Tuesday, August 1, 2023

"விண்ணரசு, நிலத்தில் மறைந்துள்ள புதையலுக்கு ஒப்பாகும். அதைக் கண்டுபிடித்தவன் அதை மறைத்துவிட்டு, அதைக் கண்ட மகிழ்ச்சியில் போய்த் தனக்குள்ளதெல்லாம் விற்று அந்நிலத்தை வாங்கிக்கொள்கிறான்."(மத்.13:44)

"விண்ணரசு, நிலத்தில் மறைந்துள்ள புதையலுக்கு ஒப்பாகும். அதைக் கண்டுபிடித்தவன் அதை மறைத்துவிட்டு, அதைக் கண்ட மகிழ்ச்சியில் போய்த் தனக்குள்ளதெல்லாம் விற்று அந்நிலத்தை வாங்கிக்கொள்கிறான்."
(மத்.13:44)

"தாத்தா, கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் அவருக்கு எதிராகப் பாவங்கள் செய்து வாழும்போது

 அவருக்கு அவர்கள் மேல் கோபம் வருமா?

 அல்லது அவர்களைப் படைத்ததற்காக வருத்தம் ஏற்படுமா?"

"'பேரப்புள்ள, கடவுள் அவருடைய பண்புகளே உருவானவர்.

கடவுள் அன்பு உள்ளவர் என்று சொல்வதை விட அன்பே கடவுள் என்று சொல்வது தான் பொருந்தும்.

அன்புக்குள் வெறுப்பு இருக்க முடியுமா?  முடியாது.

இரக்கமே கடவுள்.
இரக்கத்துக்குள்  கோபம் இருக்க முடியுமா?  முடியாது.

ஒரு பண்புக்குள் அதற்கு எதிர் மாறான வேறொரு  பண்பு இருக்க முடியாது.

கடவுள் மகிழ்ச்சிகரமானவர்.
மகிழ்ச்சிக்குள் வருத்தம் இருக்க முடியுமா?  முடியாது."

"அப்படியானால் நாம் பாவம் செய்யும்போது கடவுளுக்கு என்ன உணர்வு ஏற்படும்?"

"'நம்மைக் கடவுள் படைக்கும் போது நாம் அவருக்காக, அவரோடு வாழ வேண்டும் என்று தான் படைத்தார்.

அவர் எப்போதும் நம்மோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவருடைய நிலையில் மாற்றம் இல்லை, ஏனெனில் அவர் மாற முடியாதவர்.

அவர் நம்மை விட்டு பிரியவில்லை.

பாவம் செய்யும்போது அவரை விட்டுப் பிரிபவர்கள் நாம்தான்.

பாவத்தினால் நாம் அவரை விட்டு பிரிவதைக் கண்டு 

நம்மைக் காப்பாற்ற வேண்டுமே என்ற இரக்க உணர்வு தான் அவருக்கு ஏற்படும்.

இந்த இரக்க உணர்வும் நித்தியமானது,

அவரது அளவற்ற ஞானத்தின் காரணமாக 

நாம் பாவம் செய்வோம் என்று நித்திய காலமாக அவருக்கு தெரியுமாகையால் 

அவரது இரக்க உணர்வும் நித்தியமானது.

இரக்க உணர்வின் காரணமாகத்தான் அவர் நமக்காக மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு மரித்தார்.

கோபம் தண்டிக்கவே ஆசைப்படும்.
காப்பாற்ற ஆசைப்படாது.

இரக்கம் காப்பாற்ற ஆசைப்படும்.

கடவுள் நம்மைக் காப்பாற்றவே  விரும்புகிறார்."

"அப்படியானால் நரக தண்டனை?"

'''நாம் எப்போதும் நமது கண்ணோக்கிலிருந்தே  புரிந்து கொள்கிறோம்.

இயேசுவின் வார்த்தைகளை அவரது கண்ணோக்கிலிருந்தே புரிந்து கொள்ள வேண்டும்.

மோட்சம் கடவுளோடு இணைந்து வாழும் நிலை.

நரகம் கடவுளைப் பிரிந்து வாழும் நிலை.

மனிதன் பாவம் செய்யும்போது கடவுள் அவனை விட்டு பிரிவதில்லை.

பிரிந்து செல்வது மனிதன்தான்.

சாவான பாவம் செய்யும் மனிதன் அவனாகவே கடவுளை வேண்டாம் என்று தீர்மானித்துப் பிரிந்து விடுகிறான்.

மரணத்துக்குப் பின்னும்  இந்நிலை நீடித்தால் அதுவே நரகம்.

நரக நிலையைத் தேர்ந்தெடுப்பது மனிதன் தான்.

கடவுள் மனிதனுக்குப் பரிபூரண சுதந்திரத்தைக் கொடுத்துள்ளார்.

கடவுளோடு வாழ வேண்டுமா அல்லது அவரைப் பிரிந்து வாழ வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டியது அவன்தான்."

''நான் நேசிக்கிற யாருக்காவது ஏதாவது சங்கடம் ஏற்பட்டால் நாம் அதற்காக வருந்துகிறோம்.

ஆனால் கடவுளால் வருந்த முடியாது என்கிறீர்கள்.

ஆனால் இயேசு?"

"'இறைமகன் மனு மகனாக பிறந்த போது, பாவம் தவிர, மனிதனுக்குள்ள அத்தனை  பலகீனங்களையும் ஏற்றுக் கொண்டார்.

ஆகவே கடவுளாகிய இயேசு நம்மைப் போலவே அழுதார்.

நம்மைப் போலவே சிரித்தார்.

நம்மைப் போலவே கஷ்டங்களை அனுபவித்தார்.

நாம் செய்த பாவங்களுக்காக அவர் வருத்தப்பட்டு, அவற்றுக்காகப் பரிகாரமும் செய்தார்.

நமது பாவங்களை அவரே சுமந்து கொண்டு கல்வாரி மலைக்குச் சென்றார்.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத்தான் அவர் சிலுவையில் மரித்தார்.

பாவம் மட்டும் அவரால் செய்ய முடியாது."

"அப்படியானால் கடவுளால் வருத்தப்பட முடியுமே!"

"'வருத்தப்பட முடியாத கடவுள் நமக்காக வருத்தப்படவே மனிதனாகப் பிறந்தார்.

கஷ்டப்பட முடியாத கடவுள் நமக்காகக் கஷ்டப்படவே மனிதனாகப் பிறந்தார்.

மரணம் அடைய முடியாத கடவுள் நமக்காக மரணம் அடையவே மனிதனாகப் பிறந்தார்."

''நமக்காகக் கடவுள் இவ்வளவு செய்தும் ஏன் நம்மில் அனேகர் அவரை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்?"

"'அறியாமை தான் காரணம். 

உனது வீட்டுக்கு அருகே உள்ள நிலத்தின் அடியில்   கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள புதையல் இருக்கிறது என்று தெரிந்தால் என்ன செய்வாய்?"

"உடனே எனது வீடு உட்பட அனைத்துச் சொத்துக்களையும் விற்றுவிட்டு அதை வாங்கி விடுவேன்.

கோடிக்கணக்கில் கிடைக்கும் போது அதற்காக  லட்சக்கணக்கில் இழப்பது நல்லது."

"'சர்வ வல்லமையுள்ள கடவுள் நமக்குக் கிடைப்பதாக இருந்தால்,

மதிப்பில்லாத உலகப் பொருள்களை இழப்பது எவ்வளவோ லாபகரமானது.

இவ்வுலகப் பொருட்கள் அழியக்கூடியவை, நிரந்தரமானவை அல்ல.

அழியாத,   நித்தியரான கடவுளை அடைவதற்கு இவ்வுலக பொருள்களை இழப்பது எவ்வளவோ நல்லது.

முடிவில்லாத பேரின்பத்தை அடைவதற்கு, சிறிது நேரமே நீடிக்க கூடிய சிற்றின்பத்தை இழப்பது எவ்வளவோ நல்லது.

அளவில்லாத கடவுளை உரிமையாக்கிக் கொள்ள அளவுள்ள உலகத்தை இழப்பது எவ்வளவோ நல்லது.

நமக்காகத் தன்னையே தியாகம் செய்த இயேசுவை அடைவதற்கு நம்மைப் பற்றி கவலைப்படாத இவ்வுலகைத் தியாகம் செய்வது  எவ்வளவோ நல்லது."

''ஒரு சிறு சந்தேகம். கடவுள் துவக்கமே இல்லாத காலத்தில் இருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் சம்மனசுக்களையும்  மனிதர்களையும் படைக்குமுன் தனியாகத் தானே வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்.

அவர் யாருக்காக வாழ்ந்தார்?"

"'பரிசுத்த தம திரித்துவக் கடவுள் தன்னைத் தானே அன்பு செய்து வாழ்ந்தார்.

சம்மனசுக்களையும் மனிதர்களையும் படைக்க வேண்டும் என்று அவர் நித்திய காலமாகவே தீர்மானித்து விட்டதால்

 அவரது மனதில் தீர்மான நிலையிலிருந்த எல்லா சம்மனசுக்களையும், எல்லா மனிதர்களையும் அவர் நித்திய காலமாக நேசித்தார்.

நாம் பிறந்தது பிந்திய காலகட்டத்தில் என்றாலும் அவரது மனதில் நாம் நித்திய காலமாக வாழ்கிறோம்.

Though we were born as real beings   later, we were in God's mind as an idea from all eternity."

"நித்திய காலமாக நம்மை நினைத்து அன்பு செய்து கொண்டிருக்கும் கடவுளை மறந்து வாழ்வது அவருக்கு எதிராக நாம் செய்யும் பெரிய பாவம்.

ஒவ்வொரு வினாடியும் அவரது பிரசன்னத்தில் வாழ்வோம்.

மரணத்துக்குப் பின் நித்திய காலமாக அவரோடு வாழ்வோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment