Friday, August 25, 2023

"அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)

"அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)

மறைநூல் அறிஞரையும்,
பரிசேயரையும் பற்றி இயேசு கூறும் வார்த்தைகள்,

"அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை."

நாம் இந்த வார்த்தைகளைப் பாரபட்சமின்றித் தியானித்தால்

 அவை பல சந்தர்ப்பங்களில் நமக்கும் பொருந்தும் போல் தோன்றுகிறது. 

நாம் மறைநூல் அறிஞரையும்,
பரிசேயரையும் போல் வாழ்ந்து விடக்கூடாது என்பதுதான் இயேசுவின் விருப்பம்.

ஆனால் நாமும் சில சமயங்களில் அப்படித்தான் வாழ்கிறோம் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்.

நாம் ஒவ்வொரு நாளும் பலமுறை கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்கிறோம்.

அது செபம் மட்டுமல்ல. நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக அறிவுரைகளை இயேசு அதன் மூலம் நமக்குக் கூறுகிறார்.

இயேசுவின் தந்தை மனுக் குலத்தின் தந்தை.

அந்த ஜெபத்தைச் சொல்லும் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல கிறிஸ்தவ சமயத்தைச் சேராத மற்றவர்களுக்கும் அவர்தான் தந்தை.

"விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே" என்று நாம் சொல்லும் போது, 

மனுக்குலம் முழுவதையும் ஒரே குடும்பம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

ஜெபத்தை வாயால் சொல்லும் போது இந்த உண்மையை வாயால் ஏற்றுக் கொள்கிறோம்.

 ஆனால் நம் உள்ளத்தில் உண்மையாகவே இயேசு எதிர்பார்க்கும் குடும்ப உணர்வு இருக்கிறதா என்பதை சில நிமிடங்கள் சிந்தித்துப் பார்த்தால் 

அது இல்லை என்பது புரியும்.

"நான், 
எனது குடும்பம், 
எனது சகோதர சகோதரிகள், எனது பொருள்கள், 
எனது வேலை, 
என்னுடைய சம்பளம், 
என்னுடைய செலவு"

என்று அனைத்தையும் நம் ஒருவருடைய கண்ணோக்கிலிருந்து தான் பார்க்கிறோம்.

ஒவ்வொரு மாத பணியின் முடிவிலும் நாம் வாங்கும் சம்பளத்தை

 "எங்கள் சம்பளம்"

 என்று நாம் மனதார ஏற்றுக்கொண்டால் 

அதை மனுக் குலத்தில் யார் யாருக்குத் தேவையோ அவர்களுக்கெல்லாம் கொடுத்து உதவுவோம்.

'எங்கள்' என்ற வார்த்தையில் மனிதர்கள் அனைவரும் அடங்குவர்.

கடவுளை 'தந்தையே' என்று அழைக்கும் போது மனுக்குலம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற உண்மையை உளமார ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏற்றுக்கொள்கிறோமா?

தந்தை இருக்கும் இடம் தான் குடும்பம் இருக்க வேண்டிய இடம்.

அப்படியானால் விண்ணுலகம் தான் நமது வீடு.

இந்த உலகத்தில் நாம் வாழவில்லை,

 விண்ணுலகில் வாழ்வதற்காகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்

என்ற உண்மையை உணர வேண்டும்.

சொல்வதை உணர்கிறோமா?

கர்த்தர் கற்பித்த செபத்தை இதை உணர்ந்து சொன்னால் செபம் சொல்லும்போது நாம் விண்ணுலகில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

ஏற்படுகின்றதா?

"உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக, உம்முடைய இராட்சியம் வருக" என்று கூறும் போது,

இறையரசின் வருகைக்காக நாம் என்னவெல்லாம் செய்கிறோம் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்திருக்கிறோமா?

அல்லது கூட்டத்தில் சிந்திக்காமலேயே 'ஜே ஜே' போடுவது போல,

சிந்திக்காமலேயே 'வருக' என்று கூறுகிறோமா?

"உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக."

"விண்ணுலக வாசிகள் எப்படி உமது விருப்பத்தை நீர் விரும்புகிறபடி நிறைவேற்றுகிறார்களோ 

அதே போல பூமியில் வாழும் அனைவரும் உமது விருப்பத்தை நிறைவேற்றுவார்களாக"

என்று சொல்கிறோம்.

வழக்கமாக நாம் ஏதாவது ஒரு விண்ணப்ப செபத்தைச் சொல்லிவிட்டு தான் 

அந்த விண்ணப்பம் நிறைவேறுவதற்காக கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்கிறோம்.

அதாவது நமது விருப்பத்தை இறைவனிடம் தெரிவித்து விட்டு

 அந்த விருப்பத்தை அவர் நம்மில் நிறைவேற்ற அவர் கற்பித்த செபத்தையே சொல்கிறோம்.

அதாவது வாயால் 'உமது சித்தம் நிறைவேறுக' என்று கூறிவிட்டு

 மனதில் 'ஆண்டவரே, நான் கேட்டதைத் தாரும்' என்று வேண்டுகிறோம்.

அதாவது சொல்வது ஒன்றை, விரும்புவது மற்றொன்றை.

உண்மையில் இறைவன் சித்தம் தான் நிறைவேற வேண்டும் என்று விரும்பினால்,

நமக்கு வேண்டியதை கேட்காமலேயே,

"ஆண்டவரே எனக்கு நீர் எதைத் தர வேண்டும் என்று விரும்புகிறீரோ அதைத் தாரும்,

நான் உமது விருப்பத்தை நிறைவேற்ற அருள் தாரும்."

என்று மனதில் நினைத்துக் கொண்டு 

அவர் கற்பித்த ஜெபத்தின் வார்த்தைகளைக் கூறுவோம்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment