(மத்.19:20)
நிலை வாழ்வு பெற விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்..
கட்டளைகளைக் கடைப் பிடித்து வாழ்ந்தால்,
அதாவது,
பாவம் இல்லாமல் வாழ்ந்தால் உறுதியாக மோட்ச வாழ்வு கிடைக்கும்.
பள்ளிக்கூடத்தில் தேர்வில் 35 மதிப்பெண்கள் பெற்றால் வெற்றி பெற்று விடலாம்.
ஆனால் நாம் அதோடு திருப்தி அடைந்து விடலாமா?
நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற முயற்சி செய்ய வேண்டாமா?
அவ்வாறேதான் ஆன்மீகத்திலும் நாம் நிறைவு (perfection) பெற முயற்சி செய்ய வேண்டும்.
இயேசு சொல்கிறார்,
"நிறைவு பெற விரும்பினால், போய் உன் உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு. வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும். பின்னர் வந்து என்னைப் பின்செல்."
நிறைவு பெற விரும்புகிறவர்கள் முதலில் தங்களது உடமைகள் எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
பிறகு இயேசுவை முழுமையாகப் பின் செல்ல வேண்டும்.
அவர்களுக்கு வானகத்தில் நிறைய செல்வம் கிடைக்கும்.
இயேசு கொடுத்திருக்கிற இந்த நற்செய்தியை நாம் எப்படி நமது வாழ்வாக மாற்றுவது.
நாம் எல்லோரும் ஒரே மாதிரியான உடைமைகள் உள்ளவர்கள் அல்ல.
சிலருக்கு நில உடைமைகள், கட்டடங்கள், வாகனங்கள் நிறைய இருக்கலாம்
அல்லது
உபயோகத்துக்கு போதுமான அளவு மட்டும் இருக்கலாம்.
சிலர் மாதச் சம்பளம் வாங்குபவர்களாக இருக்கலாம்.
இவர் அன்றாடக் கூலிக்கு வேலை செய்பவர்களாக இருக்கலாம்.
நற்செய்தி அறிவுரை ஒன்று தான்.
அரசு பதிவு அலுவலகம் மூலமாகவோ, அல்லது நேரடியாக பணத்துக்கோ உடைமைகளை விற்று
பணத்தை ஏழைகளுக்கு பங்கு வைத்து கொடுக்க வேண்டுமா?
துறவற அந்தஸ்துக்கு அழைக்கப்படும் நம்மவர்கள் தங்களுக்கு உரிமையான உலகைச் சார்ந்த சொத்துக்களின் உரிமையை கைவிட்டு விட்டு ஒன்றும் இல்லாதவர்களாக துறவற சபைகளில் சேர்ந்து விடுகிறார்கள்.
பின் சபை விதிமுறைகளின் படி வாழ்கிறார்கள்.
ஒருமுறை துறவற சபையைச் சார்ந்த ஒருவர் பிரயாணம் செய்த வாகனத்தைப் பார்த்துவிட்டு நண்பர் ஒருவர்,
"சுவாமி, நீங்கள் உங்களது உலகச் சொத்துக்களைத் துறந்து விட்டு ஏழ்மை வார்த்தப் பாட்டின் படி வாழும் சபையில் சேர்ந்து வாழ்வதாகச் சொல்கிறீர்கள்.
ஆனால் நீங்கள் பயன்படுத்தும் விலை உயர்ந்த வாகனத்தைப் பார்த்தால் அப்படி தெரியவில்லையே?" என்றார்.
அதற்கு அந்தத் துறவி,
"இந்த வாகனம் எனக்கு உரியது அல்ல, நான் பயன்படுத்துகிறேன், அவ்வளவுதான்." என்றார்.
அவர் சொல்லுவது உண்மையாக இருக்கலாம்.
ஆனால் சொந்தப் பொருளாகப் பயன்படுத்தினாலும்,
சொந்தமில்லாமல் பயன்படுத்தினாலும்
பயன்படுத்துவதுதான்.
இயேசு உலகை முழுவதும் படைத்து, பராமரித்து வருபவர்.
ஆனால் அவர் மனிதனாகப் பிறந்த போது அதற்காக ஒரு மாட்டு தொழுவத்தைத் தான் பயன்படுத்தினார்.
சூசையப்பருக்கு நாசரேத்தூரில் சொந்த வீடு இருந்தது.
நினைத்திருந்தால் இயேசு அங்கேயே பிறந்திருக்கலாம்.
ஆனால் நமக்கு முன்மாதிரிகை காண்பிப்பதற்காகத்தான் அவர் மாட்டுக் தொழுவத்தைத் தேர்ந்தெடுத்தார்.
அது மட்டுமல்ல 30 ஆண்டுகள் திருக் குடும்பத்தில் அவர் வாழ்ந்த போது தச்சுத் தொழில் செய்து தான் வாழ்ந்தார்.
ஐந்து அப்பத்தை 5000 பேருக்கு பங்கு வைத்தவருக்கு தச்சுத் தொழில் செய்து தான் பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் உழைப்பின் மகிமையை உலகிற்கு உணர்த்த அவரே உழைத்தார்.
பொது வாழ்வின் போது எங்கு சென்றாலும் நடந்து தான் சென்றார்.
நாம் இயேசுவின் சீடர்கள். அவரை உணர்வுப் பூர்வமாக பின்பற்றுபவர்கள்.
அவர் வாழ்ந்தபடியே சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் நாம் வாழ வேண்டும்.
துறவிகளின் வாழ்க்கை முற்றிலும் இயேசுவின் வாழ்க்கையாக இருக்க வேண்டும்.
இந்த நற்செய்தி துறவிகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது அல்ல.
எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது.
ஆடரம்பர வசதிகள் இல்லாத தனது சொந்த வீட்டில் வாழ்ந்து கொண்டு
அரசு ஊழியராகவோ ஆசிரியராகவோ
பணி புரியும் ஒருவர் எப்படி தனக்குரியதை விற்று ஏழைகளுக்குக் கொடுப்பது?
அதற்கு உடமைகளை விலைக்கு விற்று ஏழைகளுக்கு உதவ வேண்டிய அவசியம் இல்லை.
தன்னையும், தனது உடைமைகளையும் முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டாலே போதும்.
இறைவனுக்கு உரியதை நாம் பயன்படுத்துபவர்களாக மாறிவிடுவோம்.
நாம் பயன்படுத்துவதை ஏழைகளுக்கும் உதவிகரமாக இருக்கும் படியாக பயன்படுத்த வேண்டும்.
வெளியே சென்று உணவைப் பங்கு வைக்க முடியாவிட்டாலும்,
வீட்டு வாசலில் நின்று கொண்டு
"அம்மா தர்மம்"
என்று அழைக்கும் சகோதரருக்கு நமது உணவில் பங்கு அளிக்கலாமே!
இதற்கு தேவைப்படுவது இறைவனுக்காக உதவும் மனம் மட்டுமே.
"உன்னை நேசிப்பது போல உனது அயலானையும் நேசி"
என்ற இறைக் கட்டளைக்குள் அனைத்தும் வந்துவிட்டது.
பத்துக் கட்டளைகளின் படி
நடப்பவர்களுக்கு குறைவாய் இருப்பது அவர்களது உடைமைகளை மற்றவர்களோடு பகிர்ந்து வாழ்வதுதான்.
பகிர்ந்து உண்டால் பசி தீரும்,
உடல் பசி மட்டுமல்ல, ஆன்மீகப் பசியும் தான்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment