(மத்.14:18)
ஒன்றுமில்லாமையிலிருந்து அகில பிரபஞ்சத்தை,
அதில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்களோடும், கோள்களோடும்,
உயிர் வாழ் பிராணிகளோடும்
'உண்டாகுக' என்ற ஒரே சொல்லால் படைத்த கடவுளால்,
5000 பேருக்கு தேவையான அப்பத்தை ஒன்றுமில்லாமையிலிருந்து படைக்க முடியாதா?
முடியும்.
ஆனால் அவர் தன் சீடர்களைப் பார்த்து,
"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார்.
அவர்களோ,
"இங்கே ஐந்து அப்பமும் இரண்டு மீனும் தவிர வேறொன்றும் எங்களிடமில்லை."
ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு எப்படி பங்கு வைக்க முடியும்?
சீடர்களால் அது முடியாது என்று இயேசுவுக்கு தெரியும்.
அவர் சீடர்களைப் பார்த்து,
"அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்" என்றார்.
அவர்களும் கொண்டு வந்தார்கள். இயேசு அவற்றை ஆசீர்வதித்து,
"எடுத்து மக்களுக்கு பரிமாறுங்கள்.'' என்றார்.
சீடர்கள் பரிமாறினார்கள்.
பெண்களும் சிறுவர்களும் நீங்கலாக, உணவு அருந்திய ஆண்கள் தொகை ஐயாயிரம்.
பெண்கள், சிறுவர்கள் எண்ணிக்கையையும் கூட்டினால் சாப்பிட்டவர்கள் எண்ணிக்கை பத்தாயிரத்தையும் தாண்டும்.
இயேசு ஏன் "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்று சொன்னார்?
ஏன் "அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்'' என்று சொன்னார்?
கடவுள் மனிதர்களைத் தனது சாயலில் படைத்தார்.
அவருடைய சாயலின் மிக முக்கியமான அம்சம் அன்பு.
தனது அளவற்ற அன்பின் காரணமாக,
அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்காக
மனிதர்களைப் படைத்தார்.
அன்பின் காரணமாகத்தான் படைத்தவர்களைப் பராமரித்து வருகிறார்.
ஆகவே நாமும் அதே அன்பின் காரணமாக நமது அயலானைப் பராமரிக்க வேண்டும், அய்லானின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம்.
அவரது போதனையைக் கேட்க வந்த மக்களில் ஒவ்வொருவரும் இயேசுவின் சீடர்களுக்கு அயலான்.
அதனால் தான் அவர் தன் சீடர்களிடம் அவர்களுக்கு உணவு அளிக்கும் படி கூறினார்.
ஆனால் அவர்களிடம் அந்த அளவு உணவு இல்லை என்பது அவருக்குத் தெரியும்.
ஆகவே குறைவாக உள்ள உணவை நிறைவாக்கி அதை மக்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்காக
குறைவான எண்ணிக்கையில் இருந்த அப்பங்களையும் மீனையும் அவரிடம் கொண்டு வரச் சொன்னார்.
அவற்றைப் பலுக செய்து வந்திருந்த மக்களுக்கு பகிர்ந்து அளிக்க சொன்னார்.
அவர்களுக்கு பகிர்ந்து அளித்தது போக 12 கூடைகளில் அப்பம் மீதியாக இருந்தது.
இயேசு அன்று சொன்னதை இன்று நம்மிடமும் கூறுகிறார்.
"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்"
இயேசுவைப் பின்பற்றும் நாம் அனைவரும் அவருடைய சீடர்கள் தான்.
நம்மைச் சுற்றிலும் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இருப்பிடமும் இல்லாத மக்கள் ஏராளமாக இருக்கின்றார்கள்.
அவர்களுக்கு இல்லாததை கொடுத்து உதவும்படி இயேசு நம்மிடம் கூறுகிறார்.
அது மட்டுமல்ல இல்லாத நமது அயலானுக்குக் கொடுப்பதை
இயேசுவுக்கே கொடுக்கிறோம் என்கிறார்.
"அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்"
மற்றவர்களுக்கு உதவி செய்ய போதுமான பொருள் நம்மிடம் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம்.
நமக்கு வேண்டியது உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை தான்.
அந்த ஆசையோடு நம்மிடம் இருப்பதை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து விட்டால்
அவர் உதவி செய்வதற்குப் போதுமான பொருளைத் தந்து கொண்டேயிருப்பார்.
நம்மிடம் இயேசு எதிர்பார்ப்பதெல்லாம் உதவி செய்ய வேண்டும் என்ற உண்மையான ஆசையை.
நமது ஆசை உண்மையானதாக இருந்தால் இயேசு நம் மூலமாகக் கொடுப்பதும் உண்மையானதாக இருக்கும்.
நாம் எவ்வளவு உதவி செய்கிறோம் என்பது முக்கியமல்ல.
எத்தகைய மனதோடு உதவி செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
உண்மையான பிறரன்போடு கொடுக்க ஆசைப்பட்டால்
நாம் கொடுக்க வேண்டியதை இயேசு நமக்குக் கொடுப்பார்.
நம்மிடம் இருப்பதைத் தாராளமாகக் கொடுப்போம்.
கொடுப்பதற்கு நம்மிடம் இருந்து கொண்டேயிருக்கும்.
ஐந்து அப்பங்களைக் கொண்டு 5000 பேருக்கு உணவளித்த இறைவன்
நம்மிடம் உள்ளதையெல்லாம் அவரிடம் ஒப்படைத்து விட்டால்
பிறருக்கு உதவி செய்ய தந்து கொண்டேயிருப்பார்.
நல்ல மனதோடு கொடுத்தால் கொடுக்கக் கொடுக்கக் குறையாது.
முதலில் ஆண்டவர் தந்ததை அவருக்கே கொடுப்போம்.
அவர் நம் மூலமாக நமது அயலானுக்குக் கொடுப்பார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment