தன் திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்ற வீட்டுத்தலைவர்
நாள் ஒன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு என்று வேலையாட்களுடன் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சைத் தோட்டத்திற்கு அனுப்பினார்.
அதே கூலி அடிப்படையில்
9 மணிக்கும்,
பன்னிரண்டு மணிக்கும்
பிற்பகல் மூன்று மணிக்கும்
ஐந்து மணிக்கும்
ஆட்கள் வேலைக்கு அமர்த்த படுகின்றனர்.
மாலையானதும் திராட்சைத் தோட்டத் தலைவர் தன் காரியத்தலைவனிடம்,
"வேலையாட்களைக் கூப்பிட்டுக் கடைசி ஆள் தொடங்கி முதல் ஆள்வரை கூலிகொடு" என்றார்.
ஐந்து மணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் வந்து தலைக்கு ஒரு வெள்ளிக்காசு பெற்றுக்கொண்டார்கள்.
இதைக் கவனித்த முதலில் வந்தோர் தங்களுக்கு அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால் அனைவருக்கும் அதே கூலி தான் கொடுக்கப்பட்டது.
விண்ணரசுக்குச் செல்ல ஆள்களைத் தயார் செய்ய பூமியில் நிறுவப்பட்ட திராட்சை தோட்டம் தான் நமது தாயாகிய கத்தோலிக்க திருச்சபை.
திருச்சபை தன்னில் இணைந்து ஆன்மீக வாழ்வு வாழ்பவர்களுக்கு நித்திய நிலை வாழ்வு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கின்றது.
சிலர் குழந்தைப் பருவத்திலிருந்து தங்கள் வாழ்நாளின் இறுதி கட்டம் வரை திருச்சபையில் ஆன்மீக வாழ்வு வாழ்கின்றார்கள்.
சிலர் குழந்தைப் பருவத்திலிருந்து எப்படியெல்லாமோ வாழ்ந்து விட்டு முப்பது வயதில் திருச்சபையில் ஆன்மீக வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள்.
சிலர் 50 வயதிலும்,
சிலர் 70 வயதிலும்,
சிலர் மரண நேரத்திலும்
ஆன்மீக வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அவர்கள் ஆன்மீக வாழ்க்கையை வாழும் காலம் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது.
ஆனால் மரணத்துக்குப் பின் எல்லோருக்கும் நித்திய நிலை வாழ்வு வழங்கப்படுகிறது.
பூமியில் நீண்ட நாள் ஆன்மீக வாழ்வு வாழ்ந்தவர்களுக்கு நீண்ட கால மோட்சமும்,
குறைந்த காலம் ஆன்மீக வாழ்வு வாழ்ந்தவர்களுக்கு குறுகிய கால மோட்சமும் வழங்கப்படுவதில்லை.
எல்லோருக்கும் நித்திய கால வாழ்வு தான்.
முதலில் நிலை வாழ்வு பெற்றோர் கடைசியில் பெற்றோருக்கு சமமாகி விடுகிறார்கள்.
கடைசி = முதல்
முதல் = கடைசி
விண்ணக சாம்ராஜ்யத்திற்குள்
கடைசியில் நுழைப்பவர், முதலில் நுழைப்பவருக்கு சமமாவர்.
முதலில் நுழைப்பவர் கடைசியில்
நுழைப்பவருக்குச் சமமாவர்.
அது எப்படி?
உலகில் ஒரு அலுவலகத்தில் பணி புரிவோருக்கு உரிய பணிமூப்புப் பட்டியல்
(Seniority list) தயாரிப்பவர்கள் முதலில் பணியில் சேர்ந்தவர்களிடமிருந்து ஆரம்பிப்பர்.
உலகம் இடம், நேரம் ஆகிய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது.
ஒரு குடும்பத்தில் நான்கு உறுப்பினர்கள் இருந்தால்
ஒவ்வொருவர் இருக்கவும் ஒரு இடம் இருக்கும்.
ஒருவர் இருக்கும் இடத்தில் இன்னொருவர் இருக்க முடியாது.
மேலும் ஒவ்வொருவரும் பிறந்த ஆண்டிலிருந்து அவர்களுடைய வயது கணக்கிடப்படும்.
நால்வரில் மூத்தவர்களும் இருப்பர். இளையவர்களும் இருப்பர்.
ஆனால் விண்ணரசு இடம், நேரம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது.
(Beyond place and time)
உலகில் இருப்பது போல் அங்கு இடம் கிடையாது,
நேரமும் கிடையாது.
உலகம் படைக்கப்பட்டது முதல் நேரம் ஆரம்பித்தது.
உலகம் முடியும் போது நேரமும் முடிவுக்கு வந்துவிடும்.
ஆனால் விண்ணரசுக்கு துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை.
ஏனென்றால்,
விண்ணரசராகிய கடவுளுக்கு துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை.
உலக கணக்கின்படி 1990மாவது ஆண்டில் ஒருவர் விண்ணரசுக்குள் நுழைந்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம்.
இன்னொருவர் 2000மாவது ஆண்டில் நுழைந்தார்.
உலக கணக்கின்படி ஒருவர் முன்னாலும் இன்னொருவர் பின்னாலும் நுழைந்தார்கள்.
ஆனால் நேரம் இல்லாத விண்ணுலகில் முன், பின் என்ற கருத்துக்கே இடமில்லை.
உலக கணக்குப்படி முதலாமவர்களும், கடைசியானவர்களும்
விண்ணகத்தில் ஒன்றுதான்.
மக்கள் உலக கணக்குப்படி எந்த காலத்தில் விண்ணரசில் நுழைந்தாலும்
அவர்களுக்கு நித்திய நிலைவாழ்வு தான் சன்மானமாக வழங்கப்படும்.
விண்ணரசில் துவக்கம், முடிவு, நேற்று, இன்று, நாளை போன்ற காலக் கருத்துகளுக்கு இடமில்லை.
2023ஆண்டுகளுக்கு முன் விண்ணரசுக்குள் நுழைந்த நல்ல கள்ளனுக்கும்
இன்று நுழைப்பவர்களுக்கும்,
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து நுழைப்பவர்களுக்கும்
ஒரே நிலைவாழ்வு தான்.
உவமையில் வரும் திராட்சை தோட்ட முதலாளி நாள் ஒன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு என்ற அடிப்படையில் வேலைக்கு ஆள் அமர்த்தியது போல
நமது ஆண்டவராகிய இயேசு,
"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: எனது வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரிடத்தில் விசுவாசம் கொள்பவன், முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்."
என்று வாக்களித்துள்ளார்.
"அவர் நமக்கு வாக்களித்தது முடிவில்லா வாழ்வாகும்."
(1அரு.2:25)
ஏக, பரிசுத்த. கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையில் வாழும் நமக்கு நித்திய நிலை வாழ்வு காத்திருக்கிறது.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment