Wednesday, August 16, 2023

"ஏழு முறை என்றன்று, எழுபது முறை ஏழு முறை என உனக்குச் சொல்லுகிறேன்."(மத்.18:22)

"ஏழு முறை என்றன்று, எழுபது முறை ஏழு முறை என உனக்குச் சொல்லுகிறேன்."(மத்.18:22)

இராயப்பர் இயேசுவிடம்,

 "ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு எதிராகக் குற்றஞ் செய்துவந்தால், நான் அவனை எத்தனை முறை மன்னிப்பது?

 ஏழு முறைவரைக்குமா?" என்று கேட்டார்.

அதற்கு இயேசு,

"ஏழு முறை என்றன்று, எழுபது முறை ஏழு முறை என உனக்குச் சொல்லுகிறேன்." என்றார்.

தவறுவது மனித இயல்பு.
To err is human.

மன்னிப்பது தெய்வீக இயல்பு.
To forgive is divine.

நமது ஆதித் தாய் செய்த பாவத்தினால் நாம் ஜென்மப் பாவத்தோடு பிறந்தோம்.

நாம் ஞானஸ்நானம் பெற்றபோது நமது ஜென்மப் பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டாலும்

 நமது பாவ இயல்பு நம்மோடு தான் இருக்கிறது.

ஆகவேதான் நாம் அடிக்கடி பாவம் செய்கிறோம்.

பாவிகள் என்ற பேரையும் சம்பாதித்துக் கொண்டோம்.

நாம் பாவம் செய்யும்போது கடவுளுக்கு நம் மீது கோபம் ஏற்படவில்லை.

ஏற்பட்டிருந்தால் நமது ஆதி பெற்றோரே அழிந்திருப்பார்கள்.

கோபம் அவரது இயல்பு அல்ல.

அன்பும், இரக்கமுமே அவரது இயல்பு.

அன்பும், இரக்கமும் உள்ள இடத்தில் மன்னிக்கும் குணமும் இயல்பாக இருக்கும்.

எப்படி அவரது அன்புக்கு அளவில்லையோ,

எப்படி அவரது இரக்கத்துக்கு அளவில்லையோ

அப்படியே அவர் மன்னிப்பதற்கும் அளவில்லை.

ஆகவே தான் நமது இயல்பின் படி நாம் எத்தனை முறை பாவம் செய்தாலும்,

'பாவத்திற்காக வருந்தி, மன்னிப்புக் கேட்டால் உடனே மன்னித்து விடுகிறார். 

ஆகவே தான் இராயப்பர் ஏழு முறை மன்னித்தால் போதுமா என்று கேட்ட போது,

ஏழு முறை அல்ல எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்க வேண்டும் என்கிறார்.

மன்னிப்புக் கேட்கும் போது இனிமேல் இத்தகைய பாவத்தைச் செய்ய மாட்டேன் என்ற மன உறுதியோடு தான் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

இந்த மன உறுதியில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஆனாலும் மனித இயல்பின் காரணமாக அதே பாவத்தில் நாம் திரும்பவும் விழ நேரிடலாம்.

விழ நேரிட்டால் நாம் எழுந்து நிற்க வேண்டும்.

திரும்பவும் பாவத்திற்காக வருத்தப்பட்டு இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

உடனே மன்னிப்புக் கிடைக்கும்.

திரும்பவும் பாவத்தில் விழாதபடி அருள் வரங்களை இறைவனிடம் கேட்டு மன்றாட வேண்டும்.

இறைவனது அருளின் உதவியால் நாம் திரும்பவும் பாவத்தில் விழ மாட்டோம் என்று நம்ப வேண்டும்.

நமது இடைவிடாத ஜெபம் தான் நம்மை பாவத்தில் விழாதபடி காப்பாற்றும்.

ஆனாலும் மனித பலவீனத்தால் நாம் திரும்பவும் பாவத்தில் விழ நேர்ந்தால் எழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டுமே தவிர நம்பிக்கையை இழந்து விடக்கூடாது.

பாவ மன்னிப்பு பெறுவதற்காகத்தான் நம் ஆண்டவர் பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

காலையில் குளித்துவிட்டு வெளியே போகிறோம்.

மறுநாள் காலையிலும் குளித்துவிட்டு வெளியே போகிறோம்.

தினமும் காலையில் குளிப்பதற்கு நாம் வெட்கப்படுவதில்லை.

பாவ சங்கீர்த்தனம் செய்யத் தேவைப்பட்டால் செய்ய வெட்கப்படக் கூடாது.

பாவ சங்கீர்த்தின் போது நாம் பேசுவது நமது மீட்பராகிய இயேசுவிடம்தான்.

இயேசுவோடு பேச ஏன் வெட்கப்பட வேண்டும்?

நாம் எத்தனை முறை மன்னிப்புக் கேட்டாலும் இயேசு மன்னிப்பார்.

இது அவரே நமக்குத் தந்திருக்கும் வாக்குறுதி.

அவர் கொடுத்த வாக்கை மீற மாட்டார்.

நமது உடம்பில் சகதி பட்டால் மட்டுமா குளிக்கிறோம்?

தூசி பட்டாலும் குளிப்பதில்லை?

அதுபோல் அற்ப பாவங்கள் செய்தாலும் அவற்றிற்காக பாவ சங்கீர்த்தனம் செய்யலாம்.

நாம் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்வோம்.

அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்து நமது ஆன்மாவின் பரிசுத்தத்தனத்தைக் காப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment