Saturday, August 26, 2023

"அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)(தொடர்ச்சி)2

"அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)
(தொடர்ச்சி)2

நாம் ஆன்மீக ரீதியாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

உலக ரீதியாகப் பேசினால் நாம் இப்போது பேசுவதற்கு எதிர் மறையாக இருக்கும்.

நாம் முழுக்க முழுக்க ஆன்மீகவாதிகளா,

அல்லது தேவைப்படும் போது மட்டும் ஆன்மீகவாதிகளா 

என்பது நமது தியானத்தின் (Meditation) முடிவில் தெரியும்.

கர்த்தர் கற்பித்த செபத்தில் முதலில் இறைவணக்கம் செய்துவிட்டு அடுத்து நமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கின்றோம்.

"எங்கள் அன்றாட  உணவை இன்று, எங்களுக்குத்  தாரும்." 

அன்றன்றைய உணவை அன்றன்று தரும்படிதான் தந்தையிடம் வேண்டுகிறோம்.

"இன்று எங்களுக்கு வேண்டிய உணவை இன்று தாரும்."

பள்ளிக்கூடத்தில் சத்துணவு போடுகிறார்கள்.

நாளைக்குரிய உணவை இன்றே போடுவதில்லை.

நாளைக்குரிய உணவை நாளை போடுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு  இருக்கிறது.

கடவுள் நம்மை ஒவ்வொரு நாளும்  பராமரித்து வருகிறார்.

நமக்கு தினமும் அன்றன்றைய உணவைத் தர வேண்டியது கடவுளின் பொறுப்பு.

 அதற்காக உழைக்க வேண்டியது நமது கடமை.

உழைப்பதற்காகத்தான் நமக்கு கடவுள் உடலைத் தந்திருக்கிறார்.

சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு பள்ளிக்கூடத்தின் மீது இருக்கும் நம்பிக்கை 

நமக்குக் கடவுள் மீது இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இன்றைய உணவை இன்று தரும்படி கடவுளிடம் கேட்டோம்.

நமது உழைப்பின் மூலம் பல நாட்களுக்குத் தேவையான உணவு நமக்கு இன்றே கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

"எங்கள் தந்தையே" என்று செபத்தை ஆரம்பிக்கும் போதே மனுக்குலம் முழுவதும் ஒரே குடும்பம் என்பதை ஏற்றுக் கொண்டு விட்டோம்.

அப்படியானால் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நமது சகோதர சகோதரிகள்.

நம்மிடம் பல நாட்களுக்குப் போதுமான உணவு இருக்கிறது.

நாம் தந்தையிடம் கேட்டதோ இன்றைய உணவைத் தான்.

அவரோ பல நாட்களுக்குப் போதுமான உணவைத் தந்திருக்கிறார்.

இன்றைக்கு தேவையானதை வைத்துக் கொண்டு,

மீதம் இருப்பதை நமது சகோதர சகோதரிகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமா?

 அல்லது 

நாமே வரும் நாட்களில் சாப்பிடுவதற்காக நம்மிடமே வைத்துக் கொள்ள வேண்டுமா?

இன்றைய உணவை இன்று எங்களுக்குத் தாரும் என்று நாம் தந்தையிடம் கேட்டபோது,

நாளைய உணவையும் சேர்த்துத் தந்தால் அதை எனது சகோதரனோடு பகிர்ந்து கொள்வேன் என்று தான் அர்த்தம்.

அன்றன்றைய உணவை அன்றன்று தந்தை நமக்குத் தருவார் என்ற நம்பிக்கை இருந்தால் இருப்பதைப் பகிர்ந்து கொள்வோம்.

நம்பிக்கை இல்லாவிட்டால்  மீதம் இருப்பதை நாளைக்காகச் சேமித்து வைப்போம்.

செபத்தில் நாம் காண்பிக்கும் நம்பிக்கை உண்மையிலேயே நமக்குள் இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.

உணவைப் பற்றி நாம் சொன்னது அனைத்தும் மற்ற பொருட்களுக்கும் பொருந்தும்.

"இரண்டு அங்கி வைத்திருப்பவன் இல்லாதவனோடு பகிர்ந்து கொள்ளட்டும்:

 உணவு உடையவனும் அவ்வாறே செய்யட்டும்"  இது நற்செய்தி.
(.லூக். 3:11)

நமது அயலானுக்கு எதைக் கொடுத்தாலும் அதைத் தனக்கே தருவதாக இயேசு கூறியிருக்கிறார்.

அவசரத் தேவைகளுக்காக மற்றவர்களுக்கு நம்மிடம் இருப்பதைக் கொடுக்கிறோமா? 

விண்ணகத் தந்தையிடம் வாயால் கூறியதைக் கையால் செய்கிறோமோ?

வருமானத்தில் செலவு போக மீதி இருப்பதைச் சிறு சேமிப்புக் கணக்கில் சேர்த்து வைக்கிறோமே, இது தவறா?

உலக ரீதியாக இதில் தவறு ஒன்றும் இல்லை.

ஆனால் நம்மிடம் இருப்பதை அவசர தேவைகளுக்காக நம்மிடம் வந்து கேட்கும் அயலானுக்குக் கொடுத்து உதவாமல் இருப்பது ஆன்மீக ரீதியாக தவறு.

"கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். 

அமுக்கிக் குலுக்கிச் சரிந்துவிழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். 

ஏனெனில், எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்." (லூக்.6:38)

ஒரு நாளைக்கு தேவையானதுக்கு அதிகமாக தந்தை நமக்குத் தருவது

 தேவைக்கு அதிகமாக இருப்பதை நமது அயலானோடு பகிர்ந்து கொள்வதற்காகத்தான்,

நமது ஆடம்பர வசதிகளை பெருக்கிக் கொள்வதற்காக அல்ல.

நம்மிடம் பணம் இருக்கிறது என்பதற்காக விலை கூடிய ஆடம்பரப் பொருட்களை வாங்கி வீட்டில் குவிப்பது 

நமது பிறர் அன்பு பணிகளுக்கு எதிரானது.

பிறர் அன்பு பணிகளுக்காக கடவுள் தந்த பணத்தை 

நமது ஆடம்பரத்தை அதிகரிப்பதற்காக நாமே செலவழித்தால் 

அது பிறருக்கு சேர வேண்டிய பணத்தைத் திருடுவது போலாகும். 

(தொடரும்)

லூர்து செல்வம்

No comments:

Post a Comment