Monday, August 7, 2023

""காற்று பலமாயிருப்பதைக் கண்டு அஞ்சி மூழ்கப்போகையில், "ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று அலறினார்."(மத்.14:30)

"காற்று பலமாயிருப்பதைக் கண்டு அஞ்சி மூழ்கப்போகையில், "ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று அலறினார்."(மத்.14:30)

இயேசு கடலின் மேல் நடந்து வருவதைப் பார்த்த இராயப்பர் தானும் அவ்வாறே வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்.

இயேசுவும், "வா" என்றார்.
'
 இராயப்பரும் படகினின்று இறங்கிக் கடல்மீது நடந்து இயேசுவை நோக்கி வந்தார்.

திடீரென்று மூழ்க ஆரம்பித்தார்.

ஏன்?

காற்று பலமாக வீச ஆரம்பித்தது.

நமது பிரச்சனையே அதுதான்.

தியானத்துக்குப் போகிறோம். இனி பக்தியுள்ள நல்ல கிறிஸ்தவனாக வாழ வேண்டும் என்று தீர்மானம் எடுக்கிறோம்.

சில நாட்கள் வாழவும் செய்கிறோம்.

நம்மைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்து சோதனை புயல் வீச ஆரம்பிக்கிறது.

தியானத்தில் எடுத்த தீர்மானம் ஆட்டங்கொடுக்க ஆரம்பிக்கிறது.

அப்போது இராயப்பரைப் போல கத்த வேண்டும்.

"ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்"

ஆண்டவர் உதவிக்கு வருவார்.

தனது கையை நீட்டி, நம்மைப் பிடித்து, "குறைவான விசுவாசம் உள்ளவனே, ஏன் தயங்குகிறாய் ?" என்பார்.

இராயப்பர் கடலில் மூழ்க ஆரம்பிப்பதற்கும்,

நாம் தியானத்தில் எடுத்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் போவதற்கும்

ஒரே காரணம்தான்.

விசுவாச பற்றாக்குறை.

"இயேசு எனது மீட்பர்" என்று ஏற்றுக் கொள்வது மட்டும் விசுவாசம் அல்ல.

விசுவாச பிரமாணத்தை பாராமல் ஒப்புவித்தால் நாம் விசுவாசிகள் ஆகிவிட மாட்டோம்.

விசுவாசி என்ற பெயர் கிடைக்கும், அவ்வளவுதான்.

ஒரு பையனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டால் அவனுக்கு மாணவன் என்ற பெயர் கிடைக்கும்.

ஆனால் அவன் தன் பாடங்களை ஒழுங்காகக் கற்று, சரியான முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் தான் அவன் மாணவன்.

ஆண்டவரை மீட்பராக ஏற்றுக் கொண்டு, அர்ப்பண வாழ்வு வாழ்ந்தால்தான் நாம் விசுவாசிகள்.

நற்செய்தியை ஏற்றுக்கொண்டு, ஞானஸ்நானம் பெற்றவுடன் நான் கிறிஸ்தவர்கள் ஆகிவிட முடியாது.

கிறிஸ்தவர்கள் என்ற பெயர்  கிடைக்கும்.

ஆனால் நற்செய்தியை வாழ்ந்தால்தான் நாம் உண்மையான கிறிஸ்தவர்கள்.


 "என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று. சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான்.

வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான்."

வெறும் சொல் அல்ல,
 செயல் மட்டுமே வெற்றியைத் தரும்.

தன்னால் குணம் பெற்றவர்களை பார்த்து இயேசு சொல்வது,

"உன் விசுவாசம் உன்னை குணம் ஆக்கிற்று."

நமது ஆன்மீக நோய்களிலிருந்து குணம் பெற்று 

அதன் விளைவாக விண்ணகம் செல்ல வேண்டுமென்றால் 

நாம் நம்பினால் மட்டும் போதாது.

 நமது நம்பிக்கையை வாழ வேண்டும்.

 எந்த அளவு நமது நம்பிக்கை நமது வாழ்க்கையில் பிரதி பலிக்கிறதோ, அந்த அளவு விண்ணகத்தில் நமது பேரின்பம் இருக்கும்.

சாத்தானுக்குக் கூட இயேசு உலக மீட்பர் என்பது தெரியும், நம்மை விட நன்றாகவே தெரியும்.

ஆனால் சாத்தானால் விண்ணக வாழ்வுக்குள் நுழைய முடியாது.

செயலில் பிரதிபலிக்காத நம்பிக்கை சக்கரம் இல்லாத வண்டி.

சக்கரம் இல்லாத வண்டியால் நகர முடியாது.

 செயலில் பிரதிபலிக்காத நம்பிக்கையால் ஆன்மீகத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படாது.

ஓட்டப் பந்தயத்தில் Starting point லேயே நிற்பவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்?

இராயப்பர் முதலில் விசுவாசத்தோடுதான் செயலில் இறங்கினார்.

ஆனால் செயலின்போது சந்தேகம் ஏற்பட்டது. மூழ்க ஆரம்பித்தார்.

ஆனால் உடனே "ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று கூறி,

ஆண்டவரை உதவிக்கு அழைத்தார்.

இதை நாமும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.

விசுவாச உணர்வோடு தான் ஆன்மீக வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.

பிரச்சனைகள் ஏற்படும் பொழுது ஆன்மீக வாழ்க்கையில் தளர்ச்சி ஏற்படுகிறது.

உலகில் வாழும் வரை பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.

நாமும் பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் ஆண்டவரை உதவிக்கு அழைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

ஆண்டவரும்,  

"அற்ப விசுவாசம் உள்ளவனே," என்று நம்மைக் கடிந்து கொண்டாலும் கட்டாயம் தனது கரத்தை நீட்டி நமக்கு உதவி செய்வார்.

24 மணி நேரமும் நாம் ஆண்டவரை நோக்கி ஜெபித்துக் கொண்டிருந்தால்,

அதாவது,

நாள் முழுவதும் ஆண்டவரின் பிரசன்னத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தால்

வரக்கூடிய பிரச்சனைகள் ஆண்டவரைப் பார்த்தவுடன் நம்மை அண்டாமல் போய்விடும்.

"பிரச்சனைகள் வந்தால் ஜெபிப்போம்"

என்று எண்ணிக் கொண்டிராமல் நாள் முழுவதும் ஆண்டவரின் கரம் பிடித்து நடப்போம்.

ஆண்டவர் நம்மை மூழ்க விடமாட்டார்.

 நாள் முழுவதும் ஆண்டவரோடு நடப்போம்'

சோதனைகளால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment