Thursday, August 17, 2023

"இனி அவர்கள் இருவர் அல்லர், ஒரே உடல். ஆகவே, கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்"(மத்.19:6)

"இனி அவர்கள் இருவர் அல்லர், ஒரே உடல். ஆகவே, கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்"
(மத்.19:6)

இப்போதெல்லாம் செய்யக்கூடாததை செய்வதுதான் நாகரீகம் (Fashion) ஆகிவிட்டது.

பசிக்காக மட்டும் சாப்பிடுவது நடைமுறை.
ருசிக்காக மட்டும் சாப்பிடுவது நாகரீகம்.

உடலை மறைக்க உடை அணிவது நடைமுறை.
உடலைக் காண்பிப்பதற்காகவே உடை அணிவது நாகரீகம்.

ஒழுங்காக நடப்பது நடைமுறை.
கோணிக்கோணி நடப்பது நாகரீகம்.

கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்வது நடைமுறை.
விவாகரத்து வாங்கிக்கொண்டு பிரிந்து போவது நாகரீகம்.

நாகரீகம் என்பது ஒரு நல்ல வார்த்தை. ஆனால் அதன் பெயரால் அநேக அட்டூழியங்கள் நடக்கின்றன.

கடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்.

ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாளைப் படைத்ததாக வரும் பைபிள் வசனம் நமக்குத் தரும் இறை செய்தி 

ஆதாம் ஏவாள் இருவருக்கும் ஒரு உடல், ஈருயிர், ஓருடல்.

உடலிலிருந்து உயிர் பிரியும்போது ஏற்படுவது மரணம்.

கணவன், மனைவி என்ற இரண்டு உயிர்களைக் கொண்ட திருமணம் என்ற ஒரு உடலிலிருந்து

ஏதாவது ஒரு நபர் பிரிந்து விட்டாலும் திருமணம் என்ற உடல் இறந்து விட்டது.

திருமணத்தை இணைப்பது இறைவன்.

அதிலிருந்து பிரிந்து செல்வோர் இறைவனுக்கு எதிராக செயல்படுகின்றனர்.

ஒரு முறை, திருமணமாகி சில ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இரண்டு தம்பதியர் பங்குக் குருவானவரைப் பார்க்க வந்தார்கள். 

கணவன் சொன்னான்:

''சுவாமி, நீங்கள் தான் எங்களைத் திருமணத்தில் சேர்த்து வைத்தீர்கள்.

இப்போது எங்களால் சேர்ந்து வாழ முடியவில்லை.

சேர்த்து வைத்த நீங்களே எங்களைப் பிரித்து வைத்து விடுங்கள்."

குருவானவர் சொன்னார்,

"ஏழு தேவத்திரவிய அனுமானங்களில் திருமணத்தை தவிர மற்ற ஆறையும் குருவானவர் நடத்தி வைக்கிறார்.

திருமணத்தை நடத்துபவர்கள் பெண்ணும் மாப்பிள்ளையும் தான். குருவானவர் பார்வையாளர் மட்டுமே."

"அப்படியானால் நாங்களாக பிரிந்து போய்விடலாமா?"

"'முடியாது. யார் முன்னால் திருமணம் செய்து கொண்டீர்கள்?"

"உங்கள் முன்னால் தான்."

"'என் அறையிலா?"

".இல்லை. கோவிலில்."

"'கோவிலில் யார் முன்னால்?"

"திவ்ய நற்கருணை ஆண்டவர் முன்னால்."

"'அப்படியானால் இருவரும் கோவிலுக்கு வாருங்கள் "

சென்றார்கள்.

"'திவ்ய நற்கருணை ஆண்டவர் முன்னால் இருவரும் அருகருகே முழங்காலில் இருங்கள்.

இருவரும் திவ்ய நற்கருணை பேழையில் இருக்கும் ஆண்டவரைப் பார்த்துக் கொண்டே இருங்கள்."

"எவ்வளவு நேரம்?"

"'அவர் உங்களை பிரித்து விடும் மட்டும்."

"பிரித்து விட்டு விடுவாரா?"

"நிச்சயமாக."

சுவாமியார் அறைக்குச் சென்று விட்டார்.

கணவனும் மனைவியும் திவ்ய நற்கருணை நாதரை மணிக்கணக்காகப் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள்.

மதியானம் ஆனது. பசி எடுத்தது. ஆண்டவர் வெளியே வரவில்லை.

தொடர்ந்து முழங்காலில் இருந்தார்கள். மூன்று மணி ஆனது.

பசி மயக்கம் வந்தது. ஆனால் ஆண்டவர் வரவில்லை.

கணவன் மனைவியைப் பார்த்து,

"திவ்ய நற்கருணை பேழையிலிருந்து ஆண்டவர் வருவது போல் தெரியவில்லை, 

வா, திரும்பவும் சாமியைப் பார்ப்போம்."

இருவரும் எழுந்து குருவானவரிடம் வந்தார்கள்.

"சுவாமி மணிக்கணக்காக ஆண்டவரை பார்த்துக் கொண்டே இருந்தோம், 

எங்களுக்குப் பசிக்கிறதே தவிர ஆண்டவர் வருவதாகத் தெரியவில்லை."

"'பசிக்கும், பசிக்கட்டும்."

"எவ்வளவு நேரம் பசியோடு இருக்க வேண்டும்?"

"உங்கள் இருவரில் ஒருவர் இறக்கு மட்டும். ஒருவர் இறந்தவுடன் அவரை இயேசு அழைத்துக்கொண்டு போய்விடுவார்.

மீதம் இருப்பவர் வேறு கல்யாணம் செய்து கொள்ளலாம்."

''சுவாமி என்ன விளையாடுகிறீர்களா?

நாங்கள் மணவிலக்கு கேட்டால் எங்களை பட்டினி கிடந்து சாகச் சொல்கிறீர்கள்?''

'"மரணத்தால் மட்டுமே கணவனையும் மனைவியையும் பிரிக்க முடியும்.

தற்கொலை செய்யக்கூடாது.

அதனால் தான் ஆண்டவரையே பார்த்துக் கொண்டிருங்கள் என்று சொன்னேன்.

அவருக்கு எப்போது விருப்பமோ அப்போது வந்து ஒருவரையோ இருவரையுமோ அழைத்துக்கொண்டு போய்விடுவார்.

அவர் முன்னால் தான் திருமணம் செய்து கொண்டீர்கள். அவர்தான் முடிவு எடுக்க வேண்டும்."

''இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்?"

"'வீட்டுக்குச் சென்று உங்கள் இருவரில் ஒருவர் மரிக்குமட்டும் சேர்ந்து வாழுங்கள்.

வீட்டுக்குச் செல்லுங்கள். இயேசு உங்களோடு இருப்பாராக."

கடவுள் இணைத்ததைப் பிரிக்க மனிதனுக்கு அதிகாரம் இல்லை.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment