Wednesday, August 2, 2023

"வானதூதர் சென்று தீயோரை நீதிமான்களிடையே இருந்து பிரித்து, தீச்சூளையில் தள்ளுவர். அங்கே புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும்" என்றார்."(மத்.13:49,50)

"வானதூதர் சென்று தீயோரை நீதிமான்களிடையே இருந்து பிரித்து,
 தீச்சூளையில் தள்ளுவர். அங்கே புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும்" என்றார்."
(மத்.13:49,50)

"தாத்தா, நேற்று நீங்கள்

 "நரக நிலையைத் தேர்ந்தெடுப்பது மனிதன் தான்."

என்று கூறினீர்கள்.

ஆனால் "வானதூதர் சென்று தீயோரை நீதிமான்களிடையே இருந்து பிரித்து,
 தீச்சூளையில் தள்ளுவர். அங்கே புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும்" என்று இயேசு கூறுவதாக  மத்தேயு கூறுகிறார்.

உங்கள் விளக்கம் என்ன?"

"'இயேசுவின் வார்த்தைகளை அவரது கண்ணோக்கிலிருந்தே புரிந்து கொள்ள வேண்டும்."
என்றும் நான் சொன்னேன்.

"நான் சொல்வதை ஒருவன் கேட்டபின் அதன்படி நடவாவிடில், அவனுக்குத் தீர்ப்பிடுவது நானல்லேன்: ஏனெனில், நான் உலகிற்குத் தீர்ப்பிட வரவில்லை, உலகை மீட்கவே வந்தேன்."
(அரு.12:47)

இவை இயேசுவின் வார்த்தைகள்.

இயேசுவின் வார்த்தைகளை அவரது கண்ணோக்கிலிருந்தே புரிந்து கொள்ள வேண்டும்.

நீ புரிந்து கொள்வதற்கு உதவியாக ஒரு ஒப்புமை (Analogy) கூறுகிறேன்.

நீ பள்ளிக்கூடத்தில் படித்தவன் தானே.''

"ஆமா."

"'உன்னுடைய Progress Report ல் 
யார் கையெழுத்துப் போடுவார்?"

"என்னுடைய வகுப்பு ஆசிரியர்."

"'சிலருடைய மதிப்பெண்களை சிவப்பு மையால் எழுதுவார்.

சிலருடைய மதிப்பெண்களை நீல மையால் எழுதுவார்.

தேர்வில் வெற்றி பெற்றவர்களுடைய மதிப்பெண்களை நீல மையால் எழுதுவார்.

தேர்வில் தோல்வி அடைந்தவர்களுடைய மதிப்பெண்களை சிவப்பு மையால் எழுதுவார்.

ஒரு மாணவன் தோல்வி அடைந்தால் அவனது மதிப்பெண்களை சிவப்பு மையால் எழுதுவாரா,

அல்லது,

 அவர் சிவப்பு மையால் எழுதியதால் அவன் தோல்வி அடைந்தானா?"

"மாணவன் தோல்வி அடைந்தால்தான் அவனது மதிப்பெண்களைச் சிவப்பு மையால் எழுதுவார்."

"'தோல்விக்கு காரணம் ஆசிரியரா? மாணவனா?"

"எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார்.

நன்றாகப் படியாத மாணவன் தோல்வி அடைகிறான்.

அவன் தோல்வி அடைந்ததை Progress Report மூலமாக பெற்றோருக்குத் தெரிவிப்பவர் மட்டுமே ஆசிரியர்."

"'ஆகவே ஆசிரியர் தான் மாணவனைத் தோல்வியடையச் செய்தார் என்று கூறலாமா?"

''மடையன் தான் அப்படிக் கூறுவான்."

"'இப்போது ஆன்மீகத்துக்கு வருவோம்.

தான் படைத்தவர்கள் எல்லோரும் நல்லவர்களாக நடந்து

 மோட்சத்திற்கு வந்து 

தன்னோடு நித்திய காலமாக பேரின்பத்தில் வாழ வேண்டும் என்பதுதான் இறைவனின் நோக்கம்.

ஆனால் நல்லவர்களாக வாழாதவர்கள் இறந்தபின் நரகத்துக்குச் செல்கிறார்கள்.

உலக முடிவில் இறந்தவர்கள் அனைவரும் உயிர்த்தெழுந்து இறுதித் தீர்ப்புக்கு வரும்போது 

வானதூதர் சென்று தீயோரை நீதிமான்களிடையே இருந்து பிரித்து,

 தீச்சூளையில் தள்ளுவார்களா?

அல்லது 

தீச்சூளையில் விழுபவர்களை வான தூதர்கள் மேற்பார்வை இடுவார்களா?"

"இப்போது புரிகிறது.

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் செய்கிற வேலையைத்தான் நமது ஆன்மீகத்தில் வான தூதர்களும் செய்கிறார்கள்.

 மனிதர்கள் உலகில் வாழும் போது வான தூதர்கள் அவர்களுடைய ஆன்மீக வாழ்வில் உதவிகரமாக இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உதவிகரமாக இருக்க இறைவன் ஒரு காவல் சம்மனசை நியமித்திருக்கிறார்.

காவல் சம்மனசின் தூண்டுதல்களின்படி நடக்காமல் இஷ்டப்படி நடப்பவர்கள் தான் நரக நிலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

எப்படி மாணவர்களின் தோல்விக்கு ஆசிரியர்கள் காரணமில்லையோ,

அப்படியே கெட்டவர்கள் தீச்சூளையில் விழுவதற்கு வான தூதர்கள் அவர்களைத் தள்ளுவது  காரணமில்லை. 

ஏற்கனவே நரகத்தில் இருந்த ஆன்மாக்கள் தான் சரீரத்தோடு உயிர்த்தெழுந்து நரக நிலைக்குத் திரும்புவார்கள்.

அதுவரை ஆன்மா மட்டும் அனுபவித்த வேதனையை சரீரமும் சேர்ந்து அனுபவிக்கும்.


இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள வேண்டிய விதமாகப் புரிந்து கொள்ள வேண்டும்."

"'  நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவனுக்குத் தீர்ப்பிடும் ஒன்று உண்டு: நான் கூறிய வார்த்தையே அவனுக்கு இறுதி நாளில் தீர்ப்பிடும்."
(அரு. 12:48)

இயேசுவின் போதனைப்படி வாழ்பவர்கள் அவரோடு வாழ விண்ணகம் செல்வார்கள்.

இயேசுவின் போதனைக்கு எதிராக வாழ்பவர்கள் நரக நிலைக்குச் செல்வார்கள்.

ஆசிரியர் வகுப்பில் கூறுகிறார், 

"நான் பாடம் நடத்தும்போது நன்கு கவனித்து நன்றாகத் தேர்வு எழுதினால், நீங்கள் தேர்வில் வெற்றி பெறுவது உறுதி.

நான் பாடம் நடத்தும் போது கவனிக்காமல் இருந்து விட்டு மோசமாகத் தேர்வு எழுதினால் தோல்வி அடைவது உறுதி.

மாணவனது தோல்விக்குக் காரணம் அவன் ஆசிரியரது வார்த்தைகளின் படி நடக்காதது தான், ஆசிரியர் அல்ல.

நற்செய்தியை வாசிக்கும் போது இயேசுவின் வார்த்தைகளை அவரது பார்வையில் பார்க்க வேண்டும்.

நமது சொந்தப் பார்வையில் பார்த்துவிட்டு இஷ்டம் போல் பொருள் கூறக்கூடாது.

"தம் மகனில் விசுவாசங் கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு 

அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.


 கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, 

அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."
(அரு.3:16,17 )

இயேசுவின் சொற்படி நடப்போம்.
அவரோடு விண்ணக வாழ்வில் பங்கு பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment