"பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை. அருள் இல்லார்க்கு விண்ணுலகு இல்லை." என்று சொல்வார்கள்.
நாம் படைக்கப்பட்டிருப்பது இவ்வுலகில் வாழ்வதற்கு அல்ல, விண்ணுலகில் வாழ்வதற்கு.
தங்களிடம் இவ்வுலகைச் சார்ந்த பொருளோ பணமோ இல்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம்.
வெளிநாட்டுக்கு செல்ல விரும்புகிறவர்கள் தான் தங்களிடம் பாஸ்போர்ட் இருக்கிறதா என்பதை பற்றி யோசிக்க வேண்டும்.
எங்கும் போக விரும்பாதவர்களுக்கு அந்தக் கவலை வேண்டாம்.
விண்ணுலகம் சென்று இறைவனோடு வாழ்வதையே நோக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு இவ்வுலகைச் சார்ந்த பொருளைப் பற்றிய சிந்தனை வேண்டாம்.
இவ்வுலகில் வாழ ஆசைப்படுபவர்கள் மட்டுமே பொருளின் மீது ஆசை வைப்பர்.
இறைவனையே நோக்கமாக கொண்டு வாழ்பவர்களுக்கு அவரது அருள் மட்டுமே போதும்.
தங்களிடம் உள்ள பொருளைக் கூட இறைவனது அருளை ஈட்டவே பயன்படுத்த வேண்டும்.
பொருளைக் கொண்டு அருளை எவ்வாறு ஈட்டுவது?
விண்ணுலக வாழ்வுக்காக நம்மை படைத்த இறைவன் ஏன் இவ்வுலகில் வாழ வைத்தார்?
இவ்வுலகில் வாழ வைத்தது நிரந்தரமாக இங்கே வாழ்வதற்கு அல்ல.
உலக ரீதியாக பார்த்தால் கூட ஒவ்வொரு மாதமும் கஷ்டப்பட்டு உழைத்து மாதக் கடைசியில் சம்பளமாக பணத்தை வாங்குவது பணத்தைச் சாப்பிடுவதற்கு அல்ல.
பணத்தை உடுக்க முடியாது,
உண்ண முடியாது,
பணத்தை விரித்து அதன் மேல் படுத்து உறங்க முடியாது.
ஆனால் பணத்தைக் கொண்டு உடுக்க உடை வாங்கலாம்,.
உண்ண உணவு வாங்கலாம்,
படுக்க பாய் வாங்கலாம்.
அதே பணத்தைக் கொண்டு விண்ணக வாழ்வு வாழ வழி செல்வதற்கு வேண்டிய அருளையும் ஈட்டலாம்.
அருளைப் பெற வேண்டியது இறைவனிடமிருந்து.
இறையன்பு, பிறர் அன்பு இரண்டும் இருந்தால் பணத்தைக் கொண்டு அருளை ஈட்டலாம்.
இறைவனை அன்பு செய்யும்போது அவரால் படைக்கப்பட்ட நமது பிறரையும் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.
பிறனை அன்பு செய்ய வேண்டும் என்று இறைவனே நமக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்.
உள்ளத்தால் அன்பு செய்தால் பற்றாது.
ஆன்மீக வாழ்வின் உயிர் அன்பு தான்.
உயிருள்ள எந்த பிராணியும் இயங்காமல் இருக்காது.
அதேபோல அன்பு என்னும் உயிருள்ள நமது பிறருறவு இயங்க வேண்டுமானால் அன்பு செயலில் வெளிப்பட வேண்டும்.
அன்பு அன்பர்களின் நலனையே
விரும்பும்.
அன்பர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அதற்கு தீர்வு காணவே முயலும்.
அவர்களுக்கு ஏதாவது தேவை என்றால் உதவிக்கரம் நீட்டும்.
நம்மிடம் பிறரன்பு இருக்குமானால், அவர்களுக்கு தேவைகள் ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்வோம்.
உதவி செய்ய நம்மிடம் உள்ள பணம் அல்லது பொருள் பயன்படும்.
பிறருக்கு உதவி செய்வதற்காக நாம் பயன்படுத்தும் பொருள் இறைவனது அருளை நமக்கு ஈட்டித் தரும்.
" சீடன் என்பதற்காக இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்." (மத்.10:42)
பொருளாசை இல்லாதவன் தான் தன்னிடம் உள்ள பொருளை மற்றவர்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்துவான்.
பொருளாசை உள்ளவன் ஈட்டும் பொருள் இவ்வுலகில் அவனுக்கு நிரந்தரமான வாழ்வை தந்து விடாது.
அருளாசை உள்ளவன் ஈட்டும் பொருள் மறு உலக வாழ்வுக்கு வேண்டிய அருளைப் பெற்றுத் தரும்.
நம்மிடம் பொருள் இருந்தால்,
அதை அனுபவிக்க ஆசைப்படாமல்,
இறைவன் தரும் அருளைப் பெற பயன்படுத்துவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment