Sunday, August 27, 2023

அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)(தொடர்ச்சி)3

அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)
(தொடர்ச்சி)3

"எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்."

என்று தந்தையிடம் அடிக்கடி கூறுகிறோம்.

நாம் சொல்வதை உணர்ந்து சொல்கிறோமா?

அல்லது, 

இயந்திரத்தனமாக சொல்கிறோமா?

உணர்ந்து சொன்னால் நாம் பாக்கியசாலிகள்.

இயந்திரத்தனமாகச் சொன்னால்  
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

கடவுளிடம் நமது பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கிறோம்,

ஆனால் நிபந்தனையின் அடிப்படையில்தான் மன்னிப்புக் கேட்கிறோம்.

என்ன நிபந்தனை?

"தந்தையே நாங்கள் உமக்கு விரோதமாக பாவங்கள் செய்திருக்கிறோம்.

எங்களது சகோதர சகோதரிகள் எங்களுக்கு விரோதமாகக் குற்றங்கள் செய்திருக்கிறார்கள்.

நாங்கள் அவர்களை மன்னிப்பது போல, தந்தையே, நீர் எங்களை மன்னியும்.

நாங்கள் அவர்களை மன்னிக்காவிட்டால் நீரும் எங்களை மன்னிக்க வேண்டாம்."

நாம் நமது விரோதிகளை மன்னிக்கிறோம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் தான் மன்னிப்பு கேட்கிறோம்.

ஆகவே நமது விரோதிகளை நாம் மன்னிக்காவிட்டால் கடவுளிடமிருந்து நாம் மன்னிப்பை எதிர்பார்க்கக் கூடாது.

ஆகவே கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்லுமுன்

 யார் யார் நமது மனதை நோகச் செய்திருக்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்த்து,

 முதலில் அவர்களை மனமார மன்னித்து விட வேண்டும். 

அவர்களை நமது நண்பர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

நண்பர்களுக்கு மத்தியில் அன்பு என்னும் பிணைப்பு இருக்கும்.

கடவுள் நம்மிடம் கூறியிருப்பது,

''என்னை நேசி. 
உனது அயலானையும் நேசி.

இரண்டு நேசங்களும் ஒரே நேசம் தான்.

ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்று இல்லை.

உனது அயலானை நேசிக்காமல் என்னை நேசிப்பதாகச் சொன்னால் அது சுத்தப் பொய்.

நான் என்னை நேசிப்பவர்களையும் நேசிக்கிறேன்,

 நேசிக்காதவர்களையும் நேசிக்கிறேன்.

 மனுக்குலம் முழுவதையும் நேசிக்கிறேன்.

கடவுளே இல்லை என்பவர்களையும் நேசிக்கிறேன்.

நீயும் அனைவரையும் நேசித்தால் தான் என் மகன் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதி பெறுவாய்."

ஆகவே கடவுளிடம் நமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்குமுன்,

 நமக்கு எதிராகச் செயல்படுபவர்களை நாம் மன்னித்து விட வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் அநேகர் கிறிஸ்தவ சமயத்துக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

கடவுள் அவர்களையும் நேசிக்கிறார்.

நாம் நேசிக்கிறோமா? வெறுக்கிறோமா?

 சிந்தித்துப் பார்த்துவிட்டு கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்லுவோம்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment