Tuesday, October 24, 2023

எவனுக்கு அதிகம் அளிக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும்.(லூக்.12:48)

எவனுக்கு அதிகம் அளிக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும்.
(லூக்.12:48)

"தாத்தா, எல்லா மனிதர்களையும் ஒரே கடவுள் தானே படைத்தார். அதுவும் தனது சாயலில் தானே படைத்தார்.

ஆனால் எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே, ஏன்?"

"'மனிதன் இயந்திரங்களைக் கொண்டு உண்டாக்கும் பொருள்கள் ஒரே மாதிரியாக இருக்கும்.

அவை ஒரே மாதிரியாக இருக்கும் படிதான் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் கடவுள் இயந்திரம் அல்ல.

அளவில்லாத வல்லமையும், ஞானமும், சுதந்திரமும் உள்ளவர்.

அடிப்படைக் குணங்களில் மனிதன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருந்தாலும்,

ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமான அளவுள்ள திறமைகளோடு படைக்கப்பட்டிருக்கிறான்.

எல்லோராலும் பேச முடியும். ஆனால் பேச்சாற்றலின் அளவு வித்தியாசமாக இருக்கும்.

 திறமைகள் கொடுக்கப் பட்டிருப்பது அவற்றைப் பயன்படுத்துவதற்கே.

பயன்படுத்தும் தன்மையைப் பொறுத்து அவர்கள் திறமைசாலிகளாகவோ,

திறமை குறைந்தவர்களாகவோ,

 நல்லவர்களாகவோ அல்லது கெட்டவர்களாகவோ கருதப்படுவர்.

ஒரு பெரிய கூட்டத்தை தனது பேச்சாற்றலால் தன் பக்கம் திருப்புபவன் சிறந்த பேச்சாளன்.

நல்ல காரியத்துக்காகத் திருப்புவன் நல்லவன்.

மோசமான காரியத்துக்காகத் திருப்புபவன் கெட்டவன்.

புனித அந்தோனியார் இளமையில் பேச்சாற்றல் மிக்கவர்.

அவர் தன் பேச்சாற்றலை நற்செய்தி மணிக்குப் பயன்படுத்தி லட்சக்கணக்கான பேரை ஆண்டவர் பால் கொண்டு வந்தார்.

அவருடைய பேச்சாற்றல் லட்சக்கணக்கான பேரை மோட்ச பேரின்ப வீட்டுக்கு அழைத்துச் சென்றது.

ஆகவே அவர் புனிதர்.


மார்ட்டின் லூத்தரும் பேச்சாற்றல் மிக்கவர் தான்.

ஆனால் அவருடைய ஆற்றல் அநேகரை கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து பிரித்துச் சென்று விட்டது.

புனித அந்தோனியார் தன் திறமையை ஆண்டவருக்காகப் பயன்படுத்தினார்.

லூத்தர் தன் திறமையை 
ஆண்டவருக்கு எதிராகப் பயன்படுத்தினார்.

எழுத்தாற்றல் மிக்க மோயீசன் இறைவன் தனக்கு அறிவித்த செய்தியைப் புத்தகங்களாக எழுதி உலகத்தாருக்கு அறிவித்தார்.

அதேபோல் தான் பைபிளின் இதர புத்தகங்களை எழுதியவர்களும்.

நாம் வாசிக்கும் அனைத்து ஞான வாசகப் புத்தகங்களும் எழுத்தாற்றல் மிக்கவர்களால்தான் எழுதப்பட்டன.

இறைச் செய்திக்கு எதிரான புத்தகங்கள் எழுதி சாத்தானின் பணியாளர்களாகச் செயல்படுபவர்களும் இருக்கிறார்கள்.

தங்களது பணம் ஈட்டும் திறமையை நேர்மையாகப் பயன்படுத்தி 

ஈட்டிய பணத்தைக் கொண்டு பிறர் சிநேக உதவிகளைச் செய்து வருபவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

பாவ வாழ்க்கை வாழ்வதற்காக மட்டும் தங்களது பணம் ஈட்டும் திறமையைப் பயன்படுத்துவர்களும் இருக்கிறார்கள்.

அதிகமான திறமை உள்ளவர்களிடமிருந்து இறைப்பணியில் அதிகமான செயல்பாட்டை இறைவன் எதிர்பார்க்கிறார்.

இறைவன் நமக்கு அளித்திருக்கும் திறமைகளை நம்மால் இயன்ற மட்டும் இறைப்பணியில் நாம் பயன்படுத்த வேண்டும்.

திறமைகளின் அளவு மாறுபடலாமே தவிர திறமைகளே இல்லாதவர்களே கிடையாது.

தங்களுக்கு எந்த அளவு திறமை இருந்தாலும் அதை ஆண்டவருக்காக நாம் பயன்படுத்த வேண்டும்.

நமக்கு அளிக்கப்பட்ட திறமைகளின் அடிப்படையில் நம்மிடம் இறுதி நாளில் கணக்குக் கேட்கப்படும்.

ஆகவே நமது திறமைகள் அனைத்தையும் முழுமையாக இறைவனுக்காகப் பயன்படுத்துவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment