நண்பர் ஒருவர் திருமணம் முடித்த சில தினங்களுக்குள் மனைவியோடு தனிக் குடித்தனம் சென்று விட்டார்.
"உங்களைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி, படிக்க வைத்து, வேலையும் வாங்கி கொடுத்து ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்த உங்கள் பெற்றோரை இப்படி தனியே விட்டுவிட்டு வந்து விட்டீர்களே, இது சரியா?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்,
"சார், நீங்கள் பைபிளே வாசிப்பதில்லையா?
"கணவன் தன் தாய் தந்தையரை விட்டுத் தன் மனைவியோடு கூடி இருப்பான்."
என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்.
நீங்கள் கிறிஸ்தவர் தானே. இயேசுவுக்கு விரோதமாக பேசலாமா?"
இப்படித்தான் சிலபேர் பைபிளையே பைபிளுக்கு விரோதமாகப் பயன்படுத்துகிறார்கள்.
இயேசுவின் மேல் நம்பிக்கை இல்லாத ஒருவர் ஒழுங்காக ஜெபம் சொல்லும் ஒருவரை நோக்கி,
"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான்."
என்று இயேசுவே சொல்லி இருக்கிறார்.
நீங்கள் அவர் சொன்னதற்கு மாறாக அவரை நோக்கி ஆண்டவரே ஆண்டவரே என்று அழைக்கிறீர்களே!
நீங்கள் நரகத்துக்கு போவது உறுதி." என்றார்.
வசனத்தின் தொடர்ச்சியாகிய
"வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான்."
என்ற வரிகளை அவர் சொல்லவில்லை.
'' நற்செய்தியை வாழாமல் வாயினால் ஜெபிப்பதால் மட்டும் பயனில்லை.
இயேசுவைப் பார்த்து ஆண்டவரே ஆண்டவரே என்று அழைப்பவர்கள் விண்ணகத் தந்தையின் சித்தப்படி நடக்கவும் வேண்டும்."
என்ற பைபிளின் அறிவுரையை பைபிள் வசனத்தைக் கொண்டே மறுத்துப் பேசத் தங்கள் புத்தியை சிலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நாத்திகன் ஒருவன் ''கடவுள் இல்லை" என்று பைபிளே கூறுகிறது, என்றான்.
"கடவுள் இல்லை" என்று அறிவிலி தனக்குள் சொல்லிக் கொள்கிறான்: "
என்ற முழு வசனத்தையும் அவன் வேண்டுமென்றே கூறவில்லை.
பைபிளை வைத்துக் கொண்டு விளையாடுபவர்கள் மட்டில் கவனமாக இருப்போம்.
குழந்தை பிறந்தவுடன் தனது தாயின் முகத்தையே பார்க்கிறது.
அதற்கு தாய் தான் எல்லாம்.
அதைப் பாலூட்டி சீராட்டி வளர்ப்பவள் அவள் தான்.
தாயை விட்டு குழந்தையைப் பிரிக்க முடியாது.
தாயைத் தவிர வேறு யாராலும் குழந்தைக்கு பாலூட்ட முடியாது.
ஆகவே குழந்தை எப்போதும் தாயோடே ஒட்டிக் கொண்டிருப்பதில் தவறு ஏதுமில்லை.
குழந்தை முகம் பார்க்க ஆரம்பித்தவுடன் தாய் அதற்குத் தந்தையை அறிமுகப்படுத்தி வைக்கிறாள்.
அதன்பின் அது வளரும் வரை அதற்கு எல்லாம் தாயும் தந்தையும் தான்.
பிள்ளை வெளி உலகில் இறங்கும் போதும் கூட பெற்றோரின் அறிவுரையின் படி தான் நடந்து கொள்ளும்.
மற்றவர்களோடு பழகும் போதெல்லாம் பெற்றோரின் ஞாபகம் பிள்ளையின் மனதில் இருக்கும்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது படிப்பில் இருக்கும் ஆர்வத்தைப் போலவே
பெற்றோர் மீதும் ஆவல் இருக்கும்.
ஏனெனில் அவனைப் படிக்க வைப்பவர்கள் பெற்றோரே.
திருமண வயது வந்தவுடன் பெற்றோர் தங்களது பையனுக்கு ஏற்ற பெண்ணாகப் பார்த்து அவனுக்கு திருமணம் செய்து வைக்கின்றார்கள்.
திருமண அமைப்பு இறைவனால் ஏற்படுத்தப்பட்டது.
அவர் மனிதனைப் படைக்கும் போது ஆணும் பெண்ணுமாகவே,
அதாவது,
கணவனும் மனைவியுமாகவே படைத்தார்.
கணவனும் மனைவியும் ஒரு உடலில் வாழும் இரண்டு உயிர்களைப் போல இணைந்திருக்க வேண்டும் என்பது அவரது திட்டம்.
பெற்றோர் தங்கள் மகனுக்குத் திருமணம் செய்து வைக்கும் போது
திருமணமான கணவனும் மனைவியும் இறைவனின் திட்டப்படி வாழ வேண்டும்.
எப்படி அவனுடையபெற்றோர் இருவராயினும் ஒருவராய் வாழ்ந்தார்களோ
அப்படியே திருமணம் முடித்த மகனும் அவன் மனைவியும் வாழ வேண்டும்.
இப்போது ஒரு குடும்பம் இரண்டு குடும்பங்களாக மாறி இருக்கிறது.
குடும்ப அமைப்பில் இரண்டாவது குடும்பம், முதல் குடும்பத்தைப் போலவே தனித்துவத்தைக் கொண்டது.
எப்படி அப்பாவும் அம்மாவும் ஒரு குடும்பமாக ஒருவரோடு ஒருவர் இணைக்கப்பட்டு வாழ்ந்தார்களோ
அதேபோல மகனும் மருமகளும் மற்றொரு குடும்பமாக ஒருவரோடு ஒருவர் இணைக்கப்பட்டு வாழ வேண்டும்.
இரண்டும் வெவ்வேறு குடும்பங்கள்.
ஒரு குடும்பத்தின் உள் விவகாரங்களில் தலையிட மற்றொரு குடும்பத்திற்கு உரிமை இல்லை.
அதாவது மகனின் குடும்பத்தில் உள் விவகாரங்களில் தந்தை தலையிடக்கூடாது.
அந்த அர்த்தத்தில் மகனின் குடும்பம் தந்தையின் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்துவிட்டது.
ஆனால் குடும்பம் என்ற சமூக அமைப்பை விட்டு வெளியே வரவில்லை.
குடும்பம் என்ற சமூக அமைப்பு இறை அன்பினாலும், பிறர் அன்பினாலும் கட்டுப்பட்டது.
அப்பாவும் அம்மாவும் தங்களை நேசிப்பது போலவே தங்களது மகனையும் மறுமகளையும் நேசிப்பார்கள்.
உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றால் நேசிக்கக் கூடாது என்று அர்த்தம் அல்ல.
கடவுள் மனிதனைப் படைக்கும் போது அவனுக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுத்தார்,
ஆனாலும் அவனை முழுமையாக, அளவு கடந்து நேசித்தார்.
மனிதன் முழுமையான சுதந்திரத்தோடு வாழ்ந்தாலும்
இறைவனின் அன்புக்கு கட்டுப்பட்டே வாழ்ந்தான்.
அதே போல் தான் திருமணமான மகன் திருமணத்தின் உள் விவகாரங்களில் முழுமையான சுதந்திரத்தோடு வாழ்ந்தாலும்,
மகன் என்ற முறையில் தந்தையின் அன்புக்கு கட்டுப்பட்டவன்.
திருமணமாகுமுன் தன் பெற்றோரை எப்படி நேசித்தானோ
அதே போல் தான் திருமணத்திற்கு பின்னும் நேசிக்க வேண்டும்.
திருமணத்திற்கும் பின் இறைவனது நான்காவது கட்டளையை மறந்து விட வேண்டும் என்று இயேசு சொல்லவில்லை.
தான் பையனாக இருந்த போது தனது பெற்றோரை எப்படி நேசித்தானோ அதேபோல்தான் தனது முதுமையிலும் பெற்றோரை நேசிக்க வேண்டும்.
தனது பிள்ளைகளை எப்படி நேசிக்கிறானோ அதே போல் தான் தனது பெற்றோரையும் நேசிக்க வேண்டும்.
ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும் என்ற கட்டளை,
ஒரு குடும்பம் மற்றொரு குடும்பத்தை நேசிக்க வேண்டும் என்ற கட்டளைக்கு எதிரானது அல்ல.
திருக்குடும்பம் உலகில் உள்ள மற்ற எல்லா குடும்பங்களையும் தேசித்ததால் தான்
மற்ற எல்லா குடும்பங்களுக்காகவும் தன்னையே பலியிட தங்கள் மகனை அளித்தது.
நமது மீட்பர் ஒரு குடும்பத்திலிருந்து தான் வந்தார்.
சூசையப்பரோ மாதாவோ தங்கள் மகனைப் பார்த்து,
"நீங்கள் ஏன் மற்றவர்கள் குடும்பத்தின் ஆன்மீக விஷயங்களில் தலையிடுகிறீர்கள்".
என்று கேட்கவில்லை.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் குடும்பத்தின் ஆன்மீக காரியங்களில் ஆலோசனை கூறக்கூடாது என்று இயேசு சொல்லவில்லை.
தங்கள் மகனும் மருமகளும் ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு பெற்றோர் இடையூறாக இருந்து விடக்கூடாது.
எப்படி பங்குத் தந்தையின் ஆன்மீக ஆலோசனைக்கு பங்கில் உள்ள அனைத்து குடும்பங்களும் கட்டுப்பட்டு இருக்கின்றனவோ
பெற்றோரின் ஆன்மீக ஆலோசனைக்கு மகனும், மருமகளும் கட்டுப்பட்டிருக்கிறார்கள்.
மனைவியின் பேச்சைக் கேட்டு மகன் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போனால்,
"மகனே இன்று ஆண்டவரின் நாள். உனது மனைவியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு வா.''
என்று பெற்றோர் மகனுக்கு ஆலோசனை கூற வேண்டும்.
இது உள் விவகாரங்களில் தலையிடுவது ஆகாது.
பிள்ளைகளை ஆன்மீகத்தில் வளர்க்க பெற்றோருக்கு உரிமை மட்டுமல்ல, கடமையும் உண்டு.
எப்படி வண்டியின் ஒரு சக்கரம் உருள மறுத்தால் வண்டியே நகர மறுக்குமோ,
அதேபோல இறைச் சமுகத்தில் உள்ள குடும்பங்களில் ஏதாவது ஒரு குடும்பம் இறைச் சித்தத்திற்கு எதிராக நடந்தால்
அது மொத்த இறைச் சமுகத்தையும் பாதிக்கும்.
அலுவலகத்திற்குச் செல்லும் போது நமது சட்டையின் ஒரு கையை கிழித்துப் போட்டு விட்டு.
ஒற்றைக் கை சட்டையைப் போட்டு அலுவலகம் சென்றால் எல்லோரும் நம்மைத்தான் பார்ப்பார்கள்,
ஆச்சரியத்தோடு அல்ல, நக்கலாக.
தந்தையின் அன்புள்ள ஆன்மீக ஆலோசனையைக் கேட்டு மகன் நடக்காவிட்டால்
அவனுடைய குடும்பத்தையும் உலகம் இப்படித்தான் பார்க்கும்.
திருமணமான மகன் தன் மனைவியோடு ஓருடலாய், அன்புடன் வாழ வேண்டும்.
தன்னைப் பெற்று வளர்த்துவிட்ட தனது பெற்றோரை நேசிக்கவும் மறந்து விடக்கூடாது.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment