Friday, August 18, 2023

"குழந்தைகள் என்னிடம் வருவதைத் தடுக்க வேண்டாம். வரவிடுங்கள். ஏனெனில், விண்ணரசு இத்தகையோரதே"(மத்.19:14)

"குழந்தைகள் என்னிடம் வருவதைத் தடுக்க வேண்டாம். வரவிடுங்கள். ஏனெனில், விண்ணரசு இத்தகையோரதே"
(மத்.19:14)

புதிய ஏற்பாட்டின் முதல் வேத சாட்சிகள் மாசில்லாக் குழந்தைகள்.

கிறிஸ்து யார் என்று அறிய முன்னரே

அவருக்காக உயிரைக் கொடுத்தவர்கள் அவர்கள்.

குழந்தைகளுக்கு தாங்கள் யார் என்று தெரியாது.

எதற்காக உலகத்தில் பிறந்திருக்கிறோம் என்று தெரியாது.

தங்களைப் படைத்தவர் யார் என்று தெரியாது.

பாவம் என்றால் என்ன என்று தெரியாது.

அவர்களால் பாவம் செய்யவும் முடியாது.

தாங்கள் ஞானஸ்நானம் பெற்று ஜென்மப் பாவத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டோம் என்று தெரியாது.

ஜென்மப் பாவம் என்றால் என்ன என்றே தெரியாது.

விசுவாசம் என்றால் என்ன என்றே தெரியாது.

ஒரே வரியில் அவர்களுக்கு எதுவுமே தெரியாது,

அவர்கள் தான் பாக்கியசாலிகள்.

இயேசு பாவம் செய்ய முடியாத பரிசுத்தர்.

அவரால் தனது விருப்பத்திற்கு எதிராக செயல்பட முடியாது,

ஆகவே பாவம் செய்ய முடியாது.

குழந்தைகளாலும் பாவம் செய்ய
 முடியாது,

ஏனென்றால் அவர்களுக்கு பாவம் என்றால் என்ன என்றே தெரியாது.

குழந்தைகள் பாவம் இன்றி இருப்பதால் அவர்கள் பரிசுத்தர்கள்.

பரிசுத்தராகிய இயேசு பரிசுத்தர்களாகிய குழந்தைகளை விரும்புகிறார்.

ஆகவேதான் "குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்" என்கிறார்.

குழந்தைகளைப் போல் பாவம் இல்லாதிருப்பவர்களுக்குத் தான் விண்ணரசு உரியது.


சீடர்கள் இயேசுவிடம் , "விண்ணரசில் யார் பெரியவன்?" என்று கேட்டபோது, அவர் பதிலாக 

 "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: 

நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில், விண்ணரசில் நுழையமாட்டீர்கள்.

எனவே, இக்குழந்தையைப்போலத் தன்னைத் தாழ்த்திக்கொள்ளுகிறவன் எவனோ, 

அவனே விண்ணரசில் பெரியவன்.


"மேலும் இத்தகைய குழந்தை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்கிறவன் எவனும்,

 என்னையே ஏற்றுக்கொள்கிறான்."
(மத்.18:3,4)

மனித வாழ்க்கை குழந்தைப் பருவத்தில் ஆரம்பித்து முதுமைப் பருவத்தில் முடிவடைகிறது.

ஏன் இயேசு "நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில், விண்ணரசில் நுழையமாட்டீர்கள்." என்கிறார்?

இயேசு இவ் வார்த்தைகளை குழந்தைகளைப் பார்த்து சொல்லவில்லை.

வயதானவர்களைப் பார்த்து தான் சொல்கிறார்.

குழந்தைகளால்தான் வயதானவர்களாக மாற முடியும்.

குழந்தை வளர்ந்து, பையனாகி, வாலிபனாகி, பெரிய மனிதனாகி, கிழவனாகி மரணம் அடைகிறான்.

ஆனால் கிழவனால் வாலிபனாகவோ பையனாகவோ குழந்தையாகவோ பின்னுக்கு வளர முடியாது.

இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது உடல் ரீதியான வளர்ச்சி, அல்லது, மாற்றம்.

உடல்ரீதியாக ஒரு குழந்தை பையனாக மாற முடியும், ஆனால் பையனால் குழந்தையாக மாற முடியாது.

ஆனால் இயேசு பேசுவது ஆன்மீகம்.

ஆன்மீகத்தில் ஒரு குழந்தை பாவ மாசு இல்லாமல் பரிசுத்தமாய் இருக்கிறது.

குழந்தைக்குக் கடவுளின் கட்டளைகள் தெரியாது, ஆகவே அவற்றை மீற முடியாது.

அதாவது குழந்தையால் பாவம் செய்ய முடியாது.

குழந்தை பையனாக மாறியபின் அது குழந்தை அல்ல.

பையனுக்குக் கடவுளின் கட்டளைகள் போதிக்கப்படுகின்றன.

அவன் கட்டளைகளை மீறும் போது பாவம் அவனுக்குள் நுழைகிறது, பரிசுத்தத்தனம் வெளியேறுகிறது.

பாவ நிலையில் அவன் விண்ணரசுக்கு ஏற்றவன் அல்ல.

அவன் விண்ணரசுக்கு ஏற்றவனாக மாற வேண்டுமென்றால்,

ஆன்மீகத்தில் அவன் குழந்தையாக மாற வேண்டும்,

அதாவது பாவத்தை விட்டு வெளியேறி பரிசுத்தமானவனாக வாழ வேண்டும்.

குழந்தைக்கு கட்டளைகள் தெரியாததால் அது பரிசுத்தமாக இருக்கிறது.

பையன் கட்டளைகளை அறிந்த பின்னும் தான் குழந்தையாய் இருந்தபோது தன்னிடம் இருந்த பரிசுத்த நிலையைப் பாதுகாக்க வேண்டும்.

அதாவது அறிந்த கட்டளைகளின் படி வாழ வேண்டும்.

50 வயதான ஒரு முதியவர் பாவங்களால் நிறைந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

உடல் ரீதியாக அவர் முதியவர்.

ஆன்மீக ரீதியாக அவர் குழந்தையாக மாற வேண்டும்.

எப்படி மாறுவது?

தான் செய்த எல்லா பாவங்களுக்காகவும் உத்தம மனஸ்தாபப்பட்டு,

 இறைவனிடம் மன்னிப்பு கேட்டு,

 பாவ சங்கீர்த்தனம் செய்தால் அவரது அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்.

"ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன்; என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன்."
(திருப்பாடல்கள்.51:7)

என்ற சங்கீதப் படி அவரது ஆன்மா பரிசுத்தம் அடைகிறது.

அவர் உடல் ரீதியாக முதியவர்.
ஆன்மீக ரீதியாகக் குழந்தை.

உடல் ரீதியாக நாம் என்ன மாற்றம் அடைந்தாலும்,

ஆன்மீக ரீதியாக நாம் பெற்ற பரிசுத்தத்தனத்தைப் பத்திரமாக காப்பாற்ற வேண்டும்.

உடல் ரீதியாக நமக்கு எத்தனை வயது ஆனாலும் ஆன்மீக ரீதியாக குழந்தையாகவே இருக்க வேண்டும்.

எழுபது வயதில் மரணம் அடைந்தாலும் விண்ணகத்திற்குள் குழந்தையாகவே நுழைவோம், 

ஒரு விவசாயி கல்லும் முள்ளும் நிறைந்த நிலத்தை சுத்தப்படுத்திய பின் 

அதை உழுதுப் பண்படுத்தி பயிர்த்தொழில் செய்வதுபோல,

 பாவங்களாகிய கல்லும் முள்ளும் நிறைந்த நமது ஆன்மாவைப்

 பாவ சங்கீர்த்தனத்தின் மூலம் பரிசுத்தப் படுத்திய பின்

 அதை ஆன்மீக ரீதியாகப் பண்படுத்தி

புண்ணியங்களாகிய நாற்றுக்களை நட்டு,

இறைவனின் அருளாகிய நீரைப் பாய்ச்சிப் புண்ணியப் பயிரை வளர்க்க வேண்டும்.

பயிர் பூத்துக், காய்த்துப் பலன் தரும்.

நமது மரணத்தின் போது அறுவடை செய்து 

நமது உழைப்பின் பலனை விண்ணகத்திற்குள் எடுத்துச் செல்வோம்.

"குழந்தையைப்போலத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளுகிறவன் எவனோ, அவனே விண்ணரசில் பெரியவன்."

குழந்தை எப்போதாவது தனது பெருமைகளைப் பற்றி பீத்திக் கொள்வதைப் பார்த்திருக்கிறோமா?

"என்னிடம் எதுவும் இல்லை, தாருங்கள்" 

"பசிக்கிறது, ஊட்டுங்கள்."

"என்னால் நடக்க முடியவில்லை, எடுத்துக் கொள்ளுங்கள்"

"எனக்கு முத்தம் கொடுங்கள், என்னோடு சேர்ந்து மகிழ்ச்சியாக இருங்கள்"

என்று தான் குழந்தை சொல்லும். 

குழந்தை தாழ்ச்சியுள்ளது.
தாழ்ச்சி புண்ணியங்களின் அரசி.

ஆதலால் தான், ''குழந்தையைப்போலத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளுகிறவன் விண்ணரசில் பெரியவன்.''

என்று ஆண்டவர் சொல்கிறார்.

நாம் இவ்வுலகில் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல,

எவ்வளவு பரிசுத்தர்களாக வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.

ஒரு குழந்தையைப் பார்க்கும் போது அதன் மாசின்மை கருதி,

அதைக் கையில் எடுத்து,

கன்னத்தில் முத்தமிட்டால்,

நாம் இயேசுவையே கையில் எடுத்து முத்தம் கொடுக்கிறோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment