(லூக்.10:16)
இயேசுவால் நற்செய்தி அறிவிப்புக்காக அனுப்பப்பட்ட 72 சீடர்களுக்கு கூறப்பட்ட இவ்வார்த்தைகள்
அக்காலத்துக்கு மட்டுமல்ல இக்காலத்திற்கும், எக்காகத்திற்கும் பொருந்தும்.
அப்போஸ்தலர்கள் மீது பரிசுத்த ஆவி இறங்கி வந்த பெந்தேகோஸ்தே கோஸ்தே திருநாளன்று கத்தோலிக்க திருச்சபை இயங்க ஆரம்பித்தது.
அப்போஸ்தலர்கள் நற்செய்தியைப் போதிக்க ஆரம்பித்தார்கள்.
பரிசுத்த ஆவியின் வல்லமையால் நற்செய்தியைக் கேட்ட அனைவரும் மனம் திரும்பி கத்தோலிக்க திருச்சபையில் சேர்ந்தார்கள்.
திருச்சபை வளர ஆரம்பித்தது.
அப்போஸ்தலர்கள் தங்கள் காலத்திற்குப் பின்னால் தொடர்ந்து நற்செய்தியை அறிவிக்க ஆயர்களையும் குருக்களையும் நியமித்தார்கள்.
அப்போஸ்தலர்கள் ரோமை மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியின் போது வேத சாட்சிகளாக மரித்தபின் அவர்கள்
அவர்களால் திருநிலைப் படுத்தப்பட்ட ஆயர்களும் குருக்களும் உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிக்கும் பணியைத் தொடர்ந்தார்கள்.
இன்று நம்மிடையே பணி புரிந்து கொண்டிருக்கும் பாப்பரசரும், ஆயர்களும், குருக்களும் அப்போஸ்தவர்களின் வாரிசுகள்.
அதாவது இயேசுவால் நியமிக்கப்பட்ட நற்செய்திப் பணியாளர்கள்.
அன்று அப்போஸ்தலர்களுக்கு இருந்த அத்தனை அதிகாரங்களும் இவர்களுக்கு உண்டு.
இவர்களது முக்கியமான பணிகள்
நற்செய்தியைப் போதித்தல்,
நமது பாவங்களை மன்னித்தல்,
திருப்பலி நிறைவேற்றுதல்,
தேவத் திரவிய அனுமானங்களை நிறைவேற்றுதல்,
நமக்கு ஆன்மீக வழி காட்டுதல் ஆகும்.
இவர்கள் இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தின் மூலம் நமது பாவங்களை மன்னிக்கிறார்கள்.
திருப்பலியின் போது இயேசு இவர்களுக்கு கொடுத்திருக்கும் வல்லமையால்
அப்பமும் ரசமும் இயேசுவின் திரு உடலாகவும், திரு ரத்தமாகவும் மாறுகின்றன.
நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தின் மூலமும்,
திருப்பலியின் மூலம் தேவ நற்கருணையை ஏற்படுத்தும் அதிகாரத்தின் மூலமும்,
நற்செய்தியைப் போதிக்கும் அதிகாரத்தின் மூலமும்
இவர்கள் இயேசுவின் நேரடிப் பிரதிநிதிகள்.
பாவ சங்கீர்த்தனத்தில்,
" நான் உன் பாவங்களை மன்னிக்கிறேன்."
என்ற வார்த்தைகளும்,
திருப்பலியில்,
"இது என் சரீரம்"
"இது என் ரத்தம்"
என்று அவர்கள் கூறும் வார்த்தைகளும் இதை விளக்கும்.
இயேசுவின் பிரதிநிதிகளுக்கு செவி கொடுக்கிறவன் இயேசுவுக்கு செவி கொடுக்கிறான்.
இயேசுவின் பிரதிநிதிகளை எதிர்ப்பவன் இயேசுவை எதிர்க்கிறான்.
"உங்களுக்குச் செவிசாய்ப்பவன் எனக்குச் செவிசாய்க்கிறான். உங்களைப் புறக்கணிப்பவன் என்னைப் புறக்கணிக்கிறான்."
என்ற இயேசுவின் வார்த்தைகள் இதற்கு ஆதாரம்.
இயேசுவின் பிரதிநிதிகள் தான் விண்ணக பயணத்தில் நமது ஆன்மீக வழிகாட்டிகள்.
அவர்கள் வழி நடத்தும் ஆன்மீகப் பாதை வழியே நடப்பவர்கள் விண்ணகத்திற்குள் நுழைவது நிச்சயம்.
நம்மை பொருத்தமட்டில் நமது பங்குக் குருவானவர் தான் நமது ஆன்மீக வழிகாட்டி.
பங்குக் குருவானவரின் சொற்படி நடப்பவன் இயேசுவின் சொற்படி நடக்கிறான்.
பங்குக் குருவுக்கு எதிராக பங்கு மக்களைத் தூண்டி விடுபவன் இயேசுவுக்கு எதிராக மக்களை தூண்டி விடுகிறான்.
இது விஷயத்தில் நமது நிலை என்ன என்பதை நாமே கண்டுபிடிக்க
பின்வரும் கேள்விகளுக்கு மனசாட்சியின்படி அதில் கூறுவோம்.
சாவான பாவத்தில் விழ நேரும்போதெல்லாம் பாவ சங்கீர்த்தனம் செய்கிறோமா?
சாவான பாவம் இல்லாத,
பரிசுத்தமான நிலையோடு திவ்ய நற்கருணை உட்கொள்ளுகிறோமா?
திருப்பலியின் போது குருவானவரின் பிரசங்கத்தைக் கூர்ந்து கவனித்து அவரது புத்திமதிகளின் படி நடக்கிறோமா?
ஆன்மீக காரியங்களில் சந்தேகங்கள் ஏற்படும் போதெல்லாம் குருவானவர் மூலம் அவற்றை நிவர்த்தி செய்கிறோமா?
பங்கு மக்கள் ஒற்றுமையாக வாழ நம்மால் இயன்றதைச் செய்கிறோமா?
திரும்பவும் ஞாபகப்படுத்துகிறேன்.
இயேசுவின் பிரதிநிதிகளுக்குச் செவிசாய்ப்பவன் இயேசுவுக்குச் செவிசாய்க்கிறான்.
இயேசுவின் பிரதிநிதிகளைப் புறக்கணிப்பவன் இயேசுவைப் புறக்கணிக்கிறான்.
நமது பங்குக் குரு இயேசுவின் பிரதிநிதி.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment