(மத்.17:20)
கடுகளவு விசுவாசம் நம்மிடம் இருந்தால் ஒரு மலையை இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்லச் செய்ய முடியும் என்று ஆண்டவர் கூறுகிறார்.
நம்மால் ஒரு குண்டூசியைக் கூட அசைக்க முடியவில்லை.
ஆண்டவர் கருத்துப்படி நம்மிடம் விசுவாசம் கொஞ்சம் கூட இல்லை.
விசுவாசிகள் என்ற பெயர் மட்டும் இருக்கிறது.
நாம் விசுவாசம் என்ற வார்த்தைக்கு நமது மனதில் முழுமையற்ற கருத்து ஒன்றை பதித்து வைத்திருக்கிறோம்.
"சர்வ லோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல சர்வேஸ்வரனை விசுவசிக்கிறேன்."
"எல்லாம் வல்ல கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று ஏற்றுக் கொள்கிறேன்."
என்ற பொருளை மட்டும் எடுத்துக் கொள்கிறோம்.
"நான் ஏற்றுக் கொள்கிற எல்லாம் வல்ல கடவுளுக்கு ஏற்ற அர்ப்பண வாழ்வு வாழ்கிறேன்"
என்ற பொருளை எடுத்துக் கொள்ளவில்லை.
அர்ப்பண வாழ்வு வாழ்ந்தால் அவர் எல்லாம் வல்லவர் என்பது நமது ஆன்மீக அனுபவத்தின் மூலம் நமக்குத் தெரியும்.
"விசுவசிப்பவர்களிடம் இவ்வருங்குறிகள் காணப்படும்: என் பெயரால் பேய்களை ஓட்டுவர், புதிய மொழிகளைப் பேசுவர்,
18 பாம்புகளைக் கையால் பிடிப்பர். "கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது.
பிணியாளிகள் மேல் கைகளை வைப்பர், அவர்களும் நலமடைவர்" என்றுரைத்தார்."
நம்மில் எத்தனை பேரிடம் இவ்வருங்குறிகள் காணப்படுகின்றன?
புனித அந்தோனியார் நஞ்சு கலந்த உணவைச் சாப்பிட்டார். ஆனால் சாகவில்லை. அவர் முழுமையாக விசுவாசி.
பிணியாளர்கள் மீது கையை வைத்தார். அவர்கள் குணமானார்கள். அவர் முழுமையாக விசுவாசி.
ஆகவே தான் அவரால் கோடிக் கணக்கில் புதுமைகள் செய்ய முடிந்தது.
நாம் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது.
நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் அவருக்கு மட்டும் அர்ப்பணிக்க வேண்டும்.
நமது ஒவ்வொரு சிந்தனையையும், ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு செயலையும் அவருக்கு மட்டுமே அர்ப்பணித்து வாழ வேண்டும்.
அப்படி வாழ்ந்தால் பேய்கள் கூட நமக்குப் பயப்படும்.
புனிதர்கள் அர்ப்பண வாழ்வு வாழ்ந்தார்கள்.
இன்று அவர்களது திருத்தலங்களில் புதுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
நாம் முழுமையாக அர்ப்பண விசுவாச வாழ்வு வாழ்ந்தால் நமக்கென கடவுளிடம் எதுவும் கேட்டு விண்ணப்பிக்க மாட்டோம்.
ஏனெனில் நாம் வாழ்வது அவரது சித்தம் நிறைவேறுவதற்காக மட்டும்.
அர்ப்பண வாழ்வு வாழ்பவர்களில் இயேசுவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவர்களுக்கு வேண்டியதை அவரே பார்த்துக் கொள்வார்.
அவரிடம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இயேசு அன்புமயமானவர்.
அவருக்காக தங்களையே அர்ப்பணித்து வாழ்பவர்கள் அன்பினால் மட்டும் இயக்கப்படுவார்கள்.
அவர்களுடைய சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் அன்பு மட்டுமே பிரதிபலிக்கும்.
அவர்கள் அதிசயங்கள் செய்வதற்காக அன்பு செய்ய மாட்டார்கள்.
அவர்களுடைய அன்பு தான் அதிசயங்களைச் செய்யும்.
விசுவாச சத்தியங்களை ஏற்றுக் கொள்வோம், வாழ்வோம்.
அர்ப்பணித்து வாழ்வோம்.
அர்ப்பணித்து வாழ்வதே விசுவாசம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment