டிருந்த மோயீசனுக்காகவும், எலியாசுவுக்காகவுமே கேட்டார்.
நாம் எப்படி?
நமக்காக மட்டும் ஜெபிக்கிறோமா அல்லது நமது அயலானுக்காகவும் ஜெபிக்கிறோமா?
நமது உறவினர்கள் அளவிலும் சரி, நமது நாட்டளவிலும் சரி, உலகளவிலும் சரி எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றன.
அவற்றுக்கு நம்மால் நேரடியாகத் தீர்வு காண முடியாது.
அவற்றுக்குத் தீர்வு ஏற்பட எல்லாம் வல்ல இறைவனிடம் நாம் எப்போதாவது ஜெபிக்கிறோமா?
நம்மை நாம் நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிக்க வேண்டும் என்பது நமது ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளை.
மற்றவர்களை நேசிப்பது உண்மையானால் அவர்களுக்காக நாம் தினமும் ஜெபிப்போம்.
நமது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை ஒத்தி வைத்துவிட்டு மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு முதலிடம் கொடுப்போம்.
நாம் பட்டினி இருந்தாவது மற்றவர்களுக்கு உணவு கொடுப்போம்.
ஆடம்பரமான உடையணியாமல் சாதாரண உடை அணிந்து, மீதம் இருக்கும் பணத்தில் உடை அற்றோருக்கு உடை வாங்கிக் கொடுப்போம்.
நமது ஆடம்பர வசதிகளைக் குறைத்து ஏழைகளுக்கு வசதிகள் செய்து கொடுப்போம்.
இராயப்பரது தன்னலம் அற்ற, பிறர் நலம் பேணும் சுபாவம் தான் அவரைத் திருச்சபைக்குத் தலைவர் ஆக்கியது.
சுயநலத்தை மட்டுமே விரும்புவருக்குத் தலைமை பதவி ஏற்றதல்ல, பதவியே ஏற்றதல்ல.
சுயநலமிகள் பதவியைத் தங்கள் வசதிகளைப் பெருக்கவே பயன்படுத்துவர்.
நாம் இப்போது தியானித்த வசனத்திலிருந்து இரண்டு பாடங்களை கற்றுக் கொள்வோம்.
1. ஆண்டவரது விருப்பப்படியே வாழ்வோம். 'உமக்கு விருப்பம் இருந்தால்' என்ற வார்த்தைகளோடு நமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்போம்.
2. நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் பிறர் நலத்தையே நாடுவோம். நாம் நமக்குச் செய்ய விரும்புவதை மற்றவர்களுக்கும் செய்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment