Friday, October 27, 2023

அந்நாட்களில் அவர் செபிக்கும்படி மலைக்குச் சென்று, கடவுளை வேண்டுவதில் இரவெல்லாம் கழித்தார்.(லூக்.6.12)

அந்நாட்களில் அவர் செபிக்கும்படி மலைக்குச் சென்று, கடவுளை வேண்டுவதில் இரவெல்லாம் கழித்தார்.
(லூக்.6.12)

இயேசு என்று சொன்னவுடனே நமது மனதில் ஒரு முக்கியமான தேவ ரகசியம் ஞாபகத்துக்கு வர வேண்டும்.

ஒரே கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார்.

இறைமகன் இரண்டாம் ஆள். ஆள் ஒன்று சுபாவங்கள் இரண்டு, தேவ சுபாவம், மனித சுபாவம்.

கடவுள் ஒருவர் என்பதை ஏற்றுக் கொண்டால்,

"இயேசு செபிக்கும்படி மலைக்குச் சென்று, கடவுளை வேண்டுவதில் இரவெல்லாம் கழித்தார்."

எந்த வசனத்துக்கு எப்படிப் பொருள் கொள்வது?

இயேசு மலைக்குச் சென்று எந்தக் கடவுளை வேண்டினார்?

பரிசுத்த தம திரித்துவத்தைச் சரியான முறையில் புரிந்து கொண்டால் இந்தக் கேள்விக்கு இடம் இல்லை.

கடவுள் ஒருவர்.

அவர் மூன்று ஆட்களாக இருக்கிறார்.

மூவரும் வெவ்வேறு ஆட்கள்.

தந்தை மகனும் அல்ல, பரிசுத்த ஆவியும் அல்ல.

மகன் தந்தையும் அல்ல . பரிசுத்த ஆவியும் அல்ல.

பரிசுத்த ஆவி தந்தையும் அல்ல, மகனும் அல்ல.

ஆனால் மூவரும் ஒரே கடவுள்.

தந்தை மகனைப் பெறுகிறார்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிலவும் அன்பு தான் பரிசுத்த ஆவி.

கடவுள் அன்பு மயமானவர்.

தந்தை அன்புமயமானவர்.
மகன் அன்பு மயமானவர்.
பரிசுத்த ஆவி அன்புமயமானவர்.

மூன்று ஆட்களும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் ஒரே அன்பு தான் ஒரே கடவுள்.

உலகில் கணவன், மனைவி இருவருக்கும் உள்ள ஒரே வேலை ஒருவரை ஒருவர் காதலிப்பது.

அந்த காதலின் விளைவு தான் குடும்பம்.

கடவுள், அதாவது, பரிசுத்த தம திரித்துவம் நித்திய காலமாக செய்து வந்த ஒரே வேலை

 தன்னைத்தானே அளவில்லாத விதமாய் நேசிப்பது, 

அதாவது மூன்று ஆட்களும் ஒருவரை ஒருவர் அளவில்லாத விதமாய் நேசிப்பது.

அந்த நேசம் தான், அதாவது, அன்பு தான் ஒரே கடவுள்.

அன்பே கடவுள்.

கடவுளின் அளவு கடந்த அன்பு தான் மனித இனம் படைக்கப்பட காரணமாக இருந்தது.

தனது அன்பை பகிர்ந்து கொள்வதற்காகவே மனிதனைப் படைத்தார்.

ஜெபம் என்றால் என்ன?

கடவுளோடு அன்பில் இணைந்திருப்பது தான் ஜெபம்.

நாம் கடவுளிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தான் ஜெபம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

அன்பில் இணைந்திருக்கும் போது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமே தவிர,

அன்பில் இணையாமல் விண்ணப்பங்களை மட்டுமே சமர்ப்பித்தால் அது உண்மையான ஜெபம் அல்ல.

நற்கருணைப் பேழையின் முன் அமர்ந்து கொண்டு நற்கருணை நாதரை மனதுக்குள் வரவழைத்து,

 அவரை தியானித்துக் கொண்டிருப்பது ஜெபம்.

கோவிலுக்குப் போக முடியாவிட்டால் எங்கிருந்தாலும் மனதை ஒருநிலைப்படுத்தி மூவொரு தேவனை மனதிற்குள் கொண்டு வந்து அவரைப் பற்றி தியானிப்பது தான் ஜெபம்.

நமக்கு என்ன வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.

ஜெபத்தில் விண்ணப்பங்கள் முக்கியமல்ல.

"அவர் செபிக்கும்படி மலைக்குச் |சென்று,'' என்று வசனம் கூறுகிறது.

மனிதனாய்ப் பிறந்த இயேசு ஒரு தேவ ஆள், (மூவரில் இரண்டாம் ஆள்.)

அவர் ஒவ்வொரு வினாடியும் பரிசுத்த தம திரித்துவத்தில் அன்பில் ஒன்றித்திருக்கிறார்.

பரிசுத்த தம திரித்துவத்தில் அன்பில் ஒன்றித்திருப்பது தான் 
ஜெபம் என்றால் இயேசு வாழ்வது ஜெப வாழ்வு தான்.

உலகில் அவர் வாழ்ந்த 
பொதுவாழ்வின் போது நற்செய்தி அறிவித்தல் நோயாளிகளைக் குணமாக்குதல் போன்ற மற்ற பணிகளையும் செய்தார்.

இரவில் அவர் மலைக்குச் சென்றுத் தனியாகவோ, அல்லது சீடர்களுடனோ தங்கினார்.

நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது இயேசு முழுமையாக மனிதனாக(Fully man) இருந்தாலும்,

அவர் பரிசுத்த 
தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆள், முழுமையாக கடவுள் (Fully God)

 இந்த சந்தர்ப்பத்தில் மற்றொரு மறை உண்மையையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 

துவக்கமும் முடிவும் இல்லாத கடவுள், நமக்காக பிறப்பும் இறப்பும் உள்ள மனிதனாகப் பிறந்தார்.

துன்பப் படவே முடியாத கடவுள் நமக்காக பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தார்.

நாம் அவருடைய மகிமைக்காகவும், நமது அயலானின் நன்மைக்காகவும் எவ்வளவு தியாகங்கள் செய்ய வேண்டும் என்பதற்கு நமக்கு முன் உதாரணமாக இயேசு வாழ்ந்தார்.

இவ்வுலகில் இறைவனோடு இணைந்து ஜெப வாழ்வு வாழ்வோம்.

அதே வாழ்வு மறு உலகிலும் தொடரும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment