Monday, August 28, 2023

"அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)(தொடர்ச்சி)4

"அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)
(தொடர்ச்சி)4

"எங்களைச் சோதனையில்  
 விழவிடாதேயும்"



அரசுப் பொதுத் தேர்வுக்காகப் பாடங்களைப் படித்துத் தயாரித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு,

பாடப் புத்தகத்தை வைத்துவிட்டு கதைப் புத்தகத்தை எடுத்து வாசிக்கலாமா என்று சோதனை வரும்.

பள்ளிக்கூடத்திற்குப் போய்க் கொண்டிருக்கும் போது சினிமாவுக்குப் போகலாமா என்று சோதனை வரும்.

ஆன்மீக வாழ்விலும் விண்ணகத்தை நோக்கி புண்ணிய நடை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பாவத்தில் விழலாமா என்று சோதனை வரும்.

பாவச் சோதனைகள் வரும்போது அவற்றை எதிர்த்து நின்று ஜெயிக்க போதுமான அருள் வரம் வேண்டி தந்தையிடம் ஜெபிக்கிறோம்.

ஒரு நோயாளி வைத்தியரிடம் செல்லும் போது தனது நோய் குணமாக வேண்டும் என்று அவனுக்கு ஆசை இருக்க வேண்டும்.

நோயாளியாகவே வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்ற ஒருவன் மருத்துவரிடம் சென்று பயனில்லை.

அதேபோல் நமது ஆன்மீக வாழ்வில் பாவச் சோதனைகளை வென்று புண்ணிய வாழ்வு வாழ வேண்டும் என்ற ஆசை நமக்கு இருக்க வேண்டும்.

பாவ வாழ்வே வாழ வேண்டும் என்று ஆசையோடு இருக்கும் ஒருவன் விண்ணகத் தந்தையை நோக்கி,

"எங்களைச் சோதனையில்  
 விழவிடாதேயும்."

என்று வேண்டுவது அர்த்தமற்றது.

மது அருந்துவதையே வழக்கமாகக் கொண்ட ஒருவன் 

கையில் ஜெபமாலையுடனும்,
வாயில் கர்த்தர் கற்பித்த செபத்துடனும், மங்கள வார்த்தை செபத்துடனும் மதுக் கடைக்குச் சென்றால்

அவன் கடவுளைக் கேலி செய்கிறான் என்று அர்த்தம். 

ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்குச் செல்லாமல்,

YouTube ல் பூசை பார்த்துக் கொண்டு,

விண்ணகத் தந்தையை நோக்கி சொல்லும் ஜெபத்திற்குப் பொருளே இல்லை.

"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்"

என்று ஜெபிக்கும் நாம் பாவ சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

அசிங்கமான காட்சிகள் நிறைந்த சினிமா என்று தெரிந்தும் சினிமா தியேட்டருக்குள் சென்று உட்கார்ந்தபின்,

''தந்தையே, அசிங்கமான காட்சிகள் வரும்போது நான் அவற்றைப் பார்க்காதபடி என்னைக் காப்பாற்றும்" 

என்று வேண்டினால்,

தந்தை நம்மை நோக்கி,

"முதலில் தியேட்டரை விட்டு வெளியே போ."

என்று தான் சொல்வார்.

ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்கு செல்லும் போது திருப்பலி மட்டும்தான் நமது எண்ணத்தில் இருக்க வேண்டும்.

கண் பீடத்தில் இருக்க வேண்டும்.
காது குருவானவர் சொல்லும் ஜெபத்தில் இருக்க வேண்டும்.

அங்கும் எங்கும் பராக்குப் பார்க்கக் கூடாது.

யாரைப் பாவத்தில் விழத்தாட்டலாம் என்று சுற்றித் திரியும் சாத்தான்,

அசிங்கமான (Indecent) உடை அணிந்து கோவிலுக்குள்ளும் வந்திருப்பான்.

அவனைப் பார்க்க நேர்ந்தால் கண் பீடத்திற்குச் செல்லாது.

அவன் மேல் தான் நிற்கும்.

குளிக்கச் சென்று சேற்றை அள்ளி பூசி விடக் கூடாது.

கண்ணைப் பீடத்தின் மீதும் குருவானவர் மீதும் வைத்திருந்தால் பாவ சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படும்.

(சாத்தானிடம் சென்று decent ஆக உடை அணிந்து வந்தால் என்ன என்று கேட்டால் 'என்னுடைய சுதந்திரத்தில் தலையிட நீ யார்?' என்று கேட்பான்.)

கண்ணடக்கம் கோவிலில் மட்டுமல்ல தெருவிலும் தேவை.

திருமண விருந்துக்குச் செல்கிறோம்.

பிரியாணி பரிமாறப்படுகிறது.

மிகவும் ருசியாக இருக்கிறது.

மட்ட சனம் என்னும் புண்ணியமும்,

 போசன பிரியம் என்ற தலையான பாவமும் 

நம் கண் முன் நின்று நம்மை அழைக்கின்றன.

பாவத்தில் விழாதிருக்க வேண்டுமானால் நாம் தான் நமது நாவை அடக்கி அளவோடு சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் முன் ஒரு கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்லிவிட்டு,

சாப்பாட்டின் மீது சிலுவையும் போட்டுவிட்டு,

ருசியைப் பார்த்தவுடன் அளவுக்கு மீறி சாப்பிட்டால்

 நாம் சொன்ன ஜெபத்துக்கும் பொருளில்லை,
 போட்ட சிலுவைக்கும் பொருள் இல்லை.

பாவத்தில் விழாதிருக்க நமக்குத் தந்தை போதிய அருள் வரங்களைத் தருவார்,

 ஆனால் நாம் அவற்றை பயன்படுத்தினால் தான் பலன் பெறுவோம்.

கடவுளோடு நாம் ஒத்துழைக்க வேண்டும்.

 கடவுள் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் சம்மனசை ஆன்மீக துணையாளராகத் தந்திருக்கிறார்.

தனது உட்தூண்டுதல்களால் (Inspiration) அவர் நம்மை வழி நடத்துவார்.

சோதனை சமயத்தில் நமக்கு உதவுமாறு நமது காவல் சம்மனசிடம் செபிக்க வேண்டும்.

நாம் எப்போதும் செப உணர்வோடு,

நமது விண்ணகத் தந்தையை நினைத்துக் கொண்டே வாழ்ந்தால்,

சோதனைக்குள் விழமாட்டோம்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment