இறையியல் ரீதியாக உலகைப் படைத்த கடவுளாகிய இயேசு
சமூக ரீதியாக யூத குலத்தைச் சேர்ந்தவர்.
அரசியல் ரீதியாக யூதர்கள் சுதந்திரக் குடிகள் அல்ல,
ரோமையர்களின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்.
கடவுளின் கண்ணோக்கில் மனிதர்கள் அவரைத் தவிர வேறு யாருக்கும் கீழ்பட்டவர்கள் அல்ல.
உலகைச் சார்ந்த மனிதர்கள் ஆயிரக்கணக்கான அரசியல் தலைவர்களுக்கு உட்பட்டிருக்கலாம்.
ஆனால் கடவுளின் முன் அனைவரும் சமம், பரிபூரண சுதந்திரக் குடிகள்.
இறையியல் ரீதியாக மனிதர்கள் தங்கள் சுதந்திரத்தைக் கொண்டு இறைவனின் ஆட்சியை ஏற்றுக் கொள்ளலாம்
அல்லது
சாத்தானின் ஆட்சியை ஏற்றுக்கொள்ளலாம்.
பாவத்தின் மூலம் சாத்தானின் ஆட்சியை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஆன்மீக விடுதலை அளிப்பதற்காகத்தான் இயேசு மனிதனாகப் பிறந்தார்.
அனேக யூதர்கள் எதிர்பார்த்தது போல, மெசியா யூதர்களுக்கு அரசியல் விடுதலை பெற்றுக்
கொடுப்பதற்காக உலகுக்கு வரவில்லை.
இயேசுவின் சீடர்களில் சிலர் கூட அவர் சுதந்திர யூத சாம்ராஜ்யத்தை நிறுவுவார் என எதிர்பார்த்தார்கள்.
அருளப்பரும், யாகப்பரும் அந்த சாம்ராஜ்யத்தில் தங்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்க வேண்டும் என்று இயேசுவிடம் விண்ணப்பித்திருந்தார்கள்.
ஆனால் இயேசுவின் அரசு இவ்வுலகத்தை சார்ந்தது அல்ல.
அவரைப் பொறுத்தமட்டில் யூதர்கள் அவரால் படைக்கப்பட்ட உரிமைக் குடிமக்கள்.
ஆகவே, யாருக்கும் அரசியல் ரீதியான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
"இப்படியானால் மக்களுக்குக் கடமையில்லை." (மத்.17:20)
ஆனாலும் தான் வரி கட்ட முடியாது என்று சொன்னால்,
தான் உலகுக்கு வந்த நோக்கத்துக்குச் சம்பந்தம் இல்லாத குழப்பம் மக்களிடையே ஏற்படும்.
முழுக்க முழுக்க ஆன்மீக நோக்கத்தோடு உலகுக்கு வந்த இயேசு உலகியல் குழப்பங்களுக்கு காரணமாக இருக்க விரும்பவில்லை.
தான் வரி கட்ட மறுத்தால் வரி கட்டுபவர்களுக்கு அது இடரலாக இருக்கும்.
மற்றவர்களுக்கு இடரலாக இருக்க விரும்பாத இயேசு வரி வசூலிப்பவர்கள் கேட்ட வரியை கட்டி விட்டார்.
இயேசு நடந்து கொண்ட விதத்திலிருந்து நாம் சில முக்கியமான ஆன்மீகப் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் உலகின் அரசியல், சமூகக் கட்டமைப்புக்குள் பிறந்திருந்தாலும்,
முதலில் நாம் கடவுளின் பிள்ளைகள்.
அதற்குப் பிறகுதான் உலக அரசியலின் குடிமக்கள்.
கடவுளை நேசிப்பதும் அவரது கட்டளைகளுக்குப் கீழ்ப்படிந்து நடப்பது மட்டுமே நமது முதல் கடமை.
இக்கடமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் இவ்வுலகைச் சார்ந்த அரசியல் சமூக கடமைகளுக்கு நாம் கட்டுப்பட்டிருக்கிறோம்.
நமது ஆன்மீகக் கடமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உலகக் கடமைகளுக்கு நாம் கட்டுப்பட்டவர்கள் அல்ல.
உதாரணத்திற்கு உலக அரசு நாம் ஞாயிற்றுக்கிழமை இறைவனுக்காக ஓய்வு எடுக்கக்கூடாது என்று கட்டளையிட முடியாது.
நமது ஆன்மீகக் கடமைகளை மாற்ற இந்த உலகைச் சார்ந்த அரசு சட்டங்கள் இயற்ற முடியாது.
நமது ஆன்மீகத்தைப் பாதிக்காத உலக அரசின் சட்டங்களுக்கு கீழ்படிய கடமைப் பட்டிருக்கிறோம்.
முழுக்க முழுக்க இவ்வுலகை சார்ந்த நமது மத்திய அரசுக்கு நமது விசுவாச சத்தியங்களையும், வழிபாட்டு முறைகளையும் பற்றி பேச உரிமை இல்லை.
பேசினால் அதைக் கேட்க நமக்கு கடமை இல்லை.
இயேசு இறையியலில் கடவுள்.
சமூகயியலில் யூதர்.
அரசியலில் ரோமைச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்.
கடவுள் என்ற முறையில் நம்மைப் பாவத்திலிருந்து மீட்டார்.
யூதர் என்ற முறையில் யூத சமயத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தார்.
அரசியலில் ரோமைச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர் என்ற முறையில்,
ரோமை அரசு அவருக்கு மரண தண்டனை விதித்த போது அதை எதிர்த்துப் பேசாமல் ஏற்றுக் கொண்டார்.
நமது உலக அரசு நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்காக நம்மை என்ன பாடுப்படுத்தினாலும் இயேசுவுக்காகப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
நமக்கு மரண தண்டனை கொடுக்குமானால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நமக்கு மரண தண்டனை கொடுப்பவர்கள் விண்ணகத்திற்கான வாசலை நமக்காகத்
திறந்து விடுகிறார்கள்.
ஆன்மீகம் சாராத, அதற்கு எதிராக இல்லாத உலகச் சட்டங்களுக்கு நாம் கீழ்படிய வேண்டும்.
ஆன்மீகத்திற்கு எதிரான உலகச் சட்டங்களை நாம் எதிர்க்க வேண்டும்.
மதம் மாறக்கூடாது என்பது ஆன்மீகத்துக்கு எதிராக சட்டம்.
அது கடவுளால் படைக்கப்பட்ட எந்த மனிதனையும் கட்டுப்படுத்தாது.
எந்த நாட்டில் பிறந்தாலும் நாம் இறைவனின் பிள்ளைகள்.
எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நாம் இறைவனின் பிள்ளைகள்.
எந்த நாட்டில் மரித்தாலும் நாம் இறைவனின் பிள்ளைகள்.
இதை மாற்ற எந்த உலக அரசுக்கும் உரிமை இல்லை.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment