Monday, August 14, 2023

"பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டதே."(லூக்.1:42)

"பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டதே."
(லூக்.1:42)

எலிசபெத்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று,

 "பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டதே." என்றாள். 

ஆக மரியாளை பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று வாழ்த்தியது பரிசுத்த ஆவியானவர் தான்.

பரிசுத்த ஆவியானவர் உள் தூண்டுதல் (Inspiration) மூலம் சொன்னதை எலிசபெத்து சப்தமாகக் கூறினாள்.

அன்னை மரியாள் ஏன் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள்?

ஏனெனில் அவள் இறைமகன் மனுவுரு எடுத்த போது அவரைக் கருவுற்று, பெற்றெடுத்து, வளர்த்தாள்.

இயேசுவை 10 மாதம் வயிற்றில் சுமந்ததால் அவள் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள்.

இதற்கு மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.

மாதா தன் வயிற்றில் 10 மாதம் சுமந்த அதே குழந்தையை நாம் எப்போதாவது நம் வயிற்றில் சுமந்திருக்கிறோமா?

எப்போதாவது?

மாதா சுமந்தது போல் இல்லாவிட்டாலும், வேறு எந்த வகையிலாவது சுமந்திருக்கிறோமா?.

நாம் திவ்ய நற்கருணை வாங்கும்போது மாதா சுமந்த அதே இயேசுவைத் தான் நமது நாவில் வாங்கி வயிற்றுக்குள் அனுப்புகிறோம்.

மாதா இயேசுவைத் தன் வயிற்றில் சுமக்க வேண்டியிருந்த ஒரே காரணத்துக்காகத்தான் சென்மப் பாவமின்றி உற்பவித்தாள்.

பரிசுத்தரைத் தாங்கும் தாய் பரிசுத்தமானவளாக இருக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தம்.

அதே பரிசுத்தரை வயிற்றில் தாங்க வேண்டிய நாம் எப்படி இருக்க வேண்டும்?.

நாமும் பரிசுத்தர்களாக இருக்க வேண்டும்.

அன்னை மரியாள் சென்மப் பாவ மாசின்றி உற்பவித்தது மட்டுமல்ல,

வாழ்நாள் முழுவதும் பாவமாசின்றி, அருள் நிறைந்தவளாய்,

ஆண்டவருடைய முழு அடிமையாக வாழ்ந்தாள்.

நாம் சென்மப் பாவத்தோடு உற்பவித்தோம்.

நாம் ஞானஸ்நானம் பெற்றபோது நமது சென்மப் பாவம் மன்னிக்கப்பட்டு விட்டது.

ஆனால் நமது வாழ்நாளில் பாவங்கள் செய்து கொண்டேயிருக்கிறோமே, நாம் எப்படி பரிசுத்தரை நமது நாவில் வாங்க முடியும்?

பாவிகளைத் தேடியே உலகத்துக்கு வந்த நமது ஆண்டவர்,

பாவிகளாகிய நமக்குள் வரத் தீர்மானித்து விட்டார்.

நாம் பயன்படுத்தும் பொருள்கள் அழுக்கடைந்து விட்டால் அவற்றைச் சுத்தப்படுத்திப் பயன்படுத்துவதில்லை?

அதேபோல பரிசுத்தராகிய இயேசு பாவிகளாகிய நமக்குள் வர ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்.

அதாவது பாவ சங்கீர்த்தனம் என்னும் திருவருட்சாதனத்தின் மூலம் நமது பாவங்களை மன்னித்து,

பரிசுத்தர்களாக மாற்றி நமக்குள் வர திட்டமிட்டிருக்கிறார்.

நமது ஆன்மா சாவான பாவ நிலையிலிருந்தால், பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெறாமல் திவ்ய நற்கருணை வாங்கக் கூடாது.

பாவத்தோடு நற்கருணை வாங்கினால் புதிதாக ஒரு பாவத்தைக் கட்டிக் கொள்கிறோம்.

அப்படி வாங்குவது குளிக்கப் போன இடத்தில் சேற்றை அள்ளிப் பூசிக்கொண்டு வெளியே வருவது போல் ஆகும்.

ஆகவே சாவான பாவம் நிலையில் உள்ளவர்கள் நற்கருணை வாங்குவதற்கு முன் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து,

 பாவ மன்னிப்புப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இது திருச்சபையின் கண்டிப்பான கட்டளை.

அதைக் கடைபிடிக்காமல் ஏதோ தின்பண்டத்தைக் கையில் வாங்குவது போல வாங்கி வாயில் போட்டுக் கொண்டு வீட்டுக்குப் போகின்றவர்கள் நரகத்தை நோக்கி நடக்கின்றார்கள்.

யார் பாவ நிலையில் உள்ளார்கள் என்பது நற்கருணை கொடுக்கும் குருவானவருக்குத் தெரியாது.

சாமியாரை ஏமாற்றி விட்டதாக நினைத்துக் கொண்டு பாவ நிலையில் நற்கருணை வாங்குபவர்கள் இயேசுவை ஏமாற்ற முடியாது.

நாம் கண்ணை மூடிக்கொண்டால் இருட்டு வந்து விடாது.

மாதா பக்தர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது நாம் அவளது மகனை நற்கருணையாகப் பெறும்போது,

பாவ மாசு இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

பரிசுத்தமான நிலையில் நாம் இறைமகனை ஏற்றுக்கொள்ளும்போது நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

பாவமின்றி பரிசுத்தர்களாய் வாழ்வோம்.

பாவம் செய்ய நேர்ந்தால் பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெற்றுக் கொள்வோம்.

பரிசுத்தமான நிலையில் இறை மகனை உணவாக ஏற்றுக் கொள்வோம்.

இறை மகனோடு நாம் பரிசுத்தர்களாய் வாழ்ந்தால் நாமும் ஆசீர்வதிக்கப் பட்டவர்களே.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment