இக்குழந்தையைப்போலத் தன்னைத் தாழ்த்திக்கொள்ளுகிறவன் எவனோ, அவனே விண்ணரசில் பெரியவன்.(மத்.18:4)
."தாத்தா, குழந்தைக்கு தான் வாழும் உலகைப் பற்றி எதுவுமே தெரியாது. அதனால் தானாகவே எதுவும் செய்ய முடியாது. குழந்தையைப் போல தன்னை தாழ்த்திக் கொள்கிறவன் அப்படித்தானே இருப்பான்.
எதுவுமே தெரியாத, ஒன்றுமே செய்ய முடியாத ஒருவன்தான் விண்ணரசில் பெரியவன் என்று இயேசு சொல்வது எனக்குப் புரியவில்லை.
உங்களுக்குப் புரிந்தால் கொஞ்சம் விளக்குங்களேன்."
"பேரப்புள்ள, இதை ஏன் என்னிடம் கேட்கிறாய்?"
"எனக்குப் புரியவில்லை, நீங்கள் பெரியவர் ஆகவே உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைத்துக் கேட்டேன்."
"'அதாவது உனக்கு அதன் விளக்கம் தெரிந்திருந்தால் என்னிடம் கேட்டிருக்க மாட்டாய். அப்படித்தானே."
''அப்படியே தான்.''
'"உனது கேள்விக்குரிய பதிலில் முக்கால்வாசியை நீயே கூறிவிட்டாய். கால் வாசி தான் பாக்கி அதை நான் கூறுகிறேன்."
"நான் எதுவுமே கூறவில்லையே."
'''கேள்வி கேட்டவன் நீதானே.
கடவுள் சர்வ வல்லவர். அளவற்ற ஞானம் உள்ளவர்.
சூரியனின் ஒளியோடு மின்மினிப் பூச்சியின் ஒளியை ஒப்பிட்டால் எப்படி இருக்குமோ,
அதைவிட கோடிக்கணக்கான மடங்கு குறைவாக இருக்கும்
இறைவனின் வல்லமையோடும் ஞானத்தோடும் நமது வல்லமையையும், ஞானத்தையும் ஒப்பிட்டால்.
நமது வல்லமையும் ஞானமும் நம்முடையன அல்ல. கடவுள் தனது சாயலில் நம்மைப் படைக்கும் போது நம்மோடு பகிர்ந்து கொண்டவை.
ஒரு குழந்தை தன்னால் எல்லாம் முடியும் என்று நினைத்தால் அது தன் தாயின் உதவியைத் தேடாது.
தாயின் உதவியின்றி அதனால் உலகில் வாழ முடியாது.
எப்படி ஒன்றுமே இல்லாத ஏழை வசதிகளோடு வாழ்பவனின் உதவி இன்றி உண்ணவோ உடுக்கவோ முடியாதோ,
அதேபோல சுயமாக ஒன்றுமே செய்ய இயலாத, ஒன்றுமே தெரியாத நம்மால் இறைவன் உதவி இன்றி நமது ஆன்மீக வாழ்வில் ஒன்றுமே செய்ய முடியாது.
நமது ஆன்மாவைப் படைத்த இறைவனின் உதவியின்றி நம்மால் ஆன்மீக வாழ்வு வாழ முடியாது.
எதுவுமே இல்லாத ஏழை வசதி வாய்ந்த ஒருவனின் உதவியைப் பெற வேண்டுமென்றால் முதலில் தான் எதுவுமே இல்லாதவன் என்று தனக்கு உதவுபவனிடம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எனக்கு உண்ண உணவு இருக்கிறது, உடுக்க உடை இருக்கிறது, வாழ வீடு இருக்கிறது நீங்களும் உதவுங்கள் என்று கேட்டால் எப்படி உதவி கிடைக்கும்?
எப்படி ஒரு குழந்தை தனது இயலாமையை ஏற்றுக் கொண்டு தனது தாயிடம் தனக்கு வேண்டியதை கேட்டுப் பெறுகிறதோ,
அதேபோல நம்மைப் படைத்த இறைவனிடம் முதலில் நமது இயலாமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நமது ஒவ்வொரு அசைவுக்கும் நம்மைப் படைத்த இறைவனையே சார்ந்திருக்கிறோம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
"அவரன்றி அணுவும் அசையாது" என்பது தமிழ் மொழி.
நாம் இறைவனிடம் அடிக்கடி கூற வேண்டிய வார்த்தைகள்,
'"அளவற்ற வல்லமையும், ஞானமும் உள்ள இறைவா,
உமது அளவற்ற அன்பின் காரணமாக என்னை ஒன்றும் இல்லாமையிலிருந்து படைத்தீர்.
நீர் சுயமாக அளவற்ற வல்லமை உள்ளவர். உம்மால் எல்லாம் கூடும்.
நான் சுயமாக ஒன்றுமில்லாதவன்.
என்னால் சுயமாக ஒன்றுமே செய்ய இயலாது.
அன்பின் உருவே, உம்மை நேசிக்கவும், உமக்கு சேவை செய்யவும்,
உம்மால் படைக்கப்பட்ட எனது அயலானை நேசிக்கவும், உமக்காக அவனுக்கு சேவை செய்யவும்,
இவ்வுலக வாழ்வுக்குப் பின் உம்மோடு நித்திய காலம் பேரின்ப வாழ்வு வாழவும் என்னை படைத்தீர்.
உமது சித்தப்படியே வாழ விரும்புகிறேன்.
ஆனால் சுயமாக எதுவுமே செய்ய முடியாத நான் உமது சித்தப்படி வாழ உமது உதவியையே நம்பியிருக்கிறேன்.
இறைவா உமது சித்தப்படியே வாழ ஒவ்வொரு வினாடியும் உமது அருளால் என்னை வழி நடத்தும்.
ஒரு குழந்தை தனது வாழ்வுக்குத் தனது தாயையே முழுக்க முழுக்க சார்ந்திருப்பது போல,
விண்ணக தந்தையே, எனது ஆன்மீக வாழ்வுக்கு முழுக்க முழுக்க உம்மையே சார்ந்திருக்கிறேன்.
இவ்வுலகிலும் மறு உலகிலும் உம்மோடு இணைந்து (To live in union with You)வாழ எனக்கு அருள் புரியும் ஆண்டவரே."
பேரப்புள்ள இதுவே நமது அன்றாட ஜெபமாக இருக்க வேண்டும்.
நமக்கு வேண்டிய உதவியை அவரால் மட்டுமே தரமுடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும்.
தாழ்ச்சியோடு நமது இயலாமையை ஏற்றுக்கொண்டு இறைவனின் அருள் உதவியோடு அவருக்காக மட்டும் வாழ வேண்டும்."
''நாம் விண்ணகத் தந்தையின் குழந்தைகள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனாலும் எனக்கு ஒன்று புரியவில்லை.
எனது கேள்வியிலேயே முக்கால்வாசி பதில் இருப்பதாக சொன்னீர்களே, அதுதான் புரியவில்லை.
இறை வசனத்திற்கு விளக்கம் புரியவில்லை என்பதை நீ ஏற்றுக்கொண்டு தானே என்னிடம் விளக்கம் கேட்டாய்.
அதேபோல,
சுயமாக நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை ஏற்றுக் கொண்டுதான் இறைவனின் உதவியை நாட வேண்டும்.
அடிப்படை உண்மை இதுதான்.
தாயின் உதவியோடு குழந்தை வாழ்வது போல,
விண்ணக தந்தையின் உதவியோடு நாம் ஆன்மீக வாழ்வு வாழ்வோம்.
ஒன்றுமே இல்லாத நமக்கு இறைவன் மட்டும் தான் எல்லாம் என்ற நம்பிக்கையோடு வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment