(மத்.25:10)
விண்ணரசை மணமகனை எதிர்கொள்ளச் சென்ற பத்துக் கன்னியருக்கு ஒப்பிட்ட இயேசு
விளக்குடன் விழிப்பாக இருந்த ஐந்து கன்னியர்கள் மணவீட்டில் நுழைந்ததாகவும்,
தயாராக இல்லாத ஐந்து கன்னியர்கள் மணவீட்டில் நுழையவில்லை என்றும் கூறுகிறார்.
இயேசுவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களை இரு வகையினராக பிரிக்கலாம்.
அவரோடு விண்ணகத்திற்குள் நுழைவதற்காக ஒவ்வொரு வினாடியும் முழு தயாரிப்போடு காத்துக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் முதல் வகையினர்.
வரும்போது பார்த்துக் கொள்வோம் என்று தங்களது ஆன்மீக காரியங்களை விட உலகைச் சார்ந்த காரியங்களில் அதிகமாக ஈடுபட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் இரண்டாவது வகையினர்.
முதல் வகையினர் இயேசு கூறிய உவமையில் வரும் முதல் ஐந்து கன்னியர்களைப் போல அவர் வந்தவுடன் அவரோடு விண்ணக வாழ்வுக்குள் நுழைந்து விடுவர்.
இரண்டாவது வகையினருக்கு உவமையில் வரும் இரண்டாவது கன்னியர்களுக்கு நேர்ந்தது போல நேரலாம்.
"வாழ்பவன் நானல்ல: என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே"
(கலாத்.2:20)
என்ற புனித சின்னப்பரின் வார்த்தைகளை இங்கு நினைவு கூறுவோம்.
முதல் வகை கிறிஸ்தவர்கள் வாழவில்லை, கிறிஸ்து அவர்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நம்மில் கிறிஸ்து வாழ்வதுதான் உண்மையான கிறிஸ்தவ ஆன்மீக வாழ்வு.
நம்மில் கிறிஸ்து வாழாமல் நாம் மட்டும் அவருக்காக வாழ்ந்து கொண்டிருந்தால்
நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் கிறிஸ்துவை விட நாம்தான் அதிகமாக இருப்போம்.
கிறிஸ்து வாழாமல் தாங்கள் மட்டும் கிறிஸ்துவுக்காக வாழ்பவர்கள்
தாங்கள் நினைப்பதையும், சொல்வதையும், செய்வதையும் கிறிஸ்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
இதில் என்ன தவறு?
நம்மை கிறிஸ்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நமக்கு முதலிடம் கொடுக்கிறோம்.
"ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன்,
நான் உமக்காக எனது அயலானை நேசிக்கிறேன்,
நான் உமது கட்டளைகளை அனுசரிக்கிறேன்,
ஆகவே என்னை விண்ணகத்திற்குள் ஏற்றுக்கொள்ளும்"
நமது வாழ்வில் சிலவற்றைக் கிறிஸ்துவுக்குக் கொடுத்து விட்டு, அதற்குப் பதிலாக நமக்கு வேண்டியதை எதிர்பார்க்கிறோம்.
ஆனால் முதலில் கிறிஸ்துவை நமக்குள் குடியேற்றி விட்டால்
நம்மில் சிந்திப்பவரும், பேசுபவரும், செயல் புரிபவரும் அவராகவே இருப்பார்.
சிந்திப்பது நாம் அல்ல, இயேசுவே நம்மில் சிந்திக்கிறார்.
பேசுவது நாமல்ல , இயேசுவே பேசுகிறார்.
செயல் புரிவதும் நாமல்ல , இயேசுவே செயல் புரிகிறார்.
நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில் இயேசுவைத் தான் பார்ப்பார்கள்.
நம்மை "கிறிஸ்து அவர்கள்" என்று சொல்வார்கள்.
நமது ஆன்மாவில் அவர் முற்றிலும் வாழ்வதால் நமது உடலை அவரே இயக்கிக் கொண்டிருப்பார்.
நமக்கு என்ன நேர்ந்தாலும் அது இயேசுவுக்கே நேர்ந்து கொண்டிருக்கும்.
நமக்குத் துன்பங்கள் வந்தால் அவற்றைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை,
ஏனெனில் நமக்காகத் துன்பப்படுபவர் அவரே.
அவரோடு சேர்ந்து தான் சிலுவையைச் சுமப்போம்.
சிலுவையின் முழு சுமையையும் அவரே ஏற்றுக் கொள்வார்.
அகில உலகின் பாவச் சுமையையும் சிலுவை வடிவில் சுமந்து, அதற்காகச் சிலுவையில் மரித்துப் பரிகாரம் செய்தவர் அவர் தானே.
"வருந்தி சுமை சுமப்போரே, எல்லோரும் என்னிடம் வாருங்கள்,
நான் உங்களுக்கு இளைப்பாற்றி தருவேன்."
இவை இயேசுவின் வார்த்தைகள்.
சிலுவை நமது தோள் மேல் இருப்பது போல் தோன்றும்,
ஆனால் நமக்காக அதைச் சுமப்பவர் இயேசுவே.
ஆகவேதான் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் புனிதர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள்.
இயேசு நம்மில் வாழும்போது,
நமது மனதில் தோன்றும் சிந்தனைகள் இயேசுவுக்கு உரியனவாகவே இருக்கும்.
ஆகவே கடவுளுக்கு எதிரான சிந்தனைகள் தோன்ற வாய்ப்பே இல்லை.
நமது வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் இயேசுவுக்கு உரியனவாகவே இருப்பதால்,
இயேசுவின் அன்பு நமது வார்த்தைகளில் பிரதிபலிக்கும்.
நம்மில் அவரே செயல் புரிவதால் நமது செயல்கள் அனைத்தும் கடவுளுக்கு ஏற்றவையாகவே இருக்கும்.
ஒரு புனிதர் கூறினார்,
"ஆண்டவரே நீர் சர்வ நன்மைத் தனமும் நிறைந்தவர்.
நீர் என்னில் வாழ்வதால்,
நித்திய காலமும் மோட்சத்திற்கு வெளியேதான் நான் வாழ வேண்டும் என்று நீர் சொன்னாலும்
(அதாவது, அவரைப் பார்க்காமல்)
அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன்.
ஏனெனில் நித்திய காலமும் நீ என்னில் தான் வாழ்ந்து கொண்டிருப்பீர்."
நாம் முதல் வகைக் கிறிஸ்தவர்கள் என்பதை எப்படி அறிந்து கொள்வது?
நமது உள்ளத்தில் கிறிஸ்து குடியிருப்பதால் நாம் எப்போதும் அவரது ஞாபகமாகவே இருப்போம்.
ஒவ்வொரு முறை
"தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே, ஆமென்." சொல்லும்போதும்
தந்தையின் சித்தத்தை அறிந்து அதன்படி செயல் புரிய ஆவல் ஏற்படும்.
ஒவ்வொரு வினாடியும் தந்தை நம்மைப் பராமரித்து வருவதால்
நமது ஒவ்வொரு நிகழ்வும் அவரது சித்தப்படியே நடக்கும்.
ஆகவே நமக்கு எது நேர்ந்தாலும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம்.
எதிர்பாராமல் நமக்கு ஒரு விபத்து நேர்ந்து விட்டதாக வைத்துக் கொள்வோம்.
''தந்தையே, நான் உமது பிள்ளை.
உமது விருப்பத்திற்கு மாறாக எனக்கு எதுவும் நடக்காது.
எனக்கு நேர்ந்திருக்கும் இந்த விபத்து கூட உமது சித்தத்தின்படி எனது ஆன்மீக நன்மைக்காகவே நடந்திருக்கிறது.
ஆண்டவரே என்ன நேர்ந்தாலும் அது உமது சித்தமாகையால் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.
உமது பராமரிப்புக்கு எனது மனமார்ந்த நன்றி." என்று ஜெபிப்போம்
வெற்றியோ, தோல்வியோ என்ன நேர்ந்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டால்
நமது ஆன்மீக வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
நாம் ஒரு ஏழைப் பெற்றோருக்குப் பிறந்து விட்டோமா?
அதுதான் இறைவன் சித்தம்.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் நடத்தும் பாடம் எதுவும் விளங்கவில்லையா?
அதுதான் இறைவன் சித்தம்.
எவ்வளவோ கஷ்டப்பட்டுத் தயாரித்துத் தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியவில்லையா?
அதுதான் இறைவன் சித்தம்.
அன்றாடக் கூலி வேலை செய்துதான் பிழைக்க வேண்டியிருக்கிறதா?
அதுதான் இறைவன் சித்தம்.
நமது வாழ்வில் ஏற்படும் வெற்றிகள் மட்டுமல்ல, தோல்விகளும் இறைவனது சித்தம் தான் என்று ஏற்றுக் கொண்டால் நமது வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
நமது ஜெப விண்ணப்பங்களில் சுய தேவைப் பூர்த்திக்கான விண்ணப்பம் எதுவும் இருக்காது.
மற்றவர்கள் நலனுக்காகவே அதிகம் ஜெபிப்போம்.
குருவானவர் ஆக வேண்டும் என்பது மட்டுமல்ல,
பங்குக் குருவானவரின் சமையலறையில் Cook ஆக வேண்டும் என்பது கூட தேவ அழைத்தல் தான்.
அதை ஏற்றுக் கொள்வதும் இறைவன் சித்தப்படி நடப்பது தான்.
முதல் வகை ஆன்மீகத்தில் சொந்த விருப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
அடிமைக்கு சுய விருப்பம் உண்டா?
முதலாளியின் விருப்பம் தான் அடிமையின் விருப்பம்.
"இதோ ஆண்டவருடைய அடிமை." என்ற நமது அன்னையின் வார்த்தைகளை இங்கு நினைவு கூறுவோம்.
நாம் அன்னையின் பிள்ளைகள்.
தாயைப் போல பிள்ளை இருக்க வேண்டும்.
தந்தையின் சித்தமே நமது சித்தமும்.
தந்தை இறைவனின் விருப்பம் எதுவோ அதன்படி நாம் வாழ்வோம்.
அவர்தான் நம்மை ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வருகிறார்.
"உமது விருப்பப்படியே ஆகட்டும்."
அதுவே நமது வாழ்க்கை.
"வாழ வேண்டியது நாம் அல்ல, இறைவனே நம்மில் வாழ வேண்டும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment