Wednesday, August 23, 2023

"வந்து பார்" (அரு.1:46

 "வந்து பார்" (அரு.1:46)

பிலிப்பு நத்தனயேலிடம் மெசியா நாசரேத் ஊரினர் என்று கூறியபோது,

நத்தனயேல்,  "நாசரேத்தூரிலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமா ?" என்றார்.

 பிலிப்புவோ, 

"வந்து பார்" என்றார்.

"எந்த யூகத்தின் அடிப்படையில் "நாசரேத்தூரிலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமா ?" என்று கூறுகிறீர்களோ தெரியவில்லை.

வந்து மெசியாவைப் பார்த்து உங்கள் அனுபவத்தின் மூலம் உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.

கற்பனையை விட அனுபவமே நமக்கு உண்மையை உணர்த்தும்."

என்பது பிலிப்பு கூறியதன் கருத்து.

பைபிள், திருச்சபையின் வரலாறு, புனிதர்களின் வரலாறு  போன்ற நூல்களை வாசிப்பதன் மூலம்

ஆன்மீகம் பற்றிய அநேக உண்மைகளை அறிந்து கொள்கிறோம்.

புனித நூல்களை வாசிப்பது அறிவு பெறுவதற்கோ, 

தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவதற்கோ, 

வினாடி வினாக்களுக்கு பதில் கொடுப்பதற்கோ அல்ல.

 நாம் வாசித்தவற்றை நமது வாழ்க்கை அனுபவமாக ஆக்கும் போது தான் வாசிப்பு பலன் தரும்.

திருப்பலிக்குச் செல்லும்போது குருவானவர் வைக்கின்ற பிரசங்கத்தைக் கேட்கிறோம்.

பிரசங்கத்தைக் கேட்பது அதை விமர்சனம் பண்ணுவதற்கு அல்ல.

"பிரசங்கம் Super" என்று சொல்வதனால் பிரசங்கம் Super ஆகி விடாது.

குருவானவர் கூறுகின்ற ஆன்மீக புத்திமதிகளைக் கூர்ந்து கவனித்துக் கேட்டு,

அவற்றை மனதில் பதித்து,

நமது சிந்தனை, சொல், செயல் மூலம் நமது வாழ்வாக்கும் போது தான் குருவானவரின் பிரசங்கம் Super ஆகிறது.

இயேசுவைப் பற்றி நிறைய உண்மைகளைத் தெரிந்து வைத்திருக்கிறோம்.

இயேசு கூறுகிறார்,

''என்னை பற்றித் தெரிந்து வைத்திருப்பதால் மட்டும் என்ன பயனும் இல்லை.

வந்து என்னைப் பார். 

தியானிப்பதின் மூலம் என்னை அனுபவி.

உனது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் நான் நீயாக வேண்டும்.

திவ்ய நற்கருணைப் பேழையில் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் என்னை அடிக்கடி வந்து பார்.

உன் மனதில் உதிக்கும் உள் தூண்டுதல்களை (Inspirations) உனது வாழ்வில் நடைமுறைப்படுத்து.

அப்போதுதான் எனது வார்த்தைகள் உன்னை வாழவைக்கும்.

திருப்பலியில் என்னை வந்து பார். 

வெறுமனே பார்ப்பதற்காக அல்ல, 

திருப்பலியில் கலந்து கொள்வதற்காக என்னை வந்து பார்.

திரு விருந்தின் போது முழங்காலில் இருந்து,

என்னை உனது நாவில் வாங்கி,

என்னை உனது ஆன்மீக உணவாக உட்கொள்ளுவதன் மூலம் 

அனுபவபூர்வமாக நான் உன்னைப் படைத்த கடவுள், 

உனக்காக இரத்தம் சிந்தி சிலுவையில் மரித்த மீட்பர் 

என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு, பிரகடனப் படுத்து.

என்னை நீ கையில் வாங்கினால்

 தின்பண்டமாகத் தின்பதற்காக கடையில் வாங்கும் ஆரஞ்சு வில்லையின் மதிப்பைத் தான் எனக்கு கொடுக்கிறாய்.

கையில் வாங்கும் போது தரையில் விழ நேரிடும் நற்கருணைத் துகள்களை வருவோர் போவோரெல்லாம் மிதிக்கும் போது 

அன்று நான் சிலுவையைச் சுமந்தபோது ரோமானியப் படைவீரர்கள் எனக்கு செய்த கொடுமைகளை நீ எனக்குச் செய்கிறாய்.

அவர்கள் எத்தனை முறை என்னைக் காலால் மிதித்தார்கள் தெரியுமா?

அந்த அனுபவத்தை நீ எனக்குத் திரும்பவும் தர வேண்டுமா?

என்னை வந்து பார்.

உனக்காக நான் பட்ட 
அவமானங்களைச் சிந்தித்துப் பார்.

அவை திரும்பவும் ஏற்படாதபடி பார்த்துக் கொள்.

என்னை வந்து பார், 
நீ மீட்பு பெறுவதற்காக.

என்னை வந்து பார், 
உனது ஆன்மீக வாழ்வுக்கு வேண்டிய அருள் வரங்களைப் பெறுவதற்காக.

என்னை வந்து பார், 
நிலைவாழ்வு பெறுவதற்காக."

நமது ஆன்மீக வாழ்வை அனுபவப் பூர்வமாக வாழ்வோம்.

அன்று நத்தனயேல் இயேசுவை அனுபவப் பூர்வமாக வாழ்ந்தது போல நாமும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment