இறைவனுக்காக வாழ்பவர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
முழுக்க முழுக்க இறைவனுக்காகவே வாழ்ந்த புனித ஸ்நாபக அருளப்பருக்கு என்ன நேர்ந்தது என்பதை
"அவருடைய தலையைத் தட்டில் கொண்டுவந்து சிறுமியிடம் கொடுக்க, அவளும் தன் தாயிடம் கொண்டுபோனாள்."
என்ற வசனம் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
சரியாக வாழ்ந்த அவரது தலை தவறாக வாழ்ந்த ஒரு பெண்மணியின் கைக்கு செல்கிறது.
ஆனால் அவரது ஆன்மா இறைவன் பதத்தை அடைகிறது.
வேத சாட்சிகளாக மரித்த புனிதர்களின் உடல்கள் என்ன ஆயின என்பது நமக்கு தெரியும்.
திருச்சபையின் ஆரம்ப காலத்தில் அநேக வேத சாட்சிகளின் உடல்கள் மிருகங்களுக்கு உணவாகப் போடப்பட்டன.
உடலை தொடுபவர்களால் ஆன்மாவைத் தொட முடியாது.
நமது ஆன்மாக்களுக்குச் சொந்தக்காரர் இறைவன் மட்டுமே.
நமது உடல்களைப் பறிப்பவர்கள் அவற்றை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
நமது ஆன்மாக்கள் உடலை விட்டு பிரிந்தவுடனே அவற்றைப் படைத்துப் பராமரித்து வரும் இறைவனோடு இணைந்து வாழ விண்ணகத்திற்கு பறந்து விடுகின்றன.
இதிலிருந்து நாம் படிக்க வேண்டிய பாடம் நாம் ஆர்வத்தோடு பேண வேண்டியது நமது ஆன்மாவை மட்டும்தான், உடலை அல்ல.
நமது ஆன்மாவைப் பாவ மாசு இன்றி பரிசுத்தமாகப் பேண வேண்டியது மட்டுமே இவ்வுலகில் நமக்கு வேலை.
நமது ஆன்மாவில் இறையன்பு செயல்கள், பிறரன்புச் செயல்கள் என்னும் நாற்றுக்களை நட்டு,
பாவப் பரிகார செயல்கள், ஒறுத்தல் முயற்சிகள் என்னும் உரமிட்டு,
இறைவனின் அருள் என்னும் நீர்ப் பாய்ச்சி
ஆன்மீகப் பயிர்த் தொழில் புரிவது மட்டுமே இவ்வுலகில் நமது வேலை.
நமது உடலை இதற்காகப் பயன்படுத்த வேண்டுமே தவிர
ஆடை அணிகலன்களால் அதை அலங்கரிப்பதில் கவனம் செலுத்தக் கூடாது.
நோய் நொடிகளால் நிரம்பப் பெற்ற நமது உடல் கூட நமது ஆன்மாவைப் புண்ணியங்களால் அழகு படுத்த உதவும்.
நமது நோய் நொடிகளையும், அவை தரும் வேதனையையும்
நமது ஆன்மாவின் ஆரோக்கியத்திற்காக இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தால்
அவர் நித்திய பேரின்ப வாழ்வை நமக்கு பரிசாகத் தருவார்.
இப்பரிசை நித்திய காலம் அனுபவிக்கப் போவது நம்முடைய ஆன்மா தான்.
உடலின் வேதனை ஆன்மாவின் பேரின்பமாக மாறுகிறது.
உலகின் முடிவில் நமது உடலும் உயிர்த்து ஆன்மாவோடு இணைந்து நித்திய பேரின்பத்தை அனுபவிக்கும்.
இதற்காகத்தான் நமது ஆண்டவர் ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு உடலைத் தந்திருக்கிறார்.
அதை நாம் பயன்படுத்த வேண்டுமே தவிர,
அது நம்மைப் பயன்படுத்த விட்டு விடக் கூடாது.
ஆன்மாவைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு
உடவைப் பற்றி மட்டும் கவலைப்படுபவர்களை அது மரண சமயத்தில் ஏமாற்றி விடும்.
தான் இன்பமாய் வாழக் காரணமாக இருந்த ஆன்மாவை நரகத்துக்கு அனுப்பிவிட்டு,
அது மண்ணுக்குள் சென்று மண்ணோடு மண்ணாக மக்கிவிடும்.
அதுவும் வாழாது, தன்னை வாழ வைத்த ஆன்மாவையும் வாழ விடாது.
ஆகவே நமது ஆன்மா ஆண்டவரின் அருளில் வளர நமது உடலைப் பயன்படுத்துவோம்.
அதை ஒறுத்து, ஒறுத்தலை ஆன்மீக நலனுக்காக ஆண்டவருக்கு ஒப்புக் கொடுப்போம்.
உடலில் நோய் நொடிகள் வரும்போது அவற்றைச் சிலுவையாக மாற்றி ஆண்டவருக்காக சுமந்து ஆன்மீகப் பலன் பெறுவோம்.
நமக்கு உடல் அளிக்கப்பட்டிருப்பது சிற்றின்பத்தை அனுபவிப்பதற்காக அல்ல,
நித்திய காலம் பேரின்ப வாழ்வு வாழ நமக்கு உதவுவதற்காக.
உடலின் உதவியால் தவ முயற்சிகள் செய்து நமது ஆன்மாவுக்கு நித்திய கால பேரின்ப வாழ்வைப் பரிசாகக் கொடுப்போம்.
உடலின் மரணம் தான் ஆன்மாவுக்கு நித்திய பேரின்ப வாழ்வுக்கான வாசல்.
நமக்கு ஆன்மாவைத் தந்த ஆண்டவருக்கு நன்றி கூறுவதோடு
அதையே அவருக்கு காணிக்கையாக அளிப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment