Wednesday, August 9, 2023

"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தாலொழிய, அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான், மிகுந்த பலனளிக்கும்." (அரு.12:24)

"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தாலொழிய, அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான், மிகுந்த பலனளிக்கும்." (அரு.12:24)

இரண்டாவது வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மிகப்பெரிய சந்தேகம் ஒன்றுடன் என்னிடம் வந்தான்.

"சார், எங்க வீட்டு முற்றத்தில போட்டு வைத்திருந்த என்னுடைய மாங்கோட்டையை காணவில்லை சார்."

"'யாராவது எடுத்து விட்டு போயிருப்பாங்க. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?"

"அப்படியெல்லாம் எடுத்து விட்டு போக முடியாது, சார். நான் அதை மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்தேன். அது யாருக்கும் தெரியாது."

"'ஏல, சொல்வதை விளக்கமாகச் சொல்."

"எங்க மாமா ஒரு மாம்பழம் வாங்கி வந்திருந்தார். பழம் மிகவும் ருசியாக இருந்தது. பழத்தைச் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எங்கள் வீட்டு முற்றத்தில் புதைத்து வைத்தேன், சார்.

சில நாட்களில் அந்த இடத்தில் இருந்து ஒரு மாங்கன்று முளைத்து வளர்ந்தது.

எனக்கு ஒரு ஆசை. முளைத்து வளர்ந்த மாங்கன்றைப் பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டு விட்டு,

 அந்த மாங்கொட்டையை எடுத்து அதையும் வேறொரு இடத்தில் புதைத்தால் இன்னொரு மாங்கன்று கிடைக்கும்.

அந்த ஆசையில் மாங்கன்றை வேரோடு பிடுங்கினேன்.

ஆனால் அங்கே முதலில் நான் வைத்திருந்த மாங்கொட்டையைக் காணவில்லை."

"'அட மடையா, நீ முதலில் புது புதைத்த மாங்கொட்டையிலிருந்துதான் கன்று முளைத்து வளர்ந்து விட்டதே. பிறகு மாங்கொட்டை எப்படி இருக்கும்."

"மாங்கொட்டைக்கு என்ன ஆகி இருக்கும்?"

"'மாங்கொட்டை தான் மடிந்து கன்றாக மாறிவிட்டது."

"என்ன சொல்கிறீர்கள்? நான் புதைத்த மாங்கொட்டை இறந்துவிட்டது என்கிறீர்களா?"

"'கன்று முளைத்தபின் விதை இருக்காது. கன்று வளர்ந்து மரமாகி பூத்து, காய்த்து, பழம் தரும்."

"அதனால்தான் சாமியார் பிரசங்கத்தில

"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் பலனளிக்கும்." என்றாரோ?

ஆமா. விதைப்பதும் முளைப்பதும் தோட்ட பாடம்.

இதை ஏன் சாமியார் கோவிலில் சொன்னார்?"

'"அப்போ நீ பிரசங்கத்தை முழுவதும் கவனிக்கவில்லை.

இயேசு ஏன் மனிதனாகப் பிறந்தார்?

ஒரே வார்த்தையில் பதில்."

"ஒரே வார்த்தையிலா? கொஞ்சம் பொறுங்கள், யோசித்துச் சொல்கிறேன்.

மரிக்க."

"'Correct. பிறந்த மனிதன் வாழ்வின் இறுதியில் இறக்கிறான். ஆனால் யாரும் இறக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை.


ஆனால் இயேசு இறப்பதற்கென்றே பிறந்தார்.

எப்படி விதை இறந்து பலன் தருகிறதோ,

அப்படியே இறந்து நமக்கு மீட்புத் தரவே இயேசு பிறந்தார்.

அவர் நமக்காக சிலுவையில் மரித்திருக்காவிட்டால் நமக்கு மீட்பு கிடைத்திருக்காது."

கானாவூர் திருமணத்தின் போது இயேசு எனது நேரம் இன்னும் வரவில்லையே என்று சொன்னது ஞாபகத்தில் இருக்கிறதா?

"தனது அன்னையிடம் கூறினார்.
ஞாபகத்தில் இருக்கிறது"

"'இயேசுவின் 33வது வயதில், பாஸ்காத் திருவிழா நெருங்கிக் கொண்டிருந்த போது,

அதாவது,

அவரது மரணம் நெருங்கிக் கொண்டிருந்தபோது,

"மனுமகன் மகிமைபெறும் நேரம் வந்துவிட்டது.

உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:

 கோதுமைமணி மண்ணில் விழுந்து மடிந்தாலொழிய, 

அது அப்படியே இருக்கும்.

 மடிந்தால்தான், மிகுந்த பலனளிக்கும்.''

பாஸ்கா திருவிழா ஞாயிற்றுக்கிழமை.

இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தது அதற்கு முந்திய வெள்ளிக்கிழமை.

''மனுமகன் மகிமைபெறும் நேரம் வந்துவிட்டது."

தான் மரணம் அடையப்போகும் நேரத்தைத் தான் 'மகிமைபெறும் நேரம்' என்று இயேசு குறிப்பிடுகிறார்.

கோதுமை மணி மடிந்தால்தான், மிகுந்த பலனளிக்கும்.

இயேசு மரணம் அடைந்தால் தான் அவர் எந்த பலன் அளிக்க வந்தாரோ அந்தப் பலன் கிடைக்கும்.

தான் படைத்த மக்களின் மீட்புக்காக தன் உயிரைப் பலியாக ஒப்புக்கொடுக்கப் போகும் நேரத்தைத்தான்,

'தான் மகிமைபெறும் நேரம்' என்கிறார்.

இயேசு மனிதனாகப் பிறந்ததே அதற்காகத்தான்.

இயேசுவின் மரணம் தான் மனுக் குலத்துக்கு நித்திய வாழ்வு.

அவர் மரித்ததால் தான் நாம் நமது மரணத்துக்கு பின் நித்திய காலம் வாழ போகிறோம்.

இயேசுவின் மரணம், நமக்கு வாழ்வு, அதாவது மீட்பு.''

"சார், தான் மரணம் அடையப் போகும் நேரத்தை ஏன் மகிமையின் நேரம் என்று அழைக்கிறார்?"

"' தேர்தலில் போட்டியிடும் ஒரு அரசியல்வாதிக்கு மகிமையின் நேரம் எது?"

"தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் நேரம் தான் மகிமை நேரம்."

"'அதாவது அவன் எதற்காகப் போட்டியிட்டானோ அது கிடைக்கும் நேரம்.

இயேசு தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற,

அதாவது மனக்குலம் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்து அதை மீட்க

உலகுக்கு வந்தார்.

சிலுவையில் அவரது பாவ பரிகாரப் பலியின் மூலம் அது நிறைவேறியது.

இயேசு மரித்தவுடன் என்ன செய்தார்?"

''அவரது ஆன்மா பாதாளங்களில் இறங்கி அங்கே மீட்புக்காக காத்துக் கொண்டிருந்த பழைய ஏற்பாடு ஆன்மாக்களை விண்ணகம் அழைத்துச் சென்றார்."

"'அவர் மரித்த வினாடி மனக்குலத்திற்கு மீட்பு சாத்தியம் ஆயிற்று.

அவர் எந்த நோக்கத்திற்காக பிறந்தாரோ அந்த நோக்கம் நிறைவேறிய நேரம் அவரது மகிமையின் நேரம்.

மரித்த மூன்றாம் நாள் கல்லறையிலிருந்து மகிமையுடன் உயிர்த்தார்."

"சார், இயேசுவுக்கு அவர் மரணம் அடைந்த நேரம் மகிமையின் நேரம் என்றால்,

நமக்கு எது மகிமையையின் நேரம்?''

"'நமக்குள் இருக்கும் உலகத்தன்மை முற்றிலுமாக மறைந்து,

ஆன்மீக வாழ்வு மலர்ந்து, 

அதன் மூலமாக விண்ணகம் அடைகிறோமோ அதுவே நமக்கு மகிமையின் நேரம்."

"அதாவது மரணம் தான் நமது மகிமையின் நேரம் என்கிறீர்கள். மரணத்தை நினைத்து பயப்படக்கூடாது என்கிறீர்கள்.

மரணம் தான் நமது விண்ணக வாழ்வின் ஆரம்பம்.

ஆனாலும், சார், நான் நினைக்கிறேன்,

 நாம் பூமியில் வாழும் போது நமது அயலானின் நலனுக்காக எப்போதெல்லாம் நம்மைத் தியாகம் செய்கிறோமோ 

அப்போதெல்லாம் நமக்கு மகிமையின் நேரம்தான் என்கிறேன்.

இயேசு நமக்காக தன்னையே தியாகம் செய்து மகிமை அடைந்தார்.

அவரைப் போலவே நாம் வாழ்ந்தால் நமக்கும் அவரது மகிமையில் பங்கு கிடைக்கும் அல்லவா."

'''மிகவும் சரி. நமது அயலானுக்காக நம்மையே தியாகம் செய்யும்போது நாம் மற்றொரு கிறிஸ்துவாக மாறுகிறோம்.

நாமும் கோதுமை மணி போல் மடிந்து பலன் அளிக்கலாமே!"

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment