Thursday, August 10, 2023

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்." (மத்.16:24)

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்." (மத்.16:24)

"தாத்தா, கடவுள் நம்மை இந்த உலகில் படைத்தது நமது சிலுவையை நாம் சுமந்து அவர் பின்னால் செல்வதற்காகத் தானா?

அவர் சிலுவையைச் சுமந்து கொண்டு கல்வாரி மலைக்குச் சென்றபோது அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று அவருக்குத் தெரியும்.

தெரிந்தும் நம்மை ஏன் கஷ்டப்படச் சொல்லுகிறார்?"

"'ஒரு தாய் பிரசவ சமயத்தில் எவ்வளவு வேதனை அனுபவித்தாள் என்று அவளுக்குத் தெரியும்.

தெரிந்தும் தன் மகளுக்கு ஏன் திருமணம் செய்து வைக்கிறாள்?

ஏன் பேரன் பேத்திகளுக்கு ஆசைப்படுகிறாள்?"

"தாத்தா, பிரசவ வலி அனுபவிக்காமல் குழந்தை பெற முடியாது. 

ஆனால் குழந்தையின் முகத்தைப் பார்த்தபின் அதை பெற்ற தாய் அனுபவிக்கும் இன்பத்தை வேறு யாராலும் அனுபவிக்க முடியாது.

பிரசவ வலிக்குப் பின் கிடைக்கும் இன்பத்தைக் கருதி தான் பெண்கள் அந்த வலிக்கு ஆசைப்படுகிறார்கள்."

"' விவசாயி வயல் சகதிக்குள் இறங்கி கஷ்டப்பட்டு வேலை செய்கிறான் என்றால் அதனால் அவனுக்கு வரவிருக்கும் வருமானத்தை எண்ணி தான்.

விவசாயி சேற்றுக்குள் இறங்காவிட்டால் நீ சோற்றுக்கு எங்கே போவாய்?

புனித வெள்ளிக்குப் பின் உயிர்ப்பு ஞாயிறு.

 இது இறைவன் வகுத்த நியதி.

இறைவன் வகுத்த அடிப்படை விதிகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்."

"தாத்தா, நீங்கள் வேறொரு பதிலைச் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்."

"'என்ன பதிலை?" 

"மனிதன் செய்த பாவத்தின் விளைவு தான் துன்பம் (சிலுவை) என்று சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்."

"'ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு எதிர்க் கேள்வி உண்டு.

மனிதன் செய்த பாவத்தின் விளைவு தான் துன்பம் என்று நான் சொன்னால்,

மனிதன் பாவம் செய்வான் என்று தெரிந்தும் கடவுள் ஏன் அவனைப் படைத்தார் என்று கேட்பாய்.

அதற்குப் பதில் என்னிடம் இல்லை.

கடவுள் அளவற்ற ஞானம் உள்ளவர். 

நீ கடவுளின் படைப்பை பற்றி கேள்வி கேட்டாய். 

கடவுளின் படைப்பை பற்றி கடவுளிடம்தான் கேட்க வேண்டும்.

என்னிடம் கேட்டால் எனது அனுபவத்துக்கு உட்பட்ட பதிலைத் தான் சொல்வேன்.

கடவுள் மனிதனை பரிபூரண சுதந்திரத்தோடு படைத்தார்.

மனிதன் தனது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பாவம் செய்தான்.

பாவத்தின் விளைவு மனிதனுடைய ஆன்மீக மரணம்.

அதிலிருந்து அவனை மீட்பதற்காக இறைமகன் மனிதனாகப் பாடுகள் பட்டு மரித்துப் பரிகாரம் செய்தார்.

இவை நடந்து முடிந்த விஷயங்கள்.

நம்மை மீட்பதற்காக மனிதனாகப் பிறந்த இயேசு கிறிஸ்து சொன்னபடி நாம் நடக்க வேண்டும் என்பதுதான் நடக்க வேண்டிய விஷயம்.

நம்மை மீட்பதற்காக இயேசு சிலுவையைச் சுமந்தார். 

நாம் மீட்புப் பெற வேண்டுமென்றால் அவர் சிலுவையைச் சுமந்தது போல நாமும் சுமக்க வேண்டும்.

அன்று இன்ப வனத்தில் பசாசு ஏவாளை நோக்கி "ஏன்" என்று கேட்டது.

"அது இறைவனின் கட்டளை. அதை ஏன் என்று கேட்க நீ யார்?"

என்று ஏவாள் கேட்டிருந்தால் பாவம் நுழைந்திருக்காது.

அறிவியலில் ஏன் என்று கேட்டால் தான் அறிவு வளரும்.

ஆன்மீகத்தில் இறைவனது கட்டளையை 'ஏன்' என்று கேட்காமல் கீழ்படிந்து நடந்தால் தான் ஆன்மீகம் வளரும்.

"உனது பகைவனை நேசி.

உனக்கு தீமை செய்தவனுக்கு நன்மை செய்.

உனது சிலுவையைச் சுமந்து கொண்டு என்னைப் பின்செல்."

இவை இயேசு நமக்கு கொடுத்திருக்கும் கட்டளைகள்.

மருத்துவர் மருந்துச் சீட்டுக் கொடுக்கும்போது ஏன் என்று கேட்கிறோமா?

சொன்ன மருந்தை வாங்கி சாப்பிடுவதில்லை?

மருத்துவர் மேல் நமக்கு நம்பிக்கை இருப்பதால் அவர் சொன்னபடி செய்கிறோம்.

இயேசுவின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் ஏன் என்று கேட்காமல் அவர் சொன்னபடி செய்கிறார்கள்."

"அப்போ கேள்வியே கேட்க கூடாதா?"

"'விளக்கம் கேட்டு கேள்வி கேட்கலாம்.

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."

"இந்த வசனத்தை விளக்குங்கள், தாத்தா'' என்று நீ கேட்டிருக்கலாம்."

"சரி, தாத்தா, விளக்குங்கள்."

"'இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரமாகச் சிலுவையைச் சுமந்து சென்று அதில் தன்னையே பலியாக தந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

நாம் மீட்புப் பெற வேண்டுமென்றால் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக நமது சிலுவையை சுமக்க வேண்டும்.

பாவத்தின் விளைவாக மனித வாழ்வில் துன்பங்கள் இயல்பாகி விட்டன.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் துன்பங்களை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

துன்பங்களைத் துன்பங்களாக அனுபவித்தால் நமக்கு எந்த பயனும் இல்லை.

இயேசு தனது துன்பங்களை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக மாற்றியதால் அவரது துன்பங்களை சிலுவை என்று அழைக்கிறோம்.

நாமும் நமது துன்பங்களை இயேசுவின் பெயரால் பாவப் பரிகாரமாக மாற்றி, அதாவது, சிலுவையாக மாற்றி, அதை இயேசுவின் பின் சுமந்து செல்ல வேண்டும்.

நாம் இயேசுவின் சீடர்கள்.

குருவைப் பின்பற்ற வேண்டியது சீடர்களின் கடமை.

ஆகவே சிலுவையைச் சுமந்து நம்மை மீட்ட இயேசுவை நாமும் சிலுவையைச் சுமந்து பின் செல்ல வேண்டும்.

ஒரு மாணவன் எந்தப் பள்ளியைச் சேர்ந்தவன் என்பதற்கு அடையாளம் அவன் அணியும் சீருடை.

நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்கு அடையாளம் நாம் சுமக்கும் சிலுவை தான்.

புரிகிறதா? இன்னும் விளக்க வேண்டுமா?"

"புரிகிறது, தாத்தா. எவையெல்லாம் சிலுவைகள்?"

"'நமது உடலுக்கு இன்பம் தராத எல்லாம் சிலுவை தான்.

காலையில் இன்னும் கொஞ்சம் தூங்க வேண்டும் போல் இருக்கிறது.

விருப்பத்தை அடக்கி எழுவது சிலுவை.

உணவு ருசியாக இருப்பதால் நிறைய சாப்பிட ஆசையாக இருக்கிறது.

ஆசையை அடக்கி அளவோடு சாப்பிடுவது சிலுவை.

நம்மைத் திட்டுபவர்களைப் பதிலுக்குத் திட்ட வேண்டும் போல் இருக்கிறது.

பாவப்பதிகாரமாக அமைதி காப்பது சிலுவை.

உடலுக்குப் பிடிக்காத எதையும் பாவப் பரிகாரமாக ஒப்புக் கொடுத்தால் அது சிலுவை."

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தினமும் ஆயிரக்கணக்கான சிலுவைகளைச் சுமக்கலாம் போல் இருக்கிறது."

"'நமது வாழ்க்கையே ஒரு சிலுவை தான்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment